போன வியாழக்கிழமையன்னிக்கு, புகையிலை இல்லா தினமாம். அன்னிக்கு கிடைக்காதுன்னு மொதநாளே ரொம்பப்பேரு மொத்தமா சுருட்டெல்லாம் வாங்கிவச்சப்பொறம்தான் தெரிஞ்சிச்சாம், எல்லாம் நல்லாத்தேன் கெடச்சுச்சுன்னு – ரேடியோலயே சொன்னாஹல்ல? எங்க நானாவும் அன்னிக்கு வெள்ளச் சுருட்டு கெடைக்காம , அலை அலைன்னு (மொத்தம்ஒரு கடைதான்) அலஞ்சும் கிடைக்கலியாம். திரும்பி வந்தா, பக்கத்துல இருந்த பத்து கடைலயும் இருந்துச்சாம். அன்னிக்கு பூராவும் ஒரே டிப்ஸ்/ யோசனைகள் தான்: எப்டி நிறுத்துறதுன்னு.
அதுல ஒரு டிப்ஸ் எனக்கும் ரொம்பப் புடிச்சிருந்துச்சு. சொன்னவரு ஒரு முனைவர் பட்டமோ மருத்துவ பட்டமோ வாங்குன ஒரு மலையாளி ஆராய்ச்சியாளர். அதாவது புகைக்கணும்னு தோணும்போதெல்லாம் ஒரு குறுமிளகை வாய்ல போட்டு மென்னா சிகரெட் நினைப்பு வராதுன்னார்.
இதை ஒரு நண்பர்ட்ட சொன்னபோது அவர் சொன்னது: இதை ஏற்கனவே முயற்சி பண்ணிப்பாத்தேன். அந்தக் கருமத்துக்கு இந்தக் கருமமே பரவால்லன்னு இருந்துட்டேன்னு கையில பொகஞ்ச சிகரெட்டக் காமிச்சார்.
சரி இவரு போறாருன்னு நேரா நான் போனது நெறய சிகரட் (ஒரு நாளக்கி ஒரு முழு சிகரெட்) குடிக்கும் எங்க நானாகிட்ட; மூச்சு வாங்க வாங்க ரொம்ப ஆர்வமா இந்த யோசனைய சொன்னேன். அவரும் கவுத்துட்டார். எனக்கும் இந்த ஐடியா ஏற்கனவே தெரியும்னு சொல்லி. அதோட விடலை அவர். இது ரொம்ப நல்ல மெத்தேட்னு ஒரு சர்டிபிகேட் வேற குடுத்தார். எனக்கு ரொம்பக் குழப்பமாயிருச்சு. அவர்ட்ட அந்த இன்னோரு நண்பர் சொன்னதச் சொன்னேன். அதுக்கு அவர் பாவம் நெசம்மாவே இது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல்ல்ல்ல்ல யோசனையாக்கும்னு சொன்னார்.
எனக்கு ரொம்பக் கொழம்பவும், அப்பறம் நீங்க ஏன் இன்னமும் சிகரெட் குடிக்கிறீங்கன்னு கேட்டேன்; அதுக்கு அவர் சொன்னார்:
“அந்த யோசனை சிகரெட் குடிக்கிறத விடணும்னு நெனைக்கிறவங்களுக்குத்தான் நல்ல யோசனை”
ஹ்ம்ம் இதுக்கு என் யோசனை யே பரவால்லயே!!