நூர் ஷா – சையத் பஹ்ருதீன்

syed

ஆபிதீன் பக்கங்களில் தாஜ் கதைக்கு தங்கிலீஸில் பின்னூட்டம் போட்ட என் தம்பி சையதுக்கு ஈ-கலப்பையை அறிமுகம் பண்ணினேன்; பதிலுக்கு அவர் நூர்ஷாவை எனக்கு மறுஅறிமுகம் பண்ணிருக்கார்.

நூர் ஷா என்கிற ஆங்கில “மா மேதை”

கருந்தோல் என்ற ஒருவார்த்தையை எழுதும்போது ”ரு”வா ’று’வா ன்னு தோன்றிய திடீர் சந்தேகத்தை தீர்த்துக்குவோம்ன்னு என் “உண்மைத் தோட்ட பங்காளி” (real estate partner) யான மைக்கேலுக்கு ஃபோன் செய்து கேட்டேன். அவரோ “எனக்கு கஞ்சா கருப்பு, காத்துக் கருப்பு தெரியும், ஆனா கருப்புக்கு எந்த ‘ரு’ வரும்னு தெரியாது” ன்னு கை விரிச்சுட்டார்.

எங்க பெரியண்ணனின் நண்பர் கண்ணனிடம் கேட்டேன். அவர் அரிசி ஆலை உரிமையாளர். அவரோ ‘எனக்கு ஈக்கருப்பு 1 தெரியும் தெரியும்; உச்சிக்கருப்பு 2 தெரியும் ஆனா எந்த ” ரு’ன்னு தெரியாதுன்னார்….. என்னடா வம்பாப் போச்சு பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்த்து வச்ச சிவபெருமான்ட்ட தான் இனி கேக்கனும் போல ன்னு நெனச்சுகிட்டே., “ரு”போட்டு எழுதிட்டேன். ஒரு shift key pressing ம் மிச்சம் பாருங்க…

இப்பிடியே கேட்டுகிட்டு இருந்தா google search ல டைப் அடிச்சவுடனே கிடைக்கிற ரிசல்ட் மாதிரி 123,456,789 கருப்புகள் கிடைத்தாலும் கிடைக்குனு பயம் வேற.

ஆனா உண்மைத்தோட்டம்னு தமிழாக்கம் எழுதியபோது எனக்கு ‘நூர் ஷா’ ஞாபகம் வந்தது….அவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆங்கில ஆக்கங்களில் பெர்னாட் ஷாவுக்கு அடுத்து எனக்கு இந்த நூர்ஷா ஆக்கங்களின் நினைப்புதான் வரும்.

90 களில் சவூதியில் என்னுடன் வேலை பார்த்தவர்தான் இந்த நூர் ஷா….

நாங்கள் அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து 2 மாதம் இருக்கும். நாங்கள் என்றால் சரியாக 41 தமிழ்நாட்டு ஆட்கள்; “கிடைப்பதில்” பங்கு கிடைக்காத மற்ற தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர் “அலிபாபாவும் 40 திருடர்களும்”. எங்கள் தலைவர் ( சீனியர் மோஸ்ட்) அலிபாபா என்கிற மொஹிதீன்பாய்; Driver cum Salesman; தென்காசிக்காரர். இனிமேல் பாபா என்றே விளம்பப்படுவார்.

ஒரு நாள் பாபா “ஏர்ப்போர்ட் போறேன் வர்றியா”ன்னார். நான் அடிக்கடி இந்த மாதிரி அவருடன் போவேன். யார் பாய் வர்றதுன் னேன். ஒரு ஆள் வருது ஆந்திராவில் இருந்து; நீ வர்றியா வல்லையா ன்னு கட்டன்ரைட்டா கேட்டார். வர்றேன்னுட்டு கிளம்பினேன்..

ஆளைக்கண்டு பிடிச்சு ஒரு வழியா வண்டியில் ஏற்றினோம். நல்ல சிவப்பா, ஆஜானுபாகுவா, கொழுகொழுன்னு இருந்தார் நூர் ஷா. ஆந்திராக்காரனிடம் என்ன மொழியில் பேசுவது? புது ஆள் வேறு சவூதிக்கு. இல்லாவிட்டால் கூட நம் தமிழ் ஆட்கள் வட இந்தியர்களிடமும் பாகிஸ்தானியர்களிடமும் பேசுவது போல் கச்சாஅரபியில் பேசலாம்.

பாபாவுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆகவே “என்ன பாஷை தெரியும்னு கேளு”ன்னார். அவர் சொன்ன பதிலில் இருந்து தெலுங்கு, உருது தெரியும்னு தெரிஞ்சது… என்ன செய்ய.?எங்களுக்கு அந்த 2 ம் தெரியாது. (பின்னால் துபாயில்தான் இந்தி கற்றுக் கொண்டேன்)

அடுத்து, ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னார். அவர்ட்ட பேச ஆங்கிலத்தை பயன்படுத்துவோம்னு முடிவு செஞ்சேன்; ஆனால் ஒழுங்கான ஆங்கிலத்தில் பேசினால் அவருக்குப் புரியாதுன்னு 2 நிமிஷத்திலேயே எனக்கு புரிஞ்சு, அவர் இங்லிஷ்லேயே நானும் பேசனுங்கிற முடிவிலேயே மெதுவாகப் பேச்சுக்குடுக்க ஆரம்பிச்சேன்.

போட்ட என்கொயரில அவர் நெல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்தது தெரிஞ்சது. ஏர்போர்ட் ரோடு ல பதிச்சிருந்த மின்னும் கற்களைப் பார்த்து “this what bhai?”ன்னார் நூர்ஷா. நம்ம ட்ரேட்மார்க் குசும்போடு, எல்லாப் புது ஆளுங்க கிட்டேயும் வழக்கமா சொல்ற பதில சொன்னேன். “This all Gold. Here Saudi no value gold ” ன்னேன்.
இதக் கேட்டவுடன் அவர் முகம் ப்ரகாசமடஞ்சதை அந்த இருட்டிலும் என்னால பார்க்க முடிஞ்சுச்சு…. This gold- india take -go time -airport problem? –ன்னு கேட்டார் நூர் ஷா…

நான் ஒரு நிமிஷம் யோசிச்சு “madras airport no ask, Andhra airport don’t know”ன்னேன்.
I go madras flight – after nellore train ன்னார்.

அவர் பேச்சை ஓரளவு புரிஞ்சுகிட்ட நம்ம பாபா, “ஆஹா போற போக்கைப் பார்ததால் இவன் இன்னக்கி ராத்திரி எல்லாரும் தூங்கினதும் ரோட்டுக்கு வந்து பேத்து எடுத்துர்வான் போலயே ” ன்னார்.

கொஞ்ச நேரம் அமைதி.. எங்க வில்லா வும் வந்திருச்சு….

எந்த ரூமல படுக்கப்போறான்னு நான் கேட்டதுக்கு பாபா, நம்ம ரூம்லதான்னு கஞ்சடி3 சொல்லிருக்கான்னார். அப்போ மணி நைட் 10 இருக்கும். எங்க ரூமில் நான், பாபா, ரியாஸ் (உருதும் பேசும் தமிழர்) ; இப்ப நூர் ஷா வும் சேர்த்து 4 பேர். பிரச்சினை இல்ல. ரூம் ரொம்ம்ம்ப பெருசு.

பாபா ஒன்றும் பேசாமல் இருக்க ரியாஸிடம் சொன்னேன், உர்துல பேசுங்க இவர்ட்டன்னு. அவரும் என்னவோ பேசினார். .நூர் ஷாவும் பதில் சொல்ல, எங்களுக்கோ காக்கற மூக்கறங்க மாதிரி கேட்டுச்சு. இடையிடையே ஹைஹை சவுண்ட் வேற. சாப்பிட உட்கார்ந்தோம்…
இதுக்கப்புறம் என்னாச்சுன்னு தெரியல, ரியாஸ் நூர்ஷா விடம் பேசுவது நின்று போனது. நூர்ஷாவே பேசினாலும் பதில் சொல்வதைத் தவிர்த்தார் ரியாஸ்.

அப்போதுல இருந்து நூர்ஷா என்கிட்டதான் அதிகம் பேச்சு, வார்த்தை எல்லாமே.

வந்த புதிதில் western toilet ஐ காட்டி கேட்டார்: bhai how sitting here leg down or up?
நான் சொன்னேன்: sitting leg up down no important ,shitting very important.
புரியாத மாதிரி பார்த்து no problem adjustment…என்றார்..
இப்ப அவர் சொன்னது எனக்கே புரியலை. எப்படி ‘இருந்துருப்பாரோ’ தெரியல.

நூர் ஷா வந்த சில நாட்களில் ஒரு இரவு எல்லோரும் விசிஆரில் படம்பார்த்துக் கொண்டிருந்தோம். தமிழ் தெரியாட்டியும் எங்களோட படம் பார்ப்பார். ரொம்பவும் அடி வாங்கிய கேசட் அது. மழை பெய்யும் ப்ரிண்ட்ன்னு சொல்வோம்ல அது. படமோ மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது! அப்பொழுது ரியாஸ் சொன்னார்: எவனோ கால் கட்டை விரலை வெளியே காட்றான்….அதான் படம் இப்படி தெரியுது

நூர் ஷா தமிழ் புரியாம என்கிட்ட “this man what tell bhai? ன்னு கேட்டார் நான் சொன்னேன்:
one man leg finger outside dress, picture shaking tv. அடுத்த நொடி தன் காலை வேகமா கைலிக்குள் நுழைத்துக்கொண்டார் .

அவருடைய வேலை ஒரு ரெஸ்ட்டரெண்ட்ல ஆடு உறிப்பது. பட்லர் இங்கிலீஸ் கேள்விப்பட்ட எனக்கு பட்சர் இங்கிலீசும் அத்துபடியானதால, நூர் ஷா வின் அறிவிக்கபடாத ஆஸ்தான English Translator ஆயிட்டேன்.

நாலு பேருக்கும் ஒரே டாய்லெட்; ஒரே நேரத்தில் டூட்டி. ஒரே வண்டி, ஒரே ட்ரைவர் (நம்ம பாபா தான்). நாங்க 3 பேரும் ஒரு ஆளுக்கு ஒதுக்கப்பட்ட 15 நிமிஸத்தில போறது, கழுவுறது, பல்லு விலக்குறது, குளிக்கிறதுன்னு அரக்கப் பரக்க எல்லாத்தையும் ஏக காலத்தில செஞ்சுட்டு வெளியே வந்தா….. நூர் ஷா அமைதியா சட்டையும் பாண்ட்டையும் மாற்றிக் கொண்டிருப்பார்…..
அவரைப் பொறுத்தவரை காலைக் கடன்கள் என்பது வேலைக்கு கிளம்புவதும் சட்டை பாண்ட் மாட்டுவதோடு முடிந்தது. பொறாமையோடு பார்ப்பேன் அவரை இந்த விஷயத்தில்.

மூன்றரை வருடங்களில் மொத்தம் ஒரு 50 தடவைதான் குளித்துப் பார்திருப்பேன். நான் கேட்டதற்கு All Prayer wash OK ன்னார். அதாவது, அதான் ஒது செய்கிறோமே எல்லாத் தொழுகைக்கும்கிறார். அவர் ஏர்போர்ட்ல எங்க வண்டில ஏறி உக்காந்ததும் வீசுன கொச்சை நாற்றத்தின் காரணம் எனக்கு இப்ப புரிஞ்சது. சவூதி சட்டப்படி – நம்ம மக்கள் வச்சது தான் – எல்லாரும் வெள்ளிக்கிழமைகளில் டாய்லட்டையும் கிச்சனையும் முறை வைத்து கழுவனுமே….

அந்த வாரம் நூர் ஷா முறை. எல்லாரும் சாப்பிட்டு படம் பார்த்து முடித்து தூங்க லைட்டை அமத்திட்டுப் படுத்துட்டோம்.

அரைமணி நேரம் ஆகிருக்கும். நூர் ஷா மெதுவா ரூமுக்குள்ள வந்து, தூங்கிக்கொண்டிருந்த என்னை மெதுவாக எழுப்பினார். நான் மிக அருகில் வந்த “அந்த” வாசனையை வைத்து அது நூர் ஷா ங்கிறதை அந்த தூக்கத்திலயும் கண்டு பிடிச்சு, What ன்னேன்..நூர் ஷா கேட்டார்: “பாய், Brush என்ன?”

நான் கற்பூரமா மாறி சொன்னேன்: “kitchen door back side” . கொஞ்ச காலமாவே நூர் ஷா தம்ழில் பேச முயற்சி செய்றதோட விளைவு தான் அவர் கேட்ட கேள்வி. எங்கே என்பதைத்தான் என்ன என்று கேட்டிருந்தார். இந்த சின்ன சத்ததிலயும் முழிச்சிக்கிட்ட பாபா – என்ன கவலையோ அந்த மனுஷனுக்கு; தூக்கம் சரிவர வரலை போல – கேட்டார்: “என்ன கேக்குதான் எழவெடுத்த மூதி?”

க்ளீன் பன்ற Broom எங்க இருக்குன்னு கேட்டார்ன்னேன். அது என்னவோ உனக்கு மட்டும் தான்பா புரியுது அவன் பேசுற இங்கிலீசுன்னு சொல்லி அலுத்துக்கிட்டு, திரும்பவும் தூங்க ஆரம்பிச்சார், டிஸ்டர்ப் ஆனதில் கடுப்பாகிய பாபா.

ஒருநாள் வில்லாவில் மத்தியான நேரத்தில எங்க ரூமிற்கு பக்கத்துல, தாய்லாந்து காரர்களின் ரூமிற்கு எதிரே மாடிப்படியில் உக்கார்ந்திருந்த (மத்தியான நேரத்தில் தூங்க மாட்டார் நூர் ஷா) ஒன்னுக்கு அடிக்க வந்த என்னிடம் அந்த ரூமில் இருந்து வந்த 2 பூனைகளைக் காட்டி கேட்டார்:
Inside room go time 3 cat go, outside come time 2 cat come. Why Bhai? One cat where?
(3 போனதுல 2 வந்திருச்சி 1 எங்கே?)
நான் சைகையிலே வயிறைத்தட்டி காண்பித்து, Inside Thailandhi ன்னேன்…ஆச்சரியத்தோட கேட்டார்: This cat man eat? No problem? (இதெல்லாம் மனுசங்க திங்கிற பூனையா?)

நான் சொன்னேன்: All Thailandhi eat cat only and all Philipinney eat dog only. No other mutton. அப்படியே நம்பிட்டார் மனுஷன்….ஆனா இந்த வெகுளிதான் மட்டன் சுடுவதில் கில்லாடியா இருந்து, ‘எங்க மெஸ் வயித்தில’ அடிக்கடி கறி வார்த்தவர்

இப்படியாக என் translation பிரசித்திபெற்று பிரகாசித்தபோதுதான் “அது” நடந்தது.

ரெஸ்டாரெண்ட்ல இருந்து இறைச்சி எடுத்துக் கொண்டு வருவதை – யாருக்கும் தெரியாமல்தான் – நம் தமிழ் மக்கள் அனைவரும் செவ்வனே செய்துகொண்டு இருந்த நேரம். அப்போது சரியா சமைக்காத காரணத்துக்காக ‘எங்க மெஸ்’ல இருந்து நீக்கப்பட்ட ஒரு ராம்நாட் பையன் கடுப்பாகி, பழிதீர்ப்பதாக நினைத்து, சூப்பர் வைசரிடம் ”கறி” மேட்டரை போட்டுக்குடுக்க, அந்த சூடானி சூப்பர் வைசர் அரபியிடம் பத்த வச்சுட்டான்.

அந்த இறைச்சி அறையின் incharge ஆன நூர் ஷா விடம் விசாரிக்க வந்தான் அரபி. ஏற்கனவெ வேலையில் சேர்ந்த நேரத்தில் நூர் ஷா வின் ஆங்கிலத்தால் படாதபாடு பட்டுப்போன
அரபி என்னையும் – முன்னெச்சரிக்கை!! – பக்கத்தில் வைத்துக்கொண்டு விசாரிக்கத் தொடங்கினான். எங்க அரபி நல்லா இங்க்லீஸ் பேசுவான், ஆனா நூர் ஷாவிற்கு கேள்வியை புரிய வைக்கனும். அடுத்து நூர்ஷாவின் பதிலை அரபி புரிஞ்சுக்கனுமே? இதுக்காகத்தான் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டான் அரபி.

இப்ப அரபிக்கும் நூர்ஷா வுக்கும் English to நூர்ஷாங்கிலிஸ் Translator ஆகவும், Vice versa வாகவும் ஆயிட்டேன் நான்.
யாரெல்லாம் இங்கே இருந்து இறைச்சி எடுத்துட்டு போனது? – இது அரபி
who take mutton here you know? இது நூர்ஷா விடம் நான்
Front I no see, Back I don’t know – நூர்ஷா வின் பதில்

அரபி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி திருதிருன்னு முழிக்க, நான் விளக்கம் சொன்னேன்:

He is saying that he had not seen anybody taking meat until now.
And he is also saying that he won’t be responsible for these things hereafter.
தமிழ்ல சொல்லனும்னா, இதுவரைக்கும் வேற யாரும் எடுத்து நான் பாத்ததில்லை
இனிமே யாரும் எடுத்தா எனக்குத் தெரியாது (சொல்லிபுட்டேன் ஆமா
🙂 )

இந்த என் விளக்கத்தை கேட்டவுடன் அரபி வியந்து சொன்னான்:
What a short English he is talking!! Mashaa Allah !!!

எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு 50 ரியால் ஃபைன்னு சொல்லிட்டு போனான் அரபி.
வேற என்ன எழவைச் செய்யுறது? கழுத்தை (இல்ல வேற எதையாச்சும்) அறுத்தாக்கூட
ஒரு பயபுள்ளயும் உண்மையைச் சொல்லாதுகன்னு நெனச்சிருப்பான் அரபி.

போட்டுக்குடுத்த பயலுக்கும் சேத்து ஆப்பு வச்சுட்டான் மாப்பு.

இதன் பிறகு நூர்ஷா பொறுப்பு ஏற்காத காரணத்தாலும், ஒரு செக்கியூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாலும் நாங்கள் இறைச்சி எடுப்பது குறைந்துவிட்டது. (!)

நல்லா கவனிக்கனும்… குறைந்தது. ஆனால் முற்றிலும் தடுக்க முடியவில்லை அந்த செக்கியூரிட்டியாலும்கூட.. காரணம் வேலியே …..பயிரை……….
நூர் ஷா மூலமாகவே தொடர்ந்தது ”கறி சுடும்” பணி .
எப்படின்னா,
அவர் கறி வெட்டும்போது யூஸ் பன்ற துணியை தினமும் ஒருபையில் போட்டு வில்லாவுக்கு எடுத்துப்போவார். வாஷ் பண்ணவாம். .அந்தப் பையை குறி வைத்து செயலாற்றியது நம்ம பாபா மூளை. இவ்வளவு ப்ரச்னையிலும் என்ன ஒரு துணிச்சல் பாருங்க? இந்த மாதிரியான நூதன முறைகள் எங்க வட்டாரத்தில் புழங்குறதை எழுத ஆரம்பிச்சா தாங்கவே தாங்காது துனியா…….

நூர் ஷா முதன்முதலாக சமைக்க ஆரம்பித்தபோது நான்தான் எப்படி சமைக்கனும்னு அவர்ட்ட சொன்னேன். ஒக்கே ன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சார். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அவர்ட்ட, ஏதாவது சந்தேகம்னா கேளுங்கன்னு.

கேட்டார் : Rice cooking time salt before put, after put, any problem?
ஆஹா front back லிருந்து before afterக்கு மாறிட்டார் நம்ம நூர்ஷான்னு புளகாங்கிதம் எனக்கு.

அதாவது என்ன கேக்கிறார்னா சோறு சமைக்கும்போது உப்பை ஆரம்பத்தில் போட்டாலும் கடைசியில போட்டாலும் ஒன்னும் பிரச்னை இல்லைல? ன்னு. பல் துலக்குறதுல பிஸியா இருந்த நானும் ஒன்னும் பிரச்னை இல்லைனு சொல்லிட்டேன்..

மத்தியானம் சாப்பிட ஆரம்பித்த போது தான் தெரிந்தது, வாயில் வைக்கமுடியாத அளவு உப்பு இருந்தது சோற்றில். எல்லா சோத்தையும் குப்பையிலே கொட்டினோம். “.உப்பிருந்த பண்டமும் குப்பையிலே” ன்னு ஆயிருச்சு !

அவரோ முதல்ல கொஞ்சம் உப்பு போட்டிருக்கார், பத்தாதுன்னு சோறு வெந்தவுடன் செக்பண்ணிட்டு, After போடலாமான்னு கேட்டிருக்கார் – அதாவது வெந்தவுடன், வடிப்பதற்கு முன் – அந்த 2வது தடவை கொஞசம்(?) அதிகம் போட்டுட்டார்.

ஆக, பல்துலக்குவதில் பிஸியாயிருந்த யானைக்கும் அடி சறுக்கியது. இது நடந்து முடிஞ்சதும் பாபா மத்தியான சோறு சாப்பிட முடியாத கடுப்பில், நூர்ஷாவை மெஸ்ஸை விட்டு தூக்கிருவோம்னு அதிரடியா அறிவிச்சு, போனஸா, யாரு சப்போர்ட் பண்ணுதான்னு பார்ப்போம்ன்னும் சொல்லி என் பக்கம் பார்த்தார்.

நானும் “விடுங்க பாய் முத தடவைதானே மாலிஷ் ….இனி இப்படி நடக்காது” ன்னேன்.
“சரி லாஸ்ட் வார்னிங்” ன்னு நூர்ஷாவுக்கும் புரிகிற மாதிரி சொல்லிட்டு விட்டு விட்டார் மேட்டரை. நம்ம ட்ரான்ஸ்லேசன் ப்ராப்லம் வெளியேவல்லைன்னு எனக்கும் சந்தோசம்

ஒருநாள் நல்லமூடில் பாபா இருந்தபோது நூர்ஷாவிடம் கேட்டார்: No Go India? 3 years finish?
நான் மெய் சிலிர்த்து போனேன் பாபாவும் நூர்ஷா ங்கிலீஷ்ல தேறிட்டாரேன்னு.
After little money come go India after no come here என்றார் நூர்ஷா.
(அதாவது, இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு போவேன் ஆனால் திரும்பி வர மாட்டேன்)
What Do India? இது பாபா. இப்ப புடிச்சுச்சு சனி அவருக்கு.

இரண்டு ஆள்காட்டி விரல்களையும் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு “ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ” என்று கத்திவிட்டு ”சொய்ங் சொய்ங்”ன்னு சத்தம் போட்டுட்டு கினற்றில் இருந்து தண்ணீர் இரைப்பது போல் கையால் சைகை காமிச்சு ”Sales” ன்னார் நூர்ஷா.

பாபா மிரண்டு போய் என்னக்கூப்பிட்டு “இவன் என்ன சொல்லுதான்னு கேட்டுச் சொல்லு”ன்னார்.
மாடு வாங்கி பால் வியாபாரம் செய்யப்போவதாகச் சொல்றார்னு நான் சொன்னேன். (நூர்ஷா விற்கு மாட்டிற்கு இங்கிலீஷில் என்னன்னு தெரியலை!!) அத்தோட நான் விட்ருக்கலாம். என் நாக்குலயும் சனி. பாபாட்ட நான் “என் அளவுக்கு உங்களால விளங்க முடியலையே” ன்னு கொஞ்சம் தற்பெருமையோடு சொல்ல, அவரோ, கொஞ்சம் கோபமாவே,
“அதான் அன்னக்கி விளங்கி உப்பை கொட்டி மத்தியானம் குப்பூஸ் திங்க விட்டியல்ல?”

மூன்றரை வருஷமும் ஆச்சு.
நான் அங்கிருக்கும் போதே காசச்சேர்த்துட்டு பால் வியாபாரம் செய்ய ஆந்திரா கிளம்பிட்டார். நானும் பாபா வும் ஏர்ப்போர்ட் வந்து வழியனுப்பி பிரியாவிடை கொடுத்துவிட்டு இப்படிக் கவலைப்பட்டோம்:
“இனிமே நம்ம மெஸ்ஸுக்கு கறி துட்டு குடுத்துதான் வாங்கனும்”

=============================================================================================

1 அரிசி தயாரானபிறகு, அதன் விலையைக் குறைக்க, வியாபாரிகளால் காண்பிக்கப்படும், ஒன்றிரண்டு நுனி கருத்த அரிசிக்கு, ஈக்கருப்பு என்று பெயர்

2 மழைக்காலங்களில் தலைக்கு நேர்மேலே தெரியும் கருப்புமேகம் உச்சிக்கருப்பு.
(ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இதைப் பார்த்தால் மில் ஓனர்களுக்கு சிம்மசொப்பனம். காய்ந்துகொண்டிருக்கும் அவித்தநெல்லை களநடுவில் குமித்து தார்ப்பாய் போட்டுமூடி முடிந்தவரை நனையாமல் காப்பாற்ற அவர்களும் மில் வேலையாட்களும் படும்பாடும் போடும் சத்தமும் எங்கள் ஊரில் பிரசித்தம்)
3 அரபியின் மூத்த மகன். எப்போதும் கஞ்சா அடிச்ச மாதிரியே இருப்பான். அவனுக்கு எங்க வட்டாரத்தில் பெயர் கஞ்சடி.

Posted in புனைவு | 5 Comments

சிலந்தி

spiders

பொதுவாக மத்தியக்கிழக்கில் வீடுகளில் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகள் அதிகம் கண்களில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வீடு சுத்தப் படுத்தும் சமயங்களில் சிலந்திகள் விரட்ட/கொல்லப்பட்டுவிடும். எங்கள் வீட்டிலும் அப்படியே. போனமாதத்தில் ஒரு நாள் குளியலறைச் சுவரோரம் முழங்கால் உயரத்தில் கருப்பாக ஒரு பூச்சி வலைபின்னுவதில் சுறுசுறுப்பாக இருக்க, நான் தண்ணீரை எடுத்து ஊற்றி விரட்டலாமென்ற திட்டத்தில் ஒரு டப்பாவில் மொண்டு ஊற்…….றப்போகையில்….ஒரு யோசனை…ஊற்றவில்லை

யோசனை இதுதான்: எனது குளியலறையில் இதற்கு என்ன சாப்பாடு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அல்லது திட்டத்தில் இங்கு டேரா போடுகிறது? சாதாரணமாய் குளியறைகளில் காணப்படும் பழக்கொசு உருவத்தில் பறப்பதுபோலத் தத்தித் திரியும் சிறுபூச்சிகளைக்கூட எங்கள் குளியலறையில் காண்பது கடினம். அவ்வப்போது தென்படும் சிறுகரப்புகள்கூட இவ்வலையில் சிக்காது. இது எப்படிப் பிழைக்கப் போகிறது? என்னதான் செய்யப்போகிறது? எத்தனைநாள் தாக்குப்பிடிக்கும் என்றுதான் பார்க்கலாமே…. சிலந்திப்பூச்சிகளின் விஷம் சாதாரணமானதல்ல. சிலவகைச் சிலந்திகள் (like Red Top) மனிதனை உடனே கொல்லவல்லவை. அறிவேன்… இருந்தும்…

 

அப்படியே விட்டுவிட்டேன். உள்ளே செல்லும்போதெல்லாம் ஒரு நோட்டமும் விடுவேன். ஒருநாளில் கூட ஏதும் இரை மாட்டவோ, தின்ற இரையின் சக்கை தரையில் தென்படவோ இல்லை. (சிலந்தி, தேள் போன்றவை உயிருள்ள பூச்சிகளைப் பிடித்து அவற்றின் உடலில் உள்ள திரவப்பகுதியை மட்டும் உறிஞ்சிவிட்டு சக்கையை விட்டுவிடும். B. Sc., Chemistry யில் Ancillary Zoology படித்ததன் அறிவு 🙂 )   சிலந்தியும் வேறு எங்கும் போகவில்லை. லேசாக ஊதி, அதன் அசைவில் அது ஆரோக்கியமாக இருப்பதும் தெரிகிறது…  ஆயிற்று 15 நாட்கள். ஒன்றும் மாற்றமில்லை.

 

அதற்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாதே… ஏன் இங்கு வந்து இப்படி கஷ்டப்படுகிறது என்று வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு சிலந்திப்பூச்சியின் மீது இரக்கம் வந்தது. மனிதர்களால் காரணமாகவும் காரணமின்றியும், மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகளை நொடியில் இழந்துவிடும் அவைகளுக்கு இது சாதாரணமான விஷயமோ? விளிம்புநிலையிலேயே வாழும் துப்புரவுத் தொழிலாளிகள் இவ்வாறுதான் தங்கள்மீது ஏவப்படும் அடக்குமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொள்வதைப்போலவா இது? ஒரு சிறிய பூச்சி என் முழுஎடையுடன் என்னைத் தூக்கிக் குலுக்கியது.

 

தினமும் நோட்டமிடுவது தொடர, ஒரு நாள் காலை திடீரென்று ஏதோ ஒரு புதிய வஸ்து வலையில் தென்பட்டது. பூச்சிமாதிரித் தெரியவில்லை. சுவற்றுடன் ஒட்டியபடி இருந்தது. அநேகமாக அது முட்டைக்கூடாக (egg sac or egg capsule) இருக்கவேண்டுமென்று எனது மூளையின் zoology செல்கள் சொல்ல, நோட்டம் தொடர்ந்தது. ஏறக்குறைய ஒருமாதம் கழித்து இன்று வலையில் வேறு மாதிரி ஏதோ தெரிந்தது. சிலந்தியும் கூடு இருந்த இடத்திலிருந்து சில அங்குலங்கள் தள்ளி இருந்தது. லேசாக ஊதினேன். சிலந்தி ஒரே ஓட்டமாக ஓடி பழைய இடத்தை அடைய, அங்கிருந்த புதிய வஸ்துவிடமும் அசைவு தென்பட்டது. அத்தனையும் குஞ்சுகள்.

சற்று கீழே பார்த்தால் முட்டைக்கூட்டின் ஓடு மட்டும் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தது. அசாதரணமான எந்த அசைவின்போதும் சிலந்தி குஞ்சுகளின் அருகே ஓடி, அவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. இரண்டாவது படத்தில் கீழ்ப்பகுதியில் தெரிவது முட்டைக்கூடு!

தவிர இத்தனை நாளும் (இன்னும்கூட பல நாட்களும்) அதற்கு உணவு ஒரு பொருட்டல்ல!

குஞ்சுகள் எப்படியும் இன்றைக்குள் தற்சார்பாக ஆகிவிடும். இன்று இரவு முழுக்குடும்பத்தையும் அலேக்காக ஜன்னலுக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும். (ஜன்னல்லுக்கு வெளிப்ப்புறம் வீடு கிடையாது… காற்றோட்டத்துக்கான, ஒரு சந்துப்பகுதி))

 

அத்துடன் இனி சிலந்திப் பூச்சிகளைக் கண்டால், கொல்லாமல், நமக்குத் தொந்திரவு இல்லாதவாறு  வேறிடத்துக்கு விரட்டிவிடவேண்டும்.

அது பக்கத்துவீடாக இருந்தாலும் நமக்கென்ன?

Posted in Uncategorized | Leave a comment

எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

April 25, 2013 அன்று ஆபிதீன் பக்கங்கள்(ii)ல் வந்த என் கட்டுரை/பின்னூட்டங்களின் மீள்பதிவு,

Thursday, April 25, 2013

எம்புறா

நண்பர் சொன்ன ‘அனிமல்ஸ் ஆர் ப்யூட்டிஃபுல் பீப்ள்’ படத்தை பாக்கனும்னு திட்டம்போட்ட அன்னிக்கு நிலநடுக்கம் சதி செஞ்சு கவுத்துருச்சு. அதனால நேத்து ராத்திரி பார்த்தே தீரனும்னு,முடிவோட, வீட்டுக்கு ஓடுற வழியில, ஒரு புதுசொந்தக்காரத் தம்பியைப் (புதுப்பணக்காரன் மாதிரி) பாத்து, அதுட்டயும் இந்தப்படத்தைப் பாக்கச் சொல்லிட்டு, தம்பி சொன்ன ‘எர்த்’படத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பாத்து,, குறிச்சுக்கிட்டு,

##முக்கியமா இரவு விருந்தையும் சிறப்பிச்சுட்டு –ஹிஹி ##  ராத்திரி 12 மணிக்கு வந்து வீட்டுவாசலப் பாக்க ஓட்டமா ஓட, …….. 
எதுத்த கட்டடத்து வாசல்ல அந்த நேரத்துல ஒரு சுவரோரமா ஒரு வெள்ளப்புறா தரையில உக்காந்துருந்துச்சு.பிரேக் போட்டு, கொஞ்சம் கிட்டக்கப்போய் தொட முயற்சி பண்ணேன், சாதாரணமா பறந்திருக்க வேண்டிய புறா பறக்கல. லேசா அசைஞ்சு மட்டும் கொடுத்துச்சு… பிடிக்க முயற்சிபண்ணேன்.நின்னபடிக்கு அசையவே இல்ல. எனக்குப் போக மனசில்ல. ஏதாவது பூனை வந்தா புறா அம்பேல்தான்.கையில புடிச்சு தூக்கிட்டேன். அந்த நேரத்துலயும் ஒரு ஆந்திராக்கார நண்பர் அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தார். அவர்ட்ட சுருக்கமா ‘வெளக்குனேன்’. மேலே ஏஸி மேல வச்சுட்டா காலைல பறந்துரும். வச்சிரவான்னு கேட்டேன். அதுக்கு அவர், வேணாம், கீழே விழுந்துரப்போகுது,என்கிட்ட கொடுங்க, நான் இருக்கும் கட்டடத்துல நெறையப் புறா நிக்கும், அதுகளோட விட்டிருவேன்ன்னார்.நானும் கொடுத்துட்டேன். நடந்து என் வீட்டு வாசலுக்குப் பக்கத்தில் போனவுடன், திடீர்ச்சந்தேகம் வந்தது: பூனைக்குப்பதிலா இவர் இரையாக்கிட்டா?ன்னு. நான் கைல வச்சிருந்தபோது, நல்ல புஸ்டியா வேற இருந்தமாதிரி ஞாபகம். பாய் என்கிட்டயே குடுத்துரு, நான் வீட்டு பால்கனில வச்சுக்கிட்றேன்னு சொல்லவும் அவரும் சரின்னு கொடுக்கும்போது, எம்பொரடில அடிக்கிறமாதிரி, புறா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாரு. பாத்தீங்களா? புஸ்டியா இருக்கிறது மட்டும் நோட் பண்ற எனக்கு, அந்த இருட்டிலும் புறா அழகா இருக்குறத நோட் பண்ணுன அவர் மேல சந்தேகம். என்ன உலகம் இது?
குற்றவுணர்ச்சியோட வீட்டுக்கதவைத் திறந்து, வெளிச்சத்தில் புறாவைப் பாத்தா அம்புட்டு அழகு… வெள்ளை நிறம்…கழுத்தில் மட்டும் கருஞ்சாம்பல் நிறப் புள்ளிகள்.. ஆனா அது என்னைப்பாத்ததுல எங்கோ சிக்கல் மாதிரி தோனுச்சு. நேராவே பாக்கமுடியும்போது, தேவையில்லாமல் கழுத்தை ஒரு மாதிரி சுத்தி வளச்சுப்பாத்துச்சு. கொண்டுபோய், 10 அடி நீளம், ஒன்றைஅடி அகலம், நாலடி உயர வெளிச்சுவர் இருக்கிற அந்தப் மினியேச்சர் பால்கனில விட்டுட்டு, ஒரு டப்பாவில் தண்ணி,வீட்டுல இருந்த அரிசியப் போட்டுட்டு, படம் பாக்கலாம்னு கண்ணாடிக் கதவை மூடும்போதும் மூடுனபிறகும் மீண்டும் அதே மாதிரி கழுத்தச் சொழட்டி என்னயப் பாத்துச்சு…ஏன்னு தெரியல..ஆனா பயப்படுறமாதிரி தெரியல
அதுக்கப்ப்புறம் படத்தைப் பாத்து முடிச்சுட்டேன், ஒரு நாலஞ்சு தடவ புறாவ வந்து வந்து பாத்துக்கிட்டே.. படம் முடிஞ்சும் தூங்க முடியல.. மறுபடியும் சிலதடவை போய்ப்போய் பாத்தேன்.தூங்குறமாதிரி தெரிஞ்சுச்சு, தூங்காதமாதிரியும்தான். எப்படியோ 5 மணி ஆச்சு தூங்க, மறுபடி எட்டேமுக்காலுக்கு அரக்கப்பறக்க எந்திருச்சு ஓடிப்போய்ப் பாத்தா, நடந்துபோய் வேற எடத்துல நின்னுக்கிட்ருந்துச்சு. சாப்டுச்சா தண்ணி குடிச்சுச்சான்னு தெரியல. ஆனா என்னவோ வித்தியாசமா பண்ணுச்சு, கழுத்தச் சுத்தி ஒருமாதிரியாப் பாத்துட்டு, அதோட உச்சந்தலைய தரைல வச்சுத் தேச்சுக்கிருச்சு. எனக்கு ஏகப்பட்ட கேள்விகள் – இருக்கும் கவலைகளுக்குச் சகோதரர்கள் சேர்ந்தார்கள்:
எம் புறாவுக்கு என்ன பிரச்சினை? இதுவரைக்கும் அது பறந்ததே இல்லையா? நேத்து எதுவும் அடிகிடி பட்ருக்குமா? இல்ல மனுசனுக்கு மாதிரி எதுவும் மன வியாதியா? ஆட்டிஸம் மாதிரி
அப்பறம் இத்தனநாள் எப்டி வாழ்ந்துச்சு? அது நல்லபடியா பறந்து போய்ருமா?

இன்னும் கொஞ்சம் அரிசியும் போட்டுட்டு, அவசரமா ஆஃபிஸுக்கு வந்துட்டேன் சாயந்திரம் ஊருக்குப்போகும் நண்பரை ஏர்ப்போர்ட்டில் விட்டுவிட்டுத்தான் போய்ப் பார்க்கவேண்டும்..
2
 
வியாழக்கிழமை ராத்திரி புறா உயிரோடு இருந்ததே எனக்கு சந்தோஷம்தான்….. ஆனால் அது ஆரோக்கியமா இல்லைன்னு மட்டும் தெரியுது. சாப்பிடுது; தண்ணி குடிக்கிது. தலையில ஏதோபிரச்சினை. தலைகீழாவே பாக்க முயற்சி பண்ணுது. கழுத்தை 180° க்கு சொழட்டி, மல்லாந்து பாக்குது.

எல்லாத்தையும் விடக்கொடுமை, திடீர்திடீர்னு கழுத்தைத் திருப்புனபடிக்கு, அலகை மேல்பக்கமா வச்சுக்கிட்டு, உச்சந்தலையை தரைல அடிச்சிக்கிருது. அடிக்கடி.. இதத்தான் பாக்க சகிக்கலை.

புறாக்களுக்காக இரக்கப்பட்டோ இல்ல போறவழிக்குப் புண்ணியம் தேட மட்டுமோ, வீதிகள்ல போட்ருக்கிற  3 வகை இரைகளப் பொறுக்கிவந்து போட்டு, எதப் பிரியமா சாப்டுதுன்னு கண்டுபிடிச்சாச்சு.

பகல்நேரத்துல நான் போய் தண்ணி, இரை வச்சா, பயந்து நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ முயற்சிபண்றதுல,கீழவிழுந்து, மல்லாக்க போட்ட கரப்பான்பூச்சிமாதிரி துடிச்சிட்டு அப்பறம் எந்திரிக்கிது.பாவமா இருக்கு. நான் பால்கனிக்கு போகும் அந்த கண்ணாடிக்கதவையே ரொம்ப நேரம் பாக்குது.ஆனா, சிலசமயத்துல அந்தக் கண்ணாடிக்கதவுகிட்டயே வந்து நின்னு உள்ள பாக்குறதுக்கும் முயற்சிபண்ணுது….

என்னவோ போங்க, எனக்கு எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

எங்கேயாவது கொண்டுபோய்க் காட்டலாம்தான்….ஆனா நான் இருக்கும் ஊர்ல அது அவ்வளவு நல்லதில்லை.மொதக்கேள்வி இதோட பாஸ்போர்ட் எங்கன்னு இருக்கும். அப்பறம், கொஞ்ச நேரத்துல, நீ எத்தன நாளா இத வச்சுருக்கேம்பாக. எதுக்குக்கேக்கிறியன்னு நான் கேட்டேன்னு வச்சுக்கிங்க:

“ இல்ல,,,,,,புறாவுக்கு HM8V71K ன்னு ஒரு வைரஸ்தாக்கிருக்கு; அது மனுசங்களுக்கும் ரொம்ப ஆபத்து; அதுனால உன்னய குவாரன்ட்டைன் பண்ணபோறோம், ஏய் ஏய் எங்க ஓட்றே?  பா……ய்ஸ்…………..கேட்ச் ஹிம் ”

இப்டி நடக்கிறதுக்கும் ச்சான்ஸ் இருக்கு!

அதனால என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம்… இதற்கான அமைப்பு ஏதாவது இருக்கான்னு தேடிட்ருக்கேன் இதுவரைக்கும் கண்ல படலை
 
24 June 2013

எம்புறாவக்காணோம்

இதுக்கு சந்தோஷப்பட்றதா வருத்தப்பட்றதான்னு தெரிலங்க. கொஞ்சநாளாவே எம்புறா கொஞ்சம் அதம் பண்ணிட்டுத்தான் இருந்துச்சு!
அதம்னா, குரல்குடுத்தா (ஏய் புறா! ன்னுதான்) வந்து எட்டிப்பாக்குறது, பால்கனிக்கு நாம போய் இரைதண்ணி வச்சுட்டு வந்தவுடனே இங்கேருந்து அங்க ஸ்டைலா ஓடுறது, ஓடிப்போய்த் திரும்பிப் பாக்குறதுன்னு…இப்டி அதம். ஏற்கனவே இதெல்லாம் கிடையாது. பல்ட்டியடிச்சுட்டு துடிதுடிக்கும். பாவமாயிருக்கும்.

அப்பறம் கொஞ்சநாளா அந்தப்பல்டி அடிச்சுத் துடிக்கிறது கொறஞ்சிருச்சு. ஊர்ல இருந்து ஊட்டுக்காரம்மாவும் பெரியமகனும் வந்தாக. வந்து இறங்குனவுடனே நான் ஒரு மாசமா கண்டுபிடிக்காத ஒண்ணை மகன்காரர் கண்டுபுடிச்சாரு: எம்புறாவுக்கு வலதுகண் பார்வை தெரியல, அதனாலதான் புறா தலையச்சுத்திசுத்தி பாக்குதுன்னு. சரியாத்தான் சொல்லிருந்தாரு.

நான் கண்டுபிடிச்சது அது ஆண் புறான்னு.. தட்டாமாலை சுத்துறதுமாதிரி சில சேட்டைகள் பண்ணுனதவச்சு.

அப்புறமா சின்னமகனும் வந்ததும் எல்லாருமா சொன்னது: ஒங்க புறாவுக்கு ஒன்னும் பிரச்சினயில்ல. வெளில போனா நாமலா எரைதேடனும்னுதான் இங்கயே செட்டிலாயிருச்சுன்னு.

இடைல ஒருநாள், ஒரே ஒருநாள், ஒரு ஜோடிபுறா விருந்தாளியா வந்து ஒரு 20 நிமிசம் இருந்து நல்லா சாப்பிட்டுட்டு தண்ணி குடிச்சுட்டுப் போனாங்க. அப்புறம் ஒருதடவை மட்டும் ஒரு ஜோடி மைனா அதேமாதிரி விருந்து. மத்தபடி எம்புறா தனிப்புறாதான்!

நேத்து பால்கனிய சுத்தம்பண்றதுக்கு புறாவ ஒருஅடி உயர அட்டப் பெட்டிக்குள்ள விட்டுட்டு, கழுவுனபிறகு, திரும்பவும் தரைல விட்டேன். எப்பவும் இந்தமாதிரி புடிச்சுட்டு விடும்போது கொஞ்சநேரம் பல்ட்டியடிச்சுத் துடிதுடிக்கும். ஆனா நேத்து ஒரே ஓட்டமா (ஆட்டிஆட்டிக்கிட்டு) ஓடி அவுக வீட்டுக்குள்ளபோய்த் திரும்பிப்பாத்துச்சு. சந்தோஷமா இருந்துச்சு

இன்னிக்கு மத்தியானம் ஒரு போன் சின்னமகன்ட்ட இருந்து: “அத்தா ஒங்க புறாவக் காணோம்” – ஒரு மாதிரியாய்ருச்சு.

கீழேயெல்லாம் எட்டிப்பாத்தா காணோமாம். 4 அடி உயரம் பறந்தாத்தான் நாலாவது மாடி பால்கனிய விட்டு வெளியே போகமுடியும். ஆக எம்புறா பறந்து போய்ருச்சு.
ஊருக்குப்போனா அதை எங்கவிட்டுட்டுப்போறதுன்னு யோசனையா இருந்தேன். (அல்கூஸ்ல ஒரு வேர்ஹவ்ஸ்ல இருக்குற சில ஆந்திர, பாகிஸ்தானி நண்பர்களைத்தான் மலைபோல நம்பிருந்தேன்) அது தெரிஞ்சிருச்சோ என்னமோ? போய்ருச்சு.

என்னைவிட்டுட்டுப் போனாலும் பொழச்சுப்போய்ருச்சுன்னு சந்தோசமாத்தான் இருக்குன்னு வருத்தத்தோட ஒத்துக்கத்தான் வேணும்!

 
26 June 2013

இதுக்குப் பேர் தான் அப்டேட்டுங்கிறது
———————————-

சந்தோஷம் சில சமயங்கள்ல நம்ம ஒடம்போட ஒட்டிருக்கிறமாதிரியே தெரியும்ல? அந்தமாதிரித்தான் எனக்கு நேத்து இருந்துச்சு… இன்னும் ரெண்டு நாளைக்காச்சும் தா(தொ)ங்கும்!

காலைல வேலைக்குக் கெளம்பிக்கிட்ருக்கும்போது, பெட்ரூம் சன்னல்ல ஏதோ பறவை வந்து உக்காந்த உணர்வு… ஓடிப்போய் நைஸா திரைய கொஞ்சூன்டு வெலக்கிப்பாத்தா எம்புறா மாதிரி தெரிஞ்சுச்சு. ஆ, எம்புறா வந்துருக்குன்னு சவுண்டுவிட்டு, எல்லாரையும் கூப்டுக் காட்டுனேன். அவுகள்லாம் வந்து பாக்கும்போது பறந்துபோய்ருச்சு. சரியாப் பாக்காத மனைவியும் மகனும் “இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒங்களுக்கு அப்டித்தான் தெரியும்”னு சொன்னபோது (எனக்கே அது சரிதான்னு தோனுனாலும்) ஒடனே பால்கனிக்கு ஓடிப்போய்ப் பாத்தேன். எதுத்த கட்டடத்து சன்னலோரம் உக்காந்துருந்தது எம்புறாதான்… கூப்ட்டேன், (எப்பவும் போல ஏ! புறா வான்னுதான்) பாத்துட்டு ஒடனே நேரா வர்றமாதிரி பறந்துவந்து, சடார்னு மேலே உள்ள வீட்டு சன்னல்பக்கம் போய்ருச்சு. எட்டிப்பாத்தா………அங்க ஒரு கருஞ்சாம்பல் நிற ஜோடியோடு ஜாலியா உக்காந்துருந்துச்சு.. எனக்கு அடக்க முடியாத சந்தோஷம். ரெண்டும் ஒடனே பறந்து போய்ருச்சுக… திரும்பி ரூமுக்கு வந்து யார்ட்டயும் ஒண்ணுஞ்சொல்லல… யாரு நம்பப்போறா?
வசூல்ராஜாவுல சப்ஜெக்ட்டு டிம்மு–டிப்பு அடிச்ச கதைதான்!
சொல்லப்போனா எனக்கே நான் லூஸு மாதிரி பினாத்துறமாதிரிதான் தெரிஞ்சுச்சு!

வேலைக்கு வந்துட்டேன். மத்தியானம் 3 மணிக்கு ஊட்டுக்காரம்மாக்கிட்ட இருந்து ஃபோன்:
“ஒங்க புறா வந்துருக்கு…பெட்ரூம் சன்னல்ல வந்து உக்காந்திருக்கு”
சொரத்தே இல்லாதமாதிரி உம் னு சொன்னேன்.
“சோடியா இன்னொரு புறாவையும் கூட்டிட்டு வந்துருக்கு”
மறுபடியும் சொரத்தே இல்லாதமாதிரி, ஒரு கருஞ்சாம்பல் கலர் புறாதானேன்னு கேட்டேன்.
“எப்டித் தெரியும் ஒங்களுக்கு?”
இப்ப ரொம்ப சொரத்தோட சொன்னேன்: காலைலயே பாத்துட்டேன், ஆனா எனக்கே அவ்வளவா நம்பிக்கை இல்ல.
அது எம்புறாதானேன்னு கம்பீரமா கேட்டேன்
“ஆமா அதேதான்; நல்லாப்பாத்துட்டேன்”
கொறஞ்சது ஒரு கால்கிலோ சந்தோசமாவது என்னோட எடைல சேந்திருக்கும் அப்போ.
இன்னிக்கு காலைல அதே வூட்டுக்காரம்மா:

“காலைல சீக்கிரமே முழிப்புவந்துருச்சு; ரென்டு சிட்டுக்குருவிக சன்னல்ல உக்காந்து சத்தம் போட்டுச்சுக. அப்பறம் புறாச்சத்தம் வேற கேட்டுச்சு. நம்மோட்டு புறாவாக் கூட இருந்திருக்கும்.”

நல்லாக்கவனிங்க, ‘ஒங்க புறா’ இப்ப ‘நம்மோட்டுப்புறா’ வாயிருச்சு!!!

இனி அப்பப்ப எங்கோட்டு புறா வரும்… நானும் காத்துக்கிட்டு இருப்பேன்!

 
21 July 2013
 
18/7 வியாழக்கிழமை, எம்புறாவ விசாரிச்ச நண்பர் ஷாஜஹானுக்கு நான் சனிக்கிழமையன்னிக்குச் சொன்னது:

இதத்தான் வாய்முகூர்த்தம்னு சொல்லிருப்பாய்ங்க போல ஷா!நேத்தும், வெள்ளிக்கிழமை லீவுல, வழக்கம்போல் நம்பிக்கையில்லாமபுறா வருதான்னு பாத்துக்கிட்டே இருந்தேன். சுமார் 12 மணிக்கு வந்துச்சு! குடும்பத்தோடதான்!
எதுத்த கட்டிட சன்னல்ல….

புத்திசாலித்தனமா, பால்கனியத்திறக்காம, பெட்ரூமுக்கு ஓடிப்ப்போய் சன்னலத் திறந்து, இரையும் தண்ணியும் வச்சுட்டு, மறைஞ்சிருந்து பாத்தேன், ரென்டுபேரும் வந்து, கொஞ்சம் – மரியாதைக்கான்டி – ரென்டுகொத்து கொத்திட்டு, ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டுப் போனாக..அதுக்கப்புறமும் ரென்டுமூனு தடவை வந்து என் கண்ல படுறமாதிரி இருந்துட்டுப் போச்சுதுக…
வூட்டம்மாட்ட போன்ல சொன்னதுக்கு பதில்: நல்லவேளை, நாங்க அம்மாமக்க தப்பிச்சுட்டோம்

காரணம்: அது தொலஞ்ச அன்னிக்கு நைட்ல கேட்ருக்கேன்: கேக்குறேன்னு தப்பா நெனக்கக்கூடாது, கோபப்படக்கூடாது, புறா நெசமாவே தன்னாலதான் காணாப்போச்சா?
(எப்டி இருந்திருக்கும் அவுகளுக்கு?)

Posted in மீள்பதிவுகள் | 1 Comment

கூடன்குளம்

11-09-2012 அன்று ஆபிதீன் பக்கங்களில்  கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவில் பின்னூட்டமாக எழுதப்பட்ட எனது பார்வை, மீள்பதிவாக இங்கே:

கூடன்குளம் அணு உலை அமைப்பது சரியா?
                                 அல்லது
கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா?

எல்லோர் தலையயும் உருட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் எந்தக் கேள்வி சரி என்று தெளிவிப்பதே மோதலுக்கு வழிவகுத்துவிடும் நிலையில், அதற்கான பதிலளிக்க எல்லோரும் அவரவர் வசதிற்கேற்ப, பல அடிப்படைகளைப் பற்றிக் கொண்டு பேசுகிறார்கள்.

கல்வியாளர்கள்/பொறியாளர்கள் தொழில்நுட்ப அறிவை,
சமூக ஆர்வலர்கள் பேரழிவு, சுற்றுச்சூழல், வெப்பமயமாதல் போன்றவற்றை,
ஆளுங்கட்சியினர் அரசுக்கொள்கையை,
எதிர்கட்சியினர் எதிர்க்கட்சியாய் இருப்பதாலேயே,
துக்கடா கட்சிகள் அரசியலில் ஜொலிக்கமுடியாமையை,
சிறிய கட்சிகள் கூட்டணி தர்மங்களை,
அதிகாரிகள் தங்களது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை,
பொதுமக்கள் தங்கள் குறுகியகாலப் பயன் மற்றும் சிரமங்களை,
அதிலும் ஏழைகள் பயத்தை,
இடைத்தரகர்கள் நீண்டகால வருமானத்தை,
மொக்கைகள் வெறும் பிரபலமாதலை,
ஊடகங்கள் பரபரப்பு மற்றும் தற்காலிகச் சுரண்டல்களை (exploitation),
தொழிலதிபர்கள் தங்கள் சுயநலன்களை,
போலி அறிவுஜீவிகள் அறிவுரையாற்றக் கிடைத்த வாய்ப்பால் வந்த அரிப்பை,
பொதுவுடைமை பேசுவோர் தம் சார்புக்கொள்கையால் வந்த தடுமாற்றத்தை,
இன்னும் சில உண்மையான பொதுநலன்விரும்பிகள் தாம் தம் அறிவால் அறிந்தது சரி என்ற நம்பிக்கையை,

இப்படி ஒவ்வொருவரும் ஒன்றைப் பற்றிக்கொண்டு பேசுகிறார்கள்.

இவர்கள் எல்லோராலும் அணு முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா?
அணுவின் ஆக மிகச்சிறிய பகுதியாக தற்போது சொல்லப்படும் பகுதி மீண்டும் பிளக்கப்பட சாத்தியமில்லை என்று சொல்லமுடியுமா? அதேபோல,
அணுஆற்றலின் பிரம்மாண்டம் இத்தனைதான் என்று வரையறுக்கப்பட்டு விட்டதா? அதிகபட்சமாக இப்போது சொல்லமுடிந்தது பூமியை வெறும் புகையாக மாற்றி, அண்டத்தில் சிறிதேசிறிதான அளவில் அசுத்தப்படுத்த முடியும் என்பதே.

அணுமின்சாரம் என்பதும் அணு உலைப்பாதுகாப்பு என்பதும் விபரம் அறிந்தவர்களால் பாமரனுக்கு புரியவைத்துவிட முடியுமா என்பது இருக்கட்டும், நன்கு படித்தவர்களால் கூட அதைப் புரிந்துகொள்ளமுடியுமா என்பதும் விவாதத்துக்குட்பட்டதே.

( நாராயணசாமி என்று பெயர்வைக்கப்பட்டவர்களால் வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அணு உலைப்பாதுகாப்பு பற்றியும் ஒரே நாளில் நாட்டின் 100வது ராக்கெட் ஏவுதல் திட்ட வரையறைகளையும் அறிந்துகொள்ளமுடியும். அவர்களாலும் மற்றவர்களை அறியவைக்க முடியவில்லை )

நமது மக்களின் மின் உபயோகப் பழக்கவழக்கங்களை இனி மாற்றவே முடியாத அளவுக்கு மாற்றிவைத்துவிட்டோம். ஆக தேவை அதிகரிப்பு என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது.

தேவைக்கேற்ற உற்பத்திக்கு இப்போது ஆபத்தில்லாத முறையாக அறியப்படும் நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரிப்புக்குத் தேவையான நீர் கிடைக்கும் என்றே வைத்துக் கொண்டாலும் புதிய அணை கட்டவோ, இருக்கும் அணைகளின் நீர் மட்டத்தை உயர்த்தவோ மேற்சொன்ன வகையினர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா? மாட்டார்கள். அதற்கு வேறு பெயரில் போராட்டங்கள் உருவாகும்.

அனல்மின்சாரத்தில் பூமியின் நிலக்கரி இருப்பு, செலவு, சுற்றுச்சூழல் இத்தியாதிகள் நல்லமுடிவைக் காட்டவில்லை.

இவைபோக, குப்பையிலிருந்து, கடலலையிலிருந்து என்பது போன்ற இன்னபிற முறைகள், இன்றளவும், உருப்படாத திட்டங்கள் என்ற நிலையைத் தாண்டவில்லை.

சூரியமின்சக்தி நல்லதென்று இப்போது சொல்லப்பட்டாலும் அதிக உற்பத்திக்கான இன்றைய சாத்தியக்கூறுகள் நல்ல அறிகுறியைக் காட்டவில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு தனி விவாதம் தேவை. எவ்வளவு நவீனமான மின்னணுசாதனமும் ஒன்று அல்லது இரண்டே வருடங்களில் 50-75% வரை விலை குறையும்போது சோலார் பேனலும் பேட்டரியும் விலை குறைய தொழில்நுட்பம் இல்லையென்பது (சாதாரண ஜலதோஷத்திற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது போலவே) பெரிய புதிரான விஷயமல்ல.

ஆக, பூமியின் கச்சா எண்ணெய் இருப்பு முழுமையாகத் தீராதவரையிலும், குறிப்பிட்ட முதலாளித்துவ நாடுகளிடம் மட்டுமே உள்ள கதிரியக்க உலோகங்களை நல்ல விலைக்கு விற்று, பணம்பெருக்கும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்யும் வகையில், அணுமின் சக்தி மட்டுமே ஆதிக்க சக்திகளால் முன்நிறுத்தப்படுகிறது. வேறு வழியே இல்லை என்னும் பிரமையும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

உண்மையில், வளரும் நாடுகளிடம் அபரிமிதமாக உள்ள வேறு எந்த மூலப் பொருளிலிருந்தும் மின்சக்தி எடுக்கும் தொழில்நுட்பம் இப்போதைக்கு வெளிவராது. வளர்ந்த நாடுகளை எதிர்க்கும் ஒன்றிரண்டு தென்அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளும்கூட அவைகளின் எண்ணெய்வளம் பாதுகாக்கப்படுவது மற்றும் விலையாக்குவது என்ற அளவிலேயே எதிர்க்கின்றன.

இந்த நிலையில் கூடன்குள போராட்டக்குழு சாதிப்பதென்பது கஷ்டமே. உதயகுமார் சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியின்போதுகூட அவரது 3-4 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் எனக்கு இந்த உலை செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை என்ற ரீதியிலேயே பேசினார். அதில் முக்கியமானது இழப்பீடு சம்மந்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு நினைத்தால் அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து வரப்போகும் பிரச்சினைகளுக்காக ஒப்பந்தத்தில் சில அம்சங்களை நியாயமாகவோ ஏமாற்றும் திட்டத்துடனோ சேர்த்து, பிரச்சினையை முடித்து உதயகுமாரை மதிக்கப்படும் நபராக்க அரசின் ஈகோ ஒத்துக்கொள்ளாது. தன்போக்கிலேயே முடிப்பதில் பெரிய சிரமம் இருப்பதாக ஒரு அரசு கருதாது. அப்படியே முடித்துவைத்தாலும் இவர் வேறு பிரச்சினைகளை முன்வைத்து திட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது எனவும் அரசு கருதலாம்.

இன்னொரு அம்சமாக கழிவுப்பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பற்றி உதயகுமார் கிளப்பும் சந்தேகம் பீதி கிளப்புவதாகவும் அதற்கு அரசின் விளக்கம் என்னவோ இந்த சந்தேகம் முற்றிலும் வேற்றுகிரகத்திற்கானது என்கிற ரீதியிலும் இருக்கிறது. இதில் தெளிவிக்க வேண்டிய விஞ்ஞானிகளோ அரசு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பதிலும் அரசின் கூற்றுசார்ந்தே இருக்கிறது. அவர்கள் உண்மைதான் சொல்கிறார்களா என்பதை தெளிவிப்பது யார்? அப்படியே தெளிவித்தாலும் புரிந்துகொள்வது யார்? புரிந்தாலும் சரியாகப் புரிந்துகொண்டதை எப்படி அறிவது?

இது, முற்றாக, தொழில்நுட்பமும் சர்வதேச நுண்ணரசியலும் பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு சிக்கலான விஷயம். இப்போதைய நமது அரசியலமைப்பில் அரசியல் ரீதியாக வேண்டுமானால் பொதுமக்கள் எதிர்ப்பால் சில மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். அணுஉலை விவகாரத்தில் பொதுமக்களின் விருப்பம் வெற்றிபெறுவது குதிரைக்கொம்புதான்.

போராடும் மக்களின் உணர்வுகளையும் போராட்ட குணத்தின் உன்னதத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக இப்படிச் சொல்லவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்தும் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையாலும் வந்த ஆதங்கம் அது.

இவைபோக, இன்னும் சில லோக்கல் சந்தேகங்களும் உண்டு. அரசுகளின், அரசியல்வாதிகளின் சுயநல நடவடிக்கைகள் வியப்பளிக்கின்றன. தமிழக மக்களை முழுமுட்டாள்களாக நடத்தும் விதமும் அதில் ஓரளவு வெற்றி அடைந்திருப்பதும் வேதனையளிக்கிறது.

முந்தைய திமுக அரசு தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மின்வெட்டு. சென்னையில் மின்வெட்டே இல்லாமலும் மற்ற நகர்ப் பகுதிகளில் ஒருநாளைக்கு வெறும் இரண்டுமணி நேரம் மட்டுமே இருந்ததும் பெரிய பிரச்சினையாக அப்போது தெரிந்தது. நாங்கள் வந்தால் மின்வெட்டு உடனே விலகும் என்று சொன்ன அதிமுக வின் ஆட்சி வந்தபின் சென்னை உள்பட தமிழகம் முழுதும் மிகக் கடுமையான 12 மணிநேர அளவுக்கு மின்வெட்டு வந்தது. வேறு எந்தப் புதிய பிரச்சினையோ, மிகப்பெரிய தொழில் திட்டங்களோ வரவில்லை. ஆனாலும் மின்வெட்டு அதிகமானது. மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.

இதற்கு திமுக தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்புப் பிரச்சாரமோ, போராட்டங்களோ இல்லை. ஆச்சர்யமான அம்சமாகும் இது. ஆட்சியையே தட்டிப்பறித்த ஒரு பிரச்சினை மேலும் மோசமடைந்தும், திமுக இதைக் கையில் எடுக்காதது உள்ளடி அரசியல் தவிர வேறென்ன? கூடன்குளம் மின்சாரம் இல்லாமலேயே, மின்கட்டணத்தைப் பல வருடங்கள் உயர்த்தாமலேயே, திமுக அரசு அதிமுக அரசைவிட பிரமாதமாக மின்விநியோகத்தைக் கையாண்டது என்ற குறைந்தபட்ச உண்மையை வைத்து அதிமுக அரசைக் கண்டித்து, பொதுமக்கள் போராடவில்லை.

மாறாக, கூடன்குள மின்சாரம் தமிழகத்துக்கு முழுதுமாகக் கிடைக்காது என்று தெரிந்தும், அப்படியே கிடைத்தாலும், இருக்கிறதாகச் சொல்லப்பட்ட பற்றாக்குறை தீராது என்பது நன்கு தெரிந்தும், மின்வெட்டுப் பிரச்சினை தீர்வதற்காக, கூடன்குளம் திட்டம் செயல்படவேண்டும் என்று ஆதரவாகப் போராடினார்கள். என்ன ஒரு விந்தை? என்ன ஒரு அசட்டுத் தனம்? இப்போது முதல்வர் ஒருபடி மேலே போய், கூடன்குளம் மின்சாரம் முழுதும் தமிழகத்துக்கு வேண்டும் என்று கடிதங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்!

வேறு பரபரப்புச் செய்திகள் வரும்போது ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்துவிடும். இருக்கவே இருக்கிறது மக்களின் மறதிக் குணமும் புதிது புதிதாய் பரபரப்புத் தேடும் மனப்பான்மையும்.

சில நாட்களாய் நான் அவதானித்த இன்னொரு விஷயம். அணு உலை விபத்து பாதிப்புகளைச் சொல்லும் ஒவ்வொருவரும் இப்போது காட்டும் ஒரு உதாரணம் – பொகுஷிமா. காலங்காலமாக அணுஉலை விபத்துக்கு உதாரணமாய் சொல்லப்பட்ட, பொகுஷிமா பாதிப்பைவிட பலமடங்குகள் பாதிப்புத் தந்த, செர்னோஃபில் விபத்தைச் சொல்வதை ஓல்டுஃபேஷனாக்கி விட்டார்கள்.

இறுதியில் மிஞ்சப்போவது, சாமானியர்களான கூடன்குளம் பகுதி மக்களின் மனதில் இருக்கும் அணு உலை விபத்து பற்றிய தீராத அச்சமும் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அடிப்படைக் கவலையுமே.

சுமார் 20 ஆண்டுகளில் ஒவ்வொரு இலையாக வெளிவந்து 15 ஆயிரம் கோடிகளை விழுங்கி இன்று விருட்சமாக நிற்கும் கூடன்குளம் உலையை தற்போது ஆதரிப்பது தவிர வேறு வழி இல்லை. இந்த ஒருவருடமாகக் காட்டும் அளவுக்கு எதிர்ப்பை 15 வருடங்களுக்கு முன்போ அல்லது குறைந்தது 10 வருடங்களுக்கு முன்போ இதே முனைப்போடு காட்டியிருந்தால் விளைவு வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதாக உதயகுமார் இப்போது சொன்னாலும் பழைய பத்திரிக்கை கட்டிங்குகளைக் காட்டி நிரூபித்தாக வேண்டிய நிலையில்தான் எதிர்ப்பு இருந்திருக்கிறது.

கூடன்குளம் ஒரு பாடமாக இருக்கப் போகிறது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்க்காவிட்டால் எத்தனை அரசுகள் மாறிமாறி ஆட்சியேறினாலும் நடக்கக் கூடாதது நடந்தே தீரும்.

எதிர்ப்பை வெறும் அணுமின் நிலைய எதிர்ப்பாக மட்டும் நடத்தாமல், அணு உலை எதிர்ப்பாக, அணுகுண்டுப் பிரயோகத்திற்கு எதிராகவும் நடத்தவேண்டும்.

மேலும் அதிகரித்து வரும் மின்தேவைக்கு என்ன செய்வது என்பதுதான் விஞ்சி நிற்கும் விடை தெரியாக் கேள்வி……

Posted in Uncategorized | 1 Comment

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பது போன்றது

நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பதுபோன்றது – ஒரு எளிமையான ப்ளுப்பிரிண்ட்

பின்நவீனத்துவ துவாரத்துல புதுசா மூக்கை நுழைக்கும் புது வாசகர்களுக்கு மட்டுமான ஒரு நிலைத்தகவலோடு தொடங்கலாம்:

தமிழ்ல 3 வகை எழுத்தாளர்கள் இருக்காங்க.
1. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுலயே பிரபலமா இருக்கிற 3 எழுத்தாளர்கள்
2. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுல பிரபலமே ஆகாம இருக்கிற 3 எழுத்தாளர்கள்
3. எழுத்தாளர்கள். இருக்குறதிலதிலேயே பாவப்பட்டவர்கள் இவர்கள்தான். குறைந்தது நூறு பேர்களாவது இருக்கும் இந்தவகையினர் எண்ணிக்கையில் அதிகம். காலத்தால் அழியாத பலதையும்  எழுதிவைத்துவிட்டுப் போனவர்களும் இன்னும் எழுதிக்கொண்டு இருப்பவர்களும் இதில் அடக்கம். தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான 3 தகுதிகள் இல்லாதவர்கள். அவையாவன: அரசியல், அழுக்கு, மற்றும் அசிங்கம்

சில நாட்களுக்குமுன் வந்த ஒரு பத்திரிகைச் செய்தி என்னோட உணர்ச்சிகளைக் கிளப்பி விட்ருச்சு. அதனால என்னனு சும்மாயிருக்க நான் ஒன்றும் சாதாரண ஆள் இல்ல.

“தமிழ்நாட்டுலயே இன்னமும் பிரபலமே ஆகாத” 3 எழுத்தாளர்களில் ஒருவர் எழுதுவதை நான் படிப்பதில்லை. இன்னொருவர் எழுதுவதை அவரே படிப்பதில்லையாம்.

(குறிப்பு: இப்படியே அடுத்த பாராவுக்குப் போயிரலாம். ஆனாலும் முடியாது. இதுதான் தமிழ்நாட்டுல எழுதுறவனுக்கு இருக்கிற நெலமை. என்னோட வாசகர்கள் எல்லாருமே பின்நவீனத்துவ வாசகர்கள்தான்னாலும், ஒன்னுரெண்டு பேருக்கு நான்தான் அந்த மூணாவது பிரபலமே ஆகாத எழுத்தாளன்னு சொல்லியே ஆகவேண்டிய கேவலமான வாசகத்தரம்தான் இன்னமும் தமிழ்நாட்டுல இருக்கு. மாட்டுத்தாவணி பகவதி ஏதாவது செஞ்சு மாடங்குளம் ரசாயணமின் நிலையத்துல ஏதாவது விபத்து நடக்கவச்சு இந்த தமிழ்நாடே அழிஞ்சுபோயிரனும். அப்பறம் “பின்விபத்து எலக்கியம்” உருவாகி அதுல நான் மட்டுமே எழுதனும்)

எம்புட்டு நாளைக்குத்தான் நாம இப்டி பொலம்பியும், சாபம்விட்டுமே பொழுதைகழிச்சு, காலத்த ஓட்றதுன்னு யோசிச்சிக்கிட்டுருக்கும்போதுதான் அந்தச் செய்தி கண்ணுல பட்டுது. பேசாம நம்மலும் ஒருநாவல் எழுதுனா என்ன? இந்தச் செய்தில ஒரு முழுநாவலும் எழுதுற அளவுக்கு விசயம் ஏராளமாவும் தாராளமாவும் கொட்டிக்கிடக்கு. சரி நாவல்னா அதுக்கு இப்ப ஒரு டார்கெட் இருக்கு. 700ல இருந்து 800 பக்கத்துக்கு எழுதனும். நாம மொதல்ல செய்ய வேண்டியது என்னன்னா, நிதானமா யோசிச்சு இந்த 700-800 பக்கத்த எப்டி ரொப்புறதுங்கிறதுக்கு ஒரு ப்ளூப்பிரிண்ட் போடனும். ஆனா, எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் நிதானமா யோசிக்கவே கூடாதுங்கிறதுல இப்பவே தெளிவா இருக்கணும்.

தமிழ்நாட்டுல ப்ளுமூன் வந்த நெறஞ்ச பவுர்ணமியான இன்னைக்கு ராத்திரி தூக்கத்த துச்சமாக்கி நம்ம ப்ளூபிரிண்ட போட்றது பொருத்தமா இருக்குன்னு முடிவுசெஞ்சுட்டேன். (இன்னிக்கு ராத்திரிபூரா தமிழ்நாட்டு வாசகர்கள் ஒருத்தரும் தூங்காம, ஒவ்வொரு மூனுவருசத்துக்கு ஒருதரமே நடக்கும் அதிசயத்திலும் அதிசயத்த தவறவிடக்கூடாதுன்னு, மூன் எப்ப புளூவாகும்னு நிலாவ பாத்துக்கிட்டே இருந்தாகலாம். அன்னிக்கு  வரைஞர் தொலைக்காட்சில செய்திகள அலசி ஆராய்ஞ்சு பிரிச்சு நாறடிக்கும் நன்முகசந்திரன்கூட நிலா லேசா ப்ளுவா மாறுற மாதிரி தெரிஞ்சாலும் முழுநீள ப்ளுவா மாறாததுல (வாசக)மக்கள் ஏமாந்துவிட்டனர்னு நமுட்டுச் சிரிப்போடவே சொன்னார்)

இப்ப மொதல்ல அந்த செய்தி என்னன்னும் அதோட சாராம்சம் என்னன்னும் பாப்போம்.

– இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே என்ற பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 100 முறையாவது ஆர்கஸம் எனப்படும் செக்ஸ் உச்சநிலை ஏற்பட்டு விடுகிறதாம் – இதுதான் செய்தியே.

செம மேட்டர்ல? அதாவது நாவலின் கரு இதுதான். வாசகர்களை நம்மோட முயற்சி எதுவும் இல்லாமலேயே வாசிப்பின் உச்சத்துக்கு எடுத்துச்செல்ல இதைவிட வேற என்ன சப்ஜெக்ட் கிடைக்கும் சொல்லுங்க?

ப்ளுப்பிரிண்ட்ல நம்ம திட்டம் என்னன்னு கிளியரா எழுதிட்டேன். அதக் கொஞ்சம் பாருங்களேன்:
நம்ம கதாநாயகனுக்கு இந்தப் பிரச்சினை வருது – அதனால அவனுக்கு என்ன பிரச்சினை, அவனது 18 வயது தோழிக்கும், 24 வயதான காதலிக்கும், கூடவேலை செய்யும் 36 வயதான பேரிளம்பெண்ணுக்கும், அதன்பிறகு இவன் வாடகைக்குத் தங்கியிருக்கும் சிறுபோர்ஷனுக்கு உரிமையாளரான 48 வயதில் தனியாக வாழும் பெண்ணுக்கும் கதாநாயகனால் என்னென்ன பிரச்சினையெல்லாம் வருதுங்கிறத, பெண்ணியம் சார்ந்து விவரிக்கும் பின்நவீனத்துவ ஓவியம்தான் எனது காவியம்

மொதல்ல அந்த செய்தில இருக்கிற சாராம்சங்கள எலாபரேட் பண்ணி பிரிச்சி மேஞ்சிறனும். ஒவ்வொரு வரியயும் ஒரு பக்கத்துக்கு வெளக்கி வியாக்கியாணம் பண்ணாலே கொஞ்சம் வால்யூம் வந்துரும். அதே நேரத்துல இந்த செய்திகள மட்டும் ரொம்ப சாஸ்தியா வெளக்கிக்கிட்டே இருக்கக் கூடாது. நாம முழுசெய்தியவும் எடுத்துக்கிட்டோம்னா நாவல் சைஸ் டபுளாயிரும். வெல அதிகமாச்சுன்னா, வாசகர்கள் லேசா முழிச்சுக்கிறதுக்கும், விற்பனை குறையுறதுக்கும் நாமலே காரணம் ஆயிருவோம்.

முக்கியமா இவருக்கு வந்திருப்பது Persistent Genital Arousal Disorder (PGAD) என்ற மருத்துவப்பிரச்சினை என்பதைக் கடைசிவரை சொல்லாமல் நம்ம நாவல் கிளைமாக்ஸ் வரை இழுத்தடித்து விடவேண்டும்.

ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் லேசான அதிர்வும், அசைவும் கூட அவரை கிளைமேக்ஸுக்குக் கொண்டு போய் விடுகிறதாம் என்பதை முடிந்தவரை கிளுகிளுப்பாக எழுதிரணும். இந்த இடத்துல நாம எழுதுற வாசகங்கள ரொம்பக் கேர்ஃபுல்லா டீல் பண்ணனும். நாம ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன்கிறதை, ஒருமாதிரி மயக்கநெலைலயே, நம்ம பின்நவீனத்துவ வாசகன் உணந்துகிட்டேயிருக்கிறமாதிரி இருக்கணும். அப்பப்ப அவனுக்கு ஐஸ் வச்சு பதப்படுத்திக்கிட்டே இருக்கணும்.

முன்னுரைல ஆர்க்கஸம் பத்தி ஏதாவது ஒரு மெடிக்கல் ஜர்னல்ல இருந்து விசயத்த சுட்டு அதுல சம்மந்தப்பட்ட என்ஸைம், ஹார்மோன் பத்தி கொஞ்சம் பின்நவீனத்துவ பீலாவிட்டு, எனக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்னு கொஞ்சம் அவுத்துவிடனும். காசநோய் வந்து எலும்பும் தோலுமாய் படுத்தபடுக்கையாய் இருந்தபோதே ஒருநாளைக்கு 6 தடவை ஆர்க்கஸம் வந்ததாவும், அதுனாலயே ராத்திரிகள்ல ஆம்பள நர்ஸ்கள எனக்கு காவலா போட்டது ஆஸ்பத்திரி நிர்வாகம்னு புருடாவிடனும்.

55 வயசுல ரென்டு முழங்கால்லயும் மூட்டுவலிவந்து, ஒரேநேரத்துல ரென்டுகால்லயும் ஆப்பரேசன் பண்ண மூனாவது நாளே ஜிம்முக்குப் போய் 180 கிலோ வெய்ட் தூக்கும்போது தோள்பட்டைக்கு மேல தூக்குற ஒவ்வொருதடவையும் தலா 2 ஆர்க்கஸம் வந்ததாவும் அப்ப நான் விட்ட சத்தத்தைக் கேட்டு தூரத்துல எக்ஸர்சைஸ் பண்ணிக்கிட்ருந்த 23 வயது இளம்பெண் ஓடியாந்து உடனே நண்பியானதா ஒரு கதைய அளந்துவிடனும்

கதைக்களங்களா ஒரு மலை, ஒரு கடற்கரை, ஒரு தோட்டம், ஒரு வனாந்திரம், ஒரு இந்திய-நேபாள எல்லைக் கிராமம்னு ஒரு 5 லொக்கேஷன் வச்சுகிட்டு, கூடவே ரெண்டு வெளிநாட்டு மாநகரங்கள்ல கதாநாயகன் சம்மந்தப்படாத ரென்டு சம்பவங்கள கிளைக்கதைகளா எடுத்துவிட்டோம்னா பக்கம் எகிறிரும்.

எஸ்எஸ்எல்சி-ல படிக்காம கோட்டைவிட்டபோது அப்பா வீட்டுக்குள்ள வச்சு பெல்ட்டக் கழட்டியும், வீதிலவச்சு (எதுத்தவீட்டுப் பொம்பளப்புள்ள முன்னால) செருப்பக் கழட்டியும் அடிச்சபோது அவமானம் தாங்காம கோச்சுக்கிட்டு வீட்டவிட்டு ஓடி, நாயாப்பேயா அலஞ்சு, நாலே நாளைல எலும்பும் தோலுமா திரும்பிவந்து, அப்பாக்குத் தெரியாம அம்மாட்டயும் அக்காட்டயும் கொஞ்சநாளைக்கு கொல்லப்பக்கத்துல சோறுவாங்கித் தின்ன அனுபவங்கள ஒரு தினுசா எழுதி, ஏதோ கைலாசமலைல ஞானதிருஷ்டி அடைறதுக்காகவே பயணப்பட்ட மாதிரி வாசகன் மண்டைக்குள்ள புகுத்தணும். வீட்டுக்குள்ள செஞ்சத வீதியிலும், வீதியில செஞ்சத வீட்டுக்குள்ளயும், அப்பா செஞ்சிருந்தா நாம ஓடிருக்க மாட்டோம்கிறத வாசகன் உணந்துரக்கூடாது- கூடவே கூடாது.

வீட்ல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கிற முந்திரிக்காட்ல அப்பாக்குப் பயந்து ஒளிஞ்சு திரிஞ்சத எழுதி, ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு போதிமரமா மாத்திரனும். கொட்டைபொறுக்குற சீசன்ல, காட்டுக்குள்ள பொம்பளைப் புள்ளைக ஒண்ணுக்கு ரெண்டுக்கு இருந்தத, தூரத்துல இருந்து பாத்துட்டு ஏதோ 10 இன்ச் தூரத்துல இருந்து நாவல்நாயகன் பாத்ததுமாதிரி சரடுவிட்டுக்கிட்டே இருக்கணும். 60-70 பக்கத்துக்கு அப்பறமா வாசகனுக்கு லேசா சோர்வு தட்டும்போது, இதையே வேறவேற வார்த்தைகள்ல வேற சம்பவம் மாதிரி எடுத்துவிடுவது பக்கங்களை எகிறவைக்கும்.

லொக்கேஷன்களப்பத்தி அப்பப்ப வர்ணிச்சுக்கிட்டே இருக்கணும். உதாரணமா கடற்கரைல உக்காந்து கடலைப்பாக்காம ஊரைப்பாத்துக்கிட்டு கடலுக்கு முதுகைக் காமிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருந்த ஒரு சிறுவன் அணிந்திருந்த கிழிஞ்ச டவுசரில் தெரிந்த ஓட்டைகளின் வடிவத்தில் விரிந்த கதாநாயகனின் கற்பனை விரிசலை பக்கக்கணக்கில் விவரிக்கணும். (கடலுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த சிறுவனின் கிழிந்த டவுசர்னு 6 வார்த்தைல சொல்லக்கூடாது)

மலைல வந்த ஆர்க்கஸத்த சொல்றேன்னு சொல்லிக்கிட்டே அதுல இருக்கிற கருவைமரம், கொளுஞ்சிச் செடி, கோவைக்கொடி இதயெல்லாம் வாசகன் பாத்ததே இல்லங்கிற ரேஞ்சுக்கு வர்ணிக்கனும். கருவைமரத்துல ஒட்டிக்கிட்டு இருக்கும் சில்வண்டு விடும் சவுண்டபத்தி ஒரு 5 பக்கம் எழுதிரலாம். மரத்துல வடியிற பிசினப்பத்தி எழுதி அதை ஆர்க்கஸத்தோட கம்பேர் பண்ணி கிளுகிளுப்பா எழுதி 10 பக்கத்த ஓட்டிரலாம்

முக்கியமா கதையின் காலகட்டம் ஒரு மழைக்காலமா இருக்கணும். அப்பத்தான் மழையையும் பலமாதிரி வர்ணிச்சு பக்கத்த ஓட்டலாம். வெளியே போனான் மழைவந்துச்சு, கம்பி கம்பியா மழை ஊத்துச்சு, வீட்டுக்கு திரும்பும்போது மழை குறைஞ்சுச்சு; ஒவ்வொரு மழைக்கிரணமும் ஒரு வெளக்குமாத்துக் குச்சி ஒயரமே இருந்துச்சு, அது மொகத்துல விழுகும்போது, கதாநாயகனின் சின்னம்மா, சித்தப்பாவ வெளக்கமாத்தால அடிச்சது அவனுக்கு நெனப்பு வந்ததுன்னு ரெண்டுபக்கமாவது எழுதலாம். ஒரு பத்துபக்கம் கழிச்சு மறுபடி மழைவந்துச்சுன்னு ஆரம்பிச்சிற வேண்டியதுதான். எப்பப்ப பக்கம் ஸ்லோவா ரெம்புதோ அப்பல்லாம் மழைவந்துச்சு, துளித்துளியா விழுந்துச்சுன்னு ஓட்ட வேண்டியது.

அடிக்கடி, மீண்டும் மழைவந்ததுன்னு எழுதி, பக்கத்தை நிரப்புறமாதிரி, வெயில்காலமா இருந்தா, வெயில, மீண்டும் வெயிலடிக்க ஆரம்பித்ததுன்னு எழுத முடியாதுல்ல? வர்ணிக்கமுடியாதுல்ல? இதுவரைக்கும் எந்த பிரபலம் இல்லாத எழுத்தாளராவது “அந்த மரத்திலிருந்து வடிந்து விழுந்து கொண்டிருந்த கிளையின் நுனியிலிருந்து தரை நோக்கி நீட்டிக்கொண்டிருந்த ஒரு கொளுந்து இலையின் கீழ்முனையில் இன்று காலையில் அடித்த இளம் வெய்யில் இந்த மதிய வேளையிலும் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது“ ன்னு எழுதிருக்காரா? அப்படி எழுத மாட்டார். பின்நவீனத்துவ வாசகனின் பின்புறத்தில் லாஜிக் இடிக்கும்ல?

அப்புறம் கொஞ்சம் மிருகங்கள் பத்தியும் எடுத்துவிடனும். வேப்பமரத்தின் இலையின் காம்பில் ஒக்காந்திருந்த ஒரு சின்ன செவ்வண்டை வர்ணிக்கும்போது, அது தனது தலையிலிருந்த கொம்புகளை அசைத்துத் திருப்பி, கண்களை உருட்டி , வாயைப்பிளந்து நாயகனை நோக்கி கர்ஜித்ததுன்னு எழுதுற எழுத்துல, வாசகன் மூளைக்கு வரும் உருவகத்தில், ஒரு தேக்கு மரத்தின் இலைக்காம்பில் கவ்விக்கொண்டிருக்கும் தேவாங்கு சைஸுக்கு அந்த வண்டு தெரியணும். ஒரு நரியை அதிசயமான மிருகம்போல வர்ணிக்கனும். அதையெல்லாம் யாரும் டெய்லி பாத்துக்கிட்டே இருக்கிறதில்ல. அப்டியே, பின்னாடி யாராவது நம்ம தப்பை சுட்டிக்காட்டினா, உனக்கு மூளைப்பிறழ்ச்சி இருக்குன்னு கொழப்பிவிட்டு சமாளிச்சுக்கலாம்

குறிப்பிட்ட சில வார்த்தைகள் அடிக்கடி ரிப்பீட் ஆகுறதப்பத்தில்லாம் கவலைப்படக்கூடாது.

== ஒரு காலையில் ஒரு சிறுவன் ஒரு கிளாசை வைத்துக்கொண்டு ஒரு டீக்கு ஒரு வழிபிறக்காதா என்று ஒரு மணிநேரமாக ஒரு தெருவின் முனையில் இருந்த ஒரு டீக்கடையின் வாசலுக்கு அருகே கிடந்த ஒரு பெஞ்சின் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரின் முகத்தை ஒரு சோகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ==

என்று எழுதிய ஒரு பாராவை மேற்கோள் காட்டி, விமர்சகர் ஆதிசேஷ வில்லங்கன் என்பவர் கடுமையாகத் திட்டி எழுதுவார். முழுநாவலிலும் ஒரு என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் 273 பக்கம் குறைகிறதுன்னு ஆதாரத்தோடு சொல்லுவார். அதைக் கண்டுகொள்ளக்கூடாது. பதிலுக்கு அவர் சிறுவயதில் டீக்கடையில் கிளாஸ்கழுவும் பையனாக இருந்தார் என்று ஆதாரமில்லாமல் அவிழ்த்துவிட வேண்டும்.
பிறகு நாவலில் சில வில்லங்கங்களை வேண்டுமென்றே சம்மந்தமில்லாமல் புகுத்தவேண்டும். உதாரணத்துக்கு: கீதை எதிர்ப்பவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை முன் வைக்கிறது என்பது போன்ற வாசகத்தை வைத்துவிடவேண்டும். நிச்சயம் ஒரு விவகாரம் வெடிக்கும். நாவல் பப்ளிசிட்டிக்கு உதவும். ஒரு 100 பக்கம் கழித்து, நாயகன் ஒரு மரத்தில் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருக்கும்போது ஆர்க்கஸம் வருவதை விவரிக்கும்போது ஒரு மகாபாரதக் கிளைக்கதையை நுழைச்சிரணும். அப்போ, அர்ச்சுணன் கண்ணனிடம் எதிரில் நிற்கும் சகோதரர்களை யுத்தம் என்ற பெயரில் கொல்லவேண்டுமா என்று சந்தேகம் கேட்கும்போது, கண்ணன் அர்ச்சுணனிடம் எதிரில் நிற்பது உன் சகோதரர்கள் அல்ல. அதர்மம்தான் நிற்கிறது. அதனை அழித்தொழி என்ற தீவிரமான வாதத்தை முன்வைத்தான்னு எழுதிட்டா, விவகாரம் வரும்போது இதைக்காமிச்சு தப்பிச்சுக்கலாம்.

இசை, மருத்துவம், ஆன்மீகம், தோட்டம்போடுவது, பொறியியல், ஓவியம் இன்னும் இதுமாதிரி எனக்கு சுத்தமா தெரியாத பலதுறைகளப் பத்தி அங்கங்க எடுத்துவிட்டுக்கிட்டே இருக்கணும்.

அப்பறம் இது உண்மையா கற்பனையான்னு ஒரு சந்தேகம் வாசகனுக்கு வந்துகிட்டே இருக்கனும். பின்நவீனத்துவத்துல இது ரொம்ப வசதி. புனைவுன்னு சொல்லிக்கலாம். என் நண்பனோட கதைங்கலாம். ரெண்டுபேரைவிட்டு உண்மைன்னும், இன்னும் ரெண்டுபேரைவிட்டு புனைவுன்னும் விவாதிக்கவிடலாம். நம்மலாவே, நாலு கேள்விய நமக்கே எழுதிட்டு, நம்மளே பதில் சொல்லி வாசகன கொழப்பிவிட்றலாம்.

என்ன பண்ணியாச்சும் ஒரு பதிப்பாளரை இந்தத் தடவை புடிச்சிட்டோம்னா, அடுத்த நாவலுக்கு ஒரு சினிமா பிரபலத்த வளைச்சுரலாம்.

வேறென்ன வேணும்? இந்த ப்ளுப்பிரிண்டயும் அடிக்கடி திருத்திக்கலாம்.
நாவல் வெளிவர்றவரைக்கும் ஏதாவது பிரச்சினைய கெளப்பிவிட்டுக்கிட்டே இருக்கணும். சக பிரபலம் ஆகாத எழுத்தாளர்களை அவமதிச்சுக்கிட்டே இருக்கணும். எல்லாருக்கும் புடிச்ச கதையையோ நாவலையோ நல்லால்லைன்னு சொல்லனும். சீசீன்னு அடிபட்டாலும் கவலைப்படக்கூடாது. எல்லாரும் ஒதுக்குன ஒரு கதையை ஓஹோன்னு பாராட்டனும்.

அவ்வளவுதான் ப்ளுப்பிரிண்ட்.

ஒரு நாலு அஞ்சு நாளைக்கு லீவ் வருது. அப்ப திட்டம்போட்டு ஒருநாளைக்கு இத்தனை பக்கம்னு டார்கெட் வச்சு, அன்னம் தண்ணி ஊண் உறக்கமில்லாம, ஒழைச்சு எழுதி முடிச்சிரவேண்டியதுதான். என்ன லேசா மண்டை கழண்டுக்கிரும். அதுவும் நல்லதுதான் – அபாரமான எனர்ஜி கெடைக்கும். முடிச்சிரவேண்டியதுதான்.

அய்யய்யோ, விடிஞ்சுருச்சே. சாதாரணமா – நாம அதிசயமா, எப்பவாவது பாக்குற – ஒவ்வொரு விடியலுக்கும் ஒரு ஞானோதயம் வருமே? ஏன் இன்னிக்கு வல்ல?

இந்த நேரத்துல ஏன் போன்வருது?

“ஒய், மணி ஏழாகுது, ஆறுமணிக்கு ஏர்ப்போர்ட்ல என்னய சந்திக்கிற ஆளா நீர்? என்னய்யா பண்றீர்? இன்னும் எந்திரிக்கவே இல்லயா?”

“இல்லங்க, ஒரு நாவல் எழுதுறதுக்கு ப்ளுபிரிண்ட் போட்டுக்கிட்ருந்தேன், நைட் தூங்கவே இல்ல, அதான் டயத்தைக் கவனிக்கல”

“அது சரி, அப்ப விடும். நீர் வரவேணாம். நான் இப்ப நேரா என் ஆஃபிஸுக்குப் போறேன். இன்னிக்கு நைட் நான் வந்து மீட் பண்றேன். நாவல்லாம் எழுதி ரொம்பப் பிரபலமாகப் போறீராக்கும். சந்தோசம் ஒய், பை பை நவ்”

அச்சச்சோ! இன்னிக்கு ஞானோதயம் போன் மூலமாவா?

நாவல் எழுதினா நாம பிரபலமாயிருவமே?
அப்பறம் எப்டி தமிழ்நாட்டில் இன்னும் பிரபலமாகாத 3 எழுத்தாளர்கள்ல ஒருத்தரா நிலைநிக்குறது?

வேணாம், நாவலே வேணாம்.
வித்திருவோம்…
நல்ல வெலைகிடைச்சா…
இந்த ப்ளுப்பிரிண்ட்ட…

ஒன்று மட்டும் நிச்சயம் – இந்த ப்ளுப்பிரிண்ட் நாவல் உலகில் ஒரு திருப்புமுனையாகப் போவது மட்டும் நிதர்சனமான நிச்சயம்!

Posted in அசைவம், Uncategorized | Leave a comment

எலி மருந்து.

சிறு வயதில் எங்கள் ஊர் வாரச்சந்தை எனக்கொரு ஃபேன்டஸி. அந்தக் கூட்டமும், அதில் தெரியும் உயிரியக்கமும், ஒருமாதிரி பரவசப்படுத்தும். வியாபாரிகளின் அழைப்புக்களும், அவர்களது பொருட்களின் பெருமைகளை பறைசாற்றும் வித்தியாசமான அடித்தொண்டை விளம்பரக் கதறல்களும், இன்னும் அமைதியே உருவான வயதான ஆண்/பெண் வியாபாரிகளின் இருக்கைகளும், இன்னபிற சண்டை சச்சரவுகளும், அன்றைக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நிறையப் பொருட்களின் காட்சிகளும் என்னைத் தவறாமல் அங்கு அழைத்துச் செல்லும் காரணிகள்

வீட்டிலிருந்து கடைவீதி வழியாகப் போனாலும், கொல்லைப் பக்கத்தில் இருக்கும் நீண்ட வீதி வழியாகப் போனாலும், பஸ்ஸ்டாண்டுக்குள் இருந்த அத்தாவின் கிளினிக்குக்கு சென்றுவிடலாம். புதன்கிழமைகளில் மட்டும் இந்த இரண்டு வீதிகளுக்கும் நடுவில் இருந்த அந்த மிகப்பெரிய காம்பவுண்டுக்குள் இந்த வழியாக நுழைந்து அந்த வழியாக வெளியேறிச் செல்லும் சந்தோசமே தனி. அன்று முழுஊரும் மாலைவரை கூட்டமோ கூட்டம். சில பிரத்தியேக கூவல்கள் தனிக் கவனம்பெறும். கேட்கும் சிறுவர்கள் அதை வீட்டில் ஒத்திகை பார்ப்பது சாதாரணமான ஒன்று.

(எங்கள் ஊர் (மர்ஹூம்) அபுபக்கர் மோதினாரின் பாங்கும் அப்படிப் பட்டதே. எல்லா மத சிறுவர்களும் அவர் மாதிரியே அட்சரம் பிசகாமல் பாங்கு சொல்வோம் – என்ன… ஒரிஜினல் பாங்கின் ஒரு வார்ததை கூட எங்கள் பாங்கில் இருக்காது!! எங்கள் மீது எந்தக் குறையும் இல்லை. அப்படித்தான் எங்களுக்கு அவரது பாங்கு கேட்கும். இப்போதுகூட அதை நினைவுக்குக் கொண்டுவர முடியும் – ஆனால் அதைப் பாடித்தான் காட்ட முடியும்!!!!!)

இந்த சந்தைக் கூவல்களில் பிரசித்தி பெற்றது, வாரந்தவறாமல் வரும் ஒரு எலிமருந்து வியாபாரியின் கூவல்தான். பலவிதமான பொருள்கள் ஒரு நீண்ட மூங்கில் கம்பில் கட்டி எடுத்து வருவார். பூச்சிக்கொல்லிகள், பாச்சுருண்டைகள், பல நிறங்களில் **அர்னா**க்கயிருகள், ஊக்குகள், முள்வாங்கிகள், இன்னபிற ஐட்டங்கள். அவர் ஒரு மாதிரி அடித்தொண்டையில் கூவும் கூவல் எனக்கு மனப்பாடம் – அது இப்படி வரும்:

எலி மருந்து.

எலி, பெருச்சாளிகளைக் கொல்லும் மருந்து

எலி மருந்து.

எறும்பு மருந்து கரையான் மருந்து

செல்லு மருந்து பேனு மருந்து
எலி மருந்து.

 

ஒரு சந்தோசமான சம்பாஷனையில், எங்களுடன் சகஜமாகப் பழகும் என் பெரியமாமுவிடம் இந்த சந்தை சமாசாரங்களை நானும், தம்பிகளும் பகிர்ந்து கொண்டோம். பலவற்றையும் கேட்டுச் சிரித்த அவருக்கு, நான் சொல்லிய இந்த எலி மருந்துக் கூவல் ஏதோ ஈர்ப்பை ஏற்படுத்த, டேய் நீ அந்த எலிமருந்து வியாபாரி சொல்றத மறுபடி சொல்லுன்னார். மேலே அப்படியே மீண்டும் சொன்னேன். சிறிது யோசிப்பதுபோல பாவனைகாட்டி, இன்னொருதடவை சொல்லுன்னார்.

அந்தக் கடைசி *எலிமருந்தை* சொல்லி முடித்த கால்வினாடியில், **அடத்தாலி.. மறுபடியும் எலிமருந்தா?**ன்னு அவர் கொடுத்த ரியாக்‌ஷன் எங்களுக்கு மாதக் கணக்கில் சிரிப்பைத் தந்துகொண்டிருந்தது. யாராவது அழுதால் பெரியமாமு ரியாக்‌ஷனைக் கொடுத்தால் அழுகை அப்போதே காலி. சிரிப்புதான்.

பத்து வருசத்துக்கு முன்னாடி தேரா(துபாய்)வில் நண்பர்களோடு தங்கியிருந்த போது, ஒரு நண்பர் விடும் குறட்டையும் உலகப்புகழ் பெற்றது. சில இரவுகளில் அதிகப்படிக்கு – முழுஇரவும் தூங்கமுடியாமல் – படுத்திவிடுவார். அடுத்தநாள் சொன்னோமென்றால் அப்படியா லேசா தட்டிருக்கலாம்லன்னு அக்கறையா சொல்வார். (தட்றதா – ம்ஹும் நான் கையில் கிடைத்தவற்றை எறிந்தே ஒன்னும் நடக்காது). ஒருமுறை தொடர்ந்து 3 இரவுகள் இந்தக் கூத்து நடக்க, நானும் அடுத்த நாட்களில், **பாய், நேத்தும் கவுத்துட்டியலே?ன்னு சொல்வேன். அவரும் வருத்தப்படுவார்.

நாலாவது இரவும் இது தொடர, ஐந்தாவது நாள், நான், **பாய், என்ன பாய், நேத்தும்**…னு ஆரம்பிக்க, அடுத்த வினாடி அவர், **அடத்தாலி மறுபடி எலிமருந்தான்னு** பெரியமாமு ரியாக்‌ஷனக் கொடுக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரிடம் எப்போது எலிமருந்துக் கதையைச் சொன்னேன் என்று எனக்கு இன்று வரை நினைவுக்கு வரவில்லை..

Posted in Uncategorized | Leave a comment

ஒரே பொகைச்சல்

போன வியாழக்கிழமையன்னிக்கு, புகையிலை இல்லா தினமாம். அன்னிக்கு கிடைக்காதுன்னு மொதநாளே ரொம்பப்பேரு மொத்தமா சுருட்டெல்லாம் வாங்கிவச்சப்பொறம்தான் தெரிஞ்சிச்சாம், எல்லாம் நல்லாத்தேன் கெடச்சுச்சுன்னு – ரேடியோலயே சொன்னாஹல்ல? எங்க நானாவும் அன்னிக்கு வெள்ளச் சுருட்டு கெடைக்காம ,   அலை அலைன்னு (மொத்தம்ஒரு கடைதான்) அலஞ்சும் கிடைக்கலியாம். திரும்பி வந்தா, பக்கத்துல இருந்த பத்து கடைலயும்  இருந்துச்சாம்.  அன்னிக்கு பூராவும் ஒரே  டிப்ஸ்/ யோசனைகள் தான்: எப்டி நிறுத்துறதுன்னு.

அதுல ஒரு டிப்ஸ் எனக்கும் ரொம்பப் புடிச்சிருந்துச்சு. சொன்னவரு ஒரு முனைவர் பட்டமோ மருத்துவ பட்டமோ வாங்குன ஒரு மலையாளி ஆராய்ச்சியாளர். அதாவது புகைக்கணும்னு தோணும்போதெல்லாம் ஒரு குறுமிளகை வாய்ல போட்டு மென்னா சிகரெட் நினைப்பு வராதுன்னார்.

இதை ஒரு நண்பர்ட்ட சொன்னபோது அவர் சொன்னது: இதை ஏற்கனவே முயற்சி பண்ணிப்பாத்தேன். அந்தக் கருமத்துக்கு இந்தக் கருமமே பரவால்லன்னு இருந்துட்டேன்னு கையில பொகஞ்ச சிகரெட்டக் காமிச்சார்.

சரி இவரு போறாருன்னு நேரா நான் போனது நெறய சிகரட் (ஒரு நாளக்கி ஒரு முழு சிகரெட்) குடிக்கும் எங்க நானாகிட்ட; மூச்சு வாங்க வாங்க ரொம்ப ஆர்வமா இந்த யோசனைய சொன்னேன். அவரும் கவுத்துட்டார். எனக்கும் இந்த ஐடியா ஏற்கனவே தெரியும்னு சொல்லி.  அதோட விடலை அவர். இது ரொம்ப நல்ல மெத்தேட்னு ஒரு சர்டிபிகேட் வேற குடுத்தார். எனக்கு ரொம்பக் குழப்பமாயிருச்சு. அவர்ட்ட அந்த இன்னோரு நண்பர் சொன்னதச் சொன்னேன். அதுக்கு அவர் பாவம் நெசம்மாவே இது ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல்ல்ல்ல்ல யோசனையாக்கும்னு சொன்னார்.

எனக்கு ரொம்பக் கொழம்பவும், அப்பறம் நீங்க ஏன் இன்னமும் சிகரெட் குடிக்கிறீங்கன்னு கேட்டேன்; அதுக்கு அவர் சொன்னார்:

“அந்த யோசனை சிகரெட் குடிக்கிறத விடணும்னு நெனைக்கிறவங்களுக்குத்தான் நல்ல யோசனை”

ஹ்ம்ம் இதுக்கு என் யோசனை யே பரவால்லயே!!

Posted in Uncategorized | Leave a comment

ஒரு இசைப்பயணம் – மீள்பதிவு

ஒரு இசைப்பயணம் – மஜீத்

ஆகஸ்ட் 30, 2010 இல் 12:02 மாலை (கஜல், மஜீத்)

ரியாத்-இல் வெந்து கொண்டிருந்த நேரத்தில் உள் மனதில் “நாம் ரொம்ப புத்திசாலியாக்கும்”னு ஒரு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். பின்னே? ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க்கெல்லாம் வாங்கிருக்கோம்ல? எம்புட்டு வாத்தியார்ங்கெல்லாம் ‘அப்பப்ப’ இவன் ரொம்ப புத்திசாலின்னு சொல்லக்கேட்டு அப்புடியே வானத்துல பறந்துருக்கோம்? ஏதோ நம்ம கெட்ட நேரம், இந்த பாலைவனத்துல வந்து மட்டையடிக்கிறோம்னு ரொம்ப நல்லாத்தான் நம்பிக்கிட்ருந்தேன்….ந‌ண்ப‌ர் தாஜ்கிட்ட‌ வ‌ந்து சேர்ற‌(மாட்ற‌)வ‌ரைக்கும். ரெண்டாவ‌து வ‌ருஷ‌ம் chemistry ப‌டிக்கும்போது எல்லார்மாதிரியும் ‘நார்மலா’த்தான்‌ இருந்தேன், பாத்ரூம்ல‌ த‌ன்னால‌ பாடிகிட்டு. என்ன‌மோ யூத் ஃபெஸ்டிவ‌ல்னு சொல்லிட்டு, யுனிவெர்ஸிடில‌ இருந்த‌ 20 காலேஜும் வந்து இற‌ங்கிருச்சு, க‌ல‌ர் க‌ல‌ரா. பல‌வித‌மான‌ நுண்க‌லைப்போட்டிக‌ள். ரெண்டு வ‌ருஷ‌த்துக்கப்புற‌ம் காய‌டிச்சு விர‌ட்ட‌ப்போறாங்க‌ன்னு தெரியாம‌ ரொம்ப‌ ச‌ந்தோஷ‌மா சுத்தித்திரிஞ்ச‌ நேர‌ம். மிமிக்ரி போட்டில‌ அவ‌ன‌வ‌ன் ஆடு மாடு மாதிரி க‌த்திகிட்டுருந்தா‌னுங்க. (ஒருத்தன், சிலோன் ரேடியோ கே. எஸ். ராஜா மாதிரி குரல்ல ஒரு சினிமா விளம்பரம் படிச்சான்) திடீர்னு ஒரு பைய‌ன், திருநெல்வேலி காலேஜாம், மேடைல‌ ஏறி, ப‌ல‌ பாட‌க‌ர் குர‌ல்ல‌ பாடுறேன்னு சொல்லிட்டு, ஃப்ளாட்டா ஒரே குர‌ல்ல‌, ஒவ்வொரு சினிமா பாட்டுல‌ ஒரு ‘பாரா’ பாடிகிட்டு இருந்தான். இதுக்கு நாம பலமடங்கு தேவலையேன்னு, ந‌ம்ம‌ கோண‌புத்தி வேலை செய்ய‌ ஆர‌ம்பிச்சுருச்சு. ஸ்டேஜுக்கு பின்னால போய் விசாரணை: 1. இன்னும் எத்தனை போட்டியாளர்கள் பாக்கி? 15 பேர் 2. போட்டி incharge யாரு? Commerce Asst.Prof. திரு. ராமசாமி இவ‌ர் என‌க்கு கொஞ்ச‌ம் ப‌ழ‌க்க‌ம். ப‌ஸ் ஸ்டாப்ல‌ ஒருநாள் ப‌க்க‌த்துல‌ வ‌ந்து நின்னார். ஸ்கூட்ட‌ர் என்னாச்சு சார்னு கேட்டேன். ஒர்க் ஷாப்ல‌ விட்ருக்கேன்னார். அப்போதுல‌ இருந்து என்ன‌ய‌ பாத்தா சிரிப்பார், ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவார். அன்னைக்கு மாட்னார். போய், சார் ஒரு போட்டில‌ க‌ல‌ந்துக்க‌ணும்னேன். அப்டியா? பரவால்லயே, உனக்கு என்னய்யா தெரியும்? எந்த போட்டில கலந்துக்கிறே? இல்ல சார், இந்த மிமிக்ரி போட்டில..தா..ன்…..னு இழுத்தேன். வ‌ள்ளுனு விழுந்தார். (ஏற்கனவே அவரை காட்டுராமசாமின்னு பசங்க செல்லமா, செல்லமாத்தான், சொல்லுவாங்க) விளையாட்ரியா? என்ட்ரி எல்லாம் க்லோஸ் ஆயி ஒரு வார‌ம் ஆயிருச்சு. போய்யா அந்த‌ ப‌க்க‌ம். ஸார், இன்னும் 15 பேர் பாக்கி இருக்காங்க‌, லிஸ்ட் உங்க‌கிட்ட‌தான் இருக்கு,சேத்துக்கிங்க‌ சார், நிச்ச‌ய‌ம் வ‌ருத்தப்ப‌ட‌ மாட்டீங்க‌ சார்னு, கெஞ்சுனேன். அழுதிருவ‌னோன்னு அவ‌ர் ப‌ய‌ந்துருக்க‌ணும், மூணு ரூபாய் வாங்கிட்டு, ர‌சீது போட்டுட்டு, அடுத்த‌ நாலாவது ஆளா, மேடையில‌ ஏத்தி விட்டுட்டார். அந்த‌ திருநெல்வேலி பையன் செஞ்ச‌தை நான் ப‌ண்ணேன். அன்னைக்கு முழுநாளும் தெரிஞ்ச‌வ‌ன், தெரியாத‌வ‌ன், தெரிஞ்ச‌,தெரியாத‌ பேராசிரிய‌ர்க‌ள்னு ஒரே பாராட்டு ம‌ழை. அதுக்க‌ப்புற‌ம் காலேஜ் ஃபங்ஷ‌ன்ல‌ எல்லாம் ஒண்ணு ரெண்டு பாட்டு. மூணாவ‌து வ‌ருஷ‌ம் முடிஞ்ச‌தும் ஒரு லோக்க‌ல் ஆர்க்கெஸ்ட்ரால‌ சேந்து லூசு மாதிரி சுத்துனேன். சுதி, தாளம், டைமிங், ஓபன் பண்ணாம பாடணும், தொண்டையில இருந்து பாடக்கூடாது, அடி வயித்துல இருந்து பாடணும்னு ஆளாளுக்கு அட்வைஸ். அதுக்க‌ப்புறம் “எல்லாம்” முடிஞ்சு, ச‌வூதில‌ போய் பொத்துன்னு விழுந்து, தாஜ் முன்னால‌ எந்திருச்சா, ம‌னுஷ‌ன் கொஞ்ச‌ம்கூட‌ அல‌ட்டிக்கிராம‌ பேசிப்பேசி, என்ன‌ய‌ ஒரு அரை லூசு லெவ‌லுக்கு கொண்டுவந்துட்டார். பின்ன‌? என்னோட‌ இன்ட‌ல்லிஜென்ஸ் என்ன‌, ஜென்ர‌ல் நால‌ட்ஜ் என்ன‌, எல்லாத்த‌யும் தூக்கிப்போட்டுட்டு, எலிமென்ட்ரி ஸ்கூல்ல‌ சேத்துவிட்டுட்டாருல்ல? (க‌ணையாழி ப‌டிய்யா..) அதுதான் போகுது, என்னோட ‘இசைஞான’த்தையாவ‌து ஏத்துகிட்டு இருக்கலாம். இல்ல‌, ஏத்துக்கிறாம‌யாவ‌து இருந்திருக்கலாம். ம‌றுப‌டி அதுலயுமா என்னை அரை லூசாக்கணும்? ஒருநாள் சாயிந்தரம் ‘பத்தா’வுக்கு போகும்போது, (வேற எதுக்கு‍ மலையாள சினிமா காஸெட் வாங்கத்தான்), யோவ், மத்தியானம் ஒரு பாட்டு கேட்டேன்யா, இதுக்கு பேரு “கஸல்”, ஒரு பாகிஸ்தானி பாட‌க‌ர் பாடிருக்கார். கேட்டுப்பாரு, அருமையா இருக்குய்யான்னு தூப‌த்தை போட்டுட்டு, காஸெட்ட‌ அவ‌ர் வ‌ண்டிலயே போட்டு கேக்க‌ சொன்னார்.

அன்னிக்கு க‌ல‌ங்குன மூளை இன்னும் தெளிய‌ல‌. அந்த‌ ஒரு க‌ஸ‌ல் ப‌டுத்துன‌ பாடு கொஞ்ச‌நஞ்ச‌மில்ல‌. ‘அந்த‌ பாட‌க‌ர்’ ம‌ட்டுமில்லாம‌, த‌ல‌த்அஸீஸ், அன்னிக்கு யாருக்கும் தெரியாம‌ இருந்த‌ ஹ‌ரிஹ‌ர‌ன், ரூப்குமார் ர‌த்தோட், வினோத் ர‌த்தோட், ப‌ங்க‌ஜ் உதாஸ், ஜ‌க்ஜித்(சித்ரா)சிங், பூபிந்த‌ர்(மிட்டாலி)சிங், இதுபோக‌ மெஹ்தி ஹ‌ஸ‌ன், ஆபிதா ப‌ர்வீன், அனூப் ஜ‌லோட்டா அது இதுன்னு வெறி புடிச்சு அலைஞ்சு, பாதி புடிச்சு பாதி புடிக்காம‌, க‌டைசில‌, ஜ‌க்ஜித்சிங்&சித்ரா அப்புற‌ம் புபிந்தர்சிங்&மிடாலி, குலாம் அலின்னு, செட்டில் ஆயிட்டேன். இன்னிக்கு 20 வ‌ருஷ‌மா, இவுங்க பாட்டைப் ப‌த்தி யாராவ‌து பேசுனா அவுங்க‌ என‌க்கு நெருங்கின‌ சொந்த‌க்கார‌ங்க‌ மாதிரி. எங்க‌ இவுங்க‌ க‌ஸ‌ல் கேட்டாலும் ஏற்க‌ன‌வே அதை 1008 த‌ட‌வை கேட்டுருந்தாலும், நின்னு கேட்டுட்டு,சேந்து பாடிட்டுப்போவேன். இதுல என்ன விசேஷம்னா, ஒரு நாலஞ்சு வ‌ருஷ‌த்துக்கு முன்னால‌ வ‌ரைக்கும் உருது/ஹிந்தி ல‌ ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரியாது. (இப்போ எப்டியும் 25% தெரியும்ல‌?)ஏதாவ‌து காஸெட் வாங்க‌னும்னாகூட‌ ந‌ல்லா சொல்லி கேக்க‌ தெரியாது. இப்போ மாதிரி அப்போல்லாம் புடிச்ச‌ க‌ஸ‌ல இன்டெர்நெட்ல தேடி, கேக்க‌ முடியாது. ஒரு புபிந்த‌ர்சிங் க‌ஸ‌ல். 10 வ‌ருஷ‌மா தேடுனேன். ரெண்டு வ‌ரிதான் தெரியும். க‌டைசில‌, ரெண்டு வ‌ருஷ‌த்துக்கு முன்னால‌ விய‌ட்னாம்  ஹ‌னோய்ல‌ இருக்கிற‌ ஒரு இந்திய‌ன் ரெஸ்ட்டாரென்ட்ல‌ கேட்டேன். அங்கேயே அரைம‌ணி நேர‌ம் இருந்து ஓன‌ர் வ‌ந்த‌வுட‌னே, ஆல்ப‌ம் பேரு கேட்டு, க‌ண்டுபுடிச்சேன். அதையும் இங்க‌ இணைச்சுருக்கேன். கேட்டுப்பாருங்க‌. (ர‌ம‌ளான் க‌ழிச்சு கேக்குற‌து உசித‌ம்!!!!)

Download

சிங்கப்பூர் முஸ்தஃபா சென்டருக்கு பக்கத்துல ஒரு ஹோட்டல்ல கஸல் பாடுற ஒரு நேபாளி ஜோடி, என்னோட request ஒண்ணு கூட பாட முடியாம, அந்த ஆளு எந்திரிச்சு எங்கிட்ட வந்து, சாரி சொன்னார், பாவம்.

என்ன‌ய‌ இந்த நில‌மைக்கு ஆளாக்குன‌து:குலாம் அலி (ஆல்பம்:ஆவார்கி. க‌ஸ‌ல்: ஹ‌ங்காமா ஹை க்யூங்) இணைச்சுருக்கேன். கேளுங்க‌, பின் விளைவுக‌ளுக்கு நான் பொறுப்ப‌ல்ல‌.

Ghulam Ali – Hangama Hain Kyun

Enjoy : Ghulam Ali’s Hangama Hai kyon barpa (Youtube)

ஆனா பாருங்க‌, என்ன‌ய‌ அரைலூஸா ஆக்கிட்டு, தாஜ் த‌ப்பிச்சுக்கிட்டார். ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆள். என்னோட‌ ப‌ழைய “இசைப்பய‌ண”த்த‌ப்ப‌த்தி அவ‌ர்ட்ட‌ சொல்லிருந்தும், எங்க‌ ஒரு பாட்டு பாடிக்காட்டுய்யான்னு சொல்ல‌லைன்னா பாத்துக்க‌ங்க‌ளேன்? ஒரு குர‌ல்: தாஜ் அரைலூஸாக்கிட்டாருன்னே சொல்றீரே, அதுக்கு முந்தி நிம்ப‌ரு என்ன‌வா இருந்தீரு? ப‌தில்: முழு லூஸு!

நன்றி : ஆபிதீன் பக்கங்கள்’

*

மேலும் பார்க்க :  பாகிஸ்தானிய இசைத் தூதர்கள் – விக்கி

Posted in Uncategorized | Leave a comment

ஹாஜியார் ஜோக்

ஹாரிபிள் ஹஜரத் ஜோக்கைப் பதிவதற்கு முன் அதை ‘உன் பிளாக்லயே போடேன்யா’ என்ற ஆபிதீன் நானாவிடம், ஒரு ஆசை வார்த்தை சொன்னேன். இதைப் போட்டீங்கன்னா, ஒரு ஹாஜியார் ஜோக் இலவசம்னு.

ஏமாறுவது அவருக்கு புதிதல்ல.
ஆனால் ஏமாற்றுவது எனக்குப் பழக்கமல்லவே?
அதனாலயே இப்ப அந்த ஹாஜியார் ஜோக் .

இதையும் போட்டார்னா, ஒரு ‘மோதினார்’ ஜோக் பின்னாலயே வரும்னு சொல்லிப் பார்த்தும் பயனில்லை!
ஏதோ நல்ல ஜோக்கா இருக்கும்னு நினச்சு, அவர் ஏமாந்துருவார்னு ஒரு நப்பாசை.
ம்ஹூம். முழிச்சுக்கிட்டார்.

அந்த ஹாஜியார் ஜோக் இதோ:

இந்த ஜோக்கை எனக்குச் சொன்னவர் நிஜத்தில் ‘இபாதத்’தான, குமரி மாவட்டத்து நண்பர்.
இவர் தினமும் ஃபஜ்ருக்கு எழுந்து, குளித்து, தொழுது வேலைக்குச் செல்லும்வரை, தூங்கும் மற்ற நண்பர்களுக்கு ஒரு சிறு சத்தம்கூட கேட்காதிருக்கப் பிரயாசைப்படுவார்.

இதை அவர் சொல்லிட்டு, சிரிச்சு முடிஞ்சதும் ‘மஜீதுபாய், இது நிசம்மாவே நடந்ததாக்கும்’னு ஒரு குண்டை வேறு தூக்கிப் போட்டார்.
நிசம்மாவா இருக்கும்?
சேச்சே இருக்காது. (யாரோ ஒரு குசும்பர் அவர்ட்ட ச்சும்மா சொல்லிருப்பார்)

ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடிய ஒரு சிறு கால்வாயைக் கடக்க அந்த கிராமத்தினர், ஒரு சிறிய கயிற்றுப் பாலம் அமைத்திருந்தனர். அதன்மூலமே மக்கள் அடுத்த ஊருக்கு நடந்து செல்லமுடியும்.

ஒருநாள் பிறவிக்குருடனான ஒருவர் அந்தப் பாலத்தைக் கடக்க முயலும்போது, பாலம் லேசாக ஆடியதுபோல உணர்ந்தார்.

சிறிது நின்றுவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பிக்க, பாலம் மறுபடியும் ஆடியது.

நின்றார். பாலம் ஆடுவதும் நின்றது.

பின் ஏதோ முடிவெடுத்தவராக தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
பாதி கடந்ததும், பாலம் ஆடுவது மிகவும் அதிகமானது. அவரால் நடக்க முடியவில்லை.

உடனே அவர் மிகுந்த சத்தத்துடன் “ஹாஜியாரே பாலத்தை ஆட்டாதீங்க, ஹாஜியாரே பாலத்தை ஆட்டாதீங்க” ன்னு கூச்சலிட ஆரம்பித்தார். பாலம் ஆடுவது நின்றது.

பாலத்தைக் கடந்ததும் ஒரு குரல் கேட்டது:
“ஏம்ப்பா, நீதான் பிறவிக்குருடனாச்சே, நானும் ஒரு சத்தமும் போடலை. பாலத்தை ஆட்டுனது நான்தான்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுச்சு?”

அதுக்கு அந்தக் குருடர் சொன்னாராம்:
“நீங்க இப்ப ஹாஜியார்தான். இல்லைங்கலை. ஆனா இந்த மாதிரி ஒரு வேலையைப் பண்றதுக்கு உங்களை விட்டா நம்ம கிராமத்துல வேற யாரும் இல்லீங்களே?”

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!

இந்த வருடத்தின் முதல் பதிவாக, “ஆபிதீன் பக்கங்களில்” 2010ன் கடைசி பதிவாக வந்த எனது இடுகையை உங்கள் பார்வைக்கு வைத்து, மாச்சர்யங்களற்ற சமுதாயம் தழைத்தோங்க விழைகிறேன்.

நல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத் 

நல்ல மனங்கள் சங்கமமாகட்டும், நலன்கள் சூழட்டும், புது வருஷம் புன்னகையில் பூக்கட்டும், வாழ்க வளமுடன்! – இஜட். ஜபருல்லாவின் எஸ்.எம்.எஸ். வழக்கமான வாழ்த்தாக தோன்றுகிறதா?                       பிடியுங்கள் மஜீதை.   2010ன் கடைசி பதிவாக , அவர் எழுதிய ‘நல்லிணக்கம்’ வருகிறது.  இணக்கம்தானே இன்று இல்லாதது? அதனால் இந்தப் பதிவு. கோவை சரளா மாதிரி இருக்கிற அஸ்மாவும் கோட்டான் மாதிரி இருக்கிற நானும் இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருக்க என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்? ஒரு இணக்கம்தான்! புதுவருட வாழ்த்துகள்! – ஆபிதீன் ***

நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம் 

மஜீத்

ஹமீத்ஜாஃபர் நானாவின் ‘தோற்றம்’ படித்தபின் , திட்ட வந்த நிறையப்பேர் பாதிவழியில் திரும்பி(ந்தி)ப் போய்விட்டதாக நம்புவோம்.

ஆபிதீன் பல நல்ல(!) விஷயங்களை அடிக்கடி நினைவூட்டினாலும், ‘நல்லிணக்கம்’ பற்றிய அவரது அழுத்தமான பார்வையும், மீண்டும் மீண்டும் அதற்கு மறுவலுவேற்றி (Reinstate), அதை மீள்-நிறுவக்               (Re-establish) காட்டும் அவரது அலாதியான பிடிவாதமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த நல்லிணக்கம், எனது பசுமரத்தில் இறங்கியது இப்படித்தான். 1975ல் நிகழ்ந்த ஒரு 5 நிமிட சந்திப்பின் விளைவு அது. குமரன் பற்றிப் படித்தவுடன் குன்று ஞாபகம். என் தந்தையின் சொந்த ஊர் குன்றக்குடி என்ற குன்னக்குடி. இரு பெயர்களும், ஒரு குன்றின் மேலுள்ள முருகன் கோவில் தவிர வேறொன்றும் இல்லாத, இந்தச் சிறிய கிராமத்துக்கு இன்றளவிலும் விளங்கி வருவது ஆச்சர்யமே. குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் குன்றக்குடி அடிகளார் பெயர்களை மாற்றிச் சொல்லிப்பார்த்தால் பொருந்தாது.

எப்போது இந்த ஊரைத்தாண்டிப் போனாலும் ஊரில் கடைசியில் ரோட்டோரம் உள்ள ஒரு சிறிய ‘மையத்தாங்கரை’யைத், திரும்பிப் பார்த்துச் செல்லும் சமயங்களில், என் தந்தை எனக்கு 7 வயது குழந்தை போலத் தெரிவார். சிலசமயங்களில் இறங்கி அருகில் சென்று தனது தாய்/தந்தை அடக்கம் செய்த இடத்தில் நின்று ஃபாத்திஹா ஓதுவார்.

அன்று மாலைநேரத்தில் குடும்பத்தோடு நாங்கள் சிவகங்கைக்கு ஒரு திருமணத்திற்குச் செல்லும்போது, பெய்து கொண்டிருந்த மழை, குன்றக்குடியை நெருங்கியதும் மிகவும் கனத்துப் பெய்தது. மெதுவாகப் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை ஓரங்கட்ட முயற்சித்த என் தந்தை, மிகமிக மெதுவாகச் செலுத்தி, முன்னால் ஒரு சைக்கிளில் ஒரு குடையுடன் சென்றுகொண்டிருந்த இருவர் அருகே சென்று வண்டியை நிறுத்தியபடி அவர்களைக் கூர்ந்து நோக்கினார். (அவர்கள் முகத்தில் சிறிது எரிச்சல், கொட்டும் மழையில் வண்டி மிக அருகில் வந்து நின்றதால்).

அடுத்த வினாடி எப்போதும் முன் ஸீட்டில் அமரும் என்னைப்பார்த்து, தம்பி நீ பின்ஸீட்டுக்குப் போ என்று சொன்னபடி, வெள்ளை வெளேர் கதருடையில் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சுமார் 60 வயதுடைய அந்தப் பெரியவரை, நான் திறந்த கதவினூடே பார்த்து, சிறிது உணர்ச்சிவயப்பட்டு, உரத்து, “முதலாளி! வாங்க உள்ளே” என்றார். அவர் முகத்தில் இன்னும் எரிச்சல் போகவில்லை. குழம்பியவராக, ‘நீங்க யாருன்னு தெரியலயே’ என்றவர், (இதற்கிடையில் நான் பின்னால் சென்றுவிட்டேன்) வண்டிக்குள் ஒரு நோட்டம் விட்டு, ஒரு முஸ்லிம் குடும்பம் இருப்பதை அறிந்து சிறிது ஆசுவாசமானர். “முதலாளி நீங்க முதல்ல உள்ள வாங்க முதலாளி, மழை ரொம்பப் பெய்யுதுல்ல? வாங்க உள்ளே, சொல்றேன்” என்று அழுத்தவும் குடையைக் கூடவந்தவரிடம் கொடுத்து, நீ வீட்டுக்கு வந்துருன்னு சொல்லி, வண்டிக்குள் வந்தமர்ந்து கதவைச் சாத்தினார்.

அவரிடம் என்னைத் தெரியலயா? என்று கேட்டுத் தன் பெயரோடு அறிமுகப்படுத்தினார் என் தந்தை. அவருக்குத் தெரியாதுபோகவே, வருஸை ராவுத்தர் மகன் என்றார். உடனே அவருக்குப் புரிந்து, அடடே, நீங்களா, நல்லாருக்கீங்களா? எந்த ஊர்ல இருக்கீங்க? எத்தன குழந்தைக? வண்டி எப்ப வாங்குனிய? என்று மூச்சுவிடாமல் நிறையக் கேள்விகள். என் தந்தை பதில்கள், நிறைய “முதலாளி” களோடு. (பின்னாலிருந்த என் 3 தம்பிகளில் பெரியவன், 17,18 என்று ‘முதலாளி’களை எண்ண ஆரம்பித்துவிட்டான்) ஒரு 5 நிமிடத்தில் அவரை இறக்கிவிடுமுன் நிறையப் பேசினார்கள். பின்னாலிருந்த தாயும் 5 பிள்ளைகளும் அவர்கள் பேசியதைவிட அதிகமாகக் குழம்பிக் கொண்டிருந்தோம்.

காரணம், நாங்கள் என் தந்தையாரின் மிகச்சிறிய வரலாறை நன்கறிவோம். அந்த ஊரில் நன்றாய் வாழ்ந்த என் பாட்டனார், எனது தந்தைக்கும் அவரது 2 தம்பிகளுக்கும் முறையே 7, 5, 2 வயதாகும்போது, காசநோயால் மவுத்தாகி விட்டார். அடுத்த 6 மாதங்களில் மூவரும் தாயையும் இழந்தனர்; அதே நோய்தான் காரணம். (இந்த Streptomycin ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்க அத்தாவும் அம்மாவும் மவுத்தாகிருக்க மாட்டாங்க. 7 வயது குழந்தையாகவே சொல்வார்) மிகக்குறைந்த காலத்திலேயே அனைத்தையும் இழந்து 3 பேரும் சிதறிவிட்டனர். என் தந்தை அப்போது அம்மாபட்டினத்திலும், பிறகு முத்துப்பேட்டையிலும் இருந்த அவரது அண்ணன் டாக்டர். எஸ். ஏ. கரீம் அவர்களிடம் அண்டி, கும்பகோணம்       Dr. சீனிவாசன் நடத்திய ஹோமியோபதி கல்லூரியில் சான்றிதழ் வாங்கி, 17 வயதில் தன்னந்தனியாக வாழ்க்கையைத் துவக்கியவர். இடையில் நிகழ்ந்த பலவற்றையும் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த “முதலாளி”???? யார் இவர்?????????????? இதுதான் எங்கள் குழப்பம்.

அவரை சொன்ன இடத்தில் இறக்கி விட்டவுடன் கேட்டோம்.

சொன்னார்: “இவர் பெயர் ‘குன்னக்குடி முத்தையா’. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் ஏதோ பதவியில் இருக்கிறார்.”

சரி, நீங்கள் ஏன் முதலாளிங்கிறீங்க? மீண்டும் சொன்னார்: திருப்பத்தூர் தாண்டி மதகுபட்டி வரை கதை நீண்டது.

அவருக்கு 9 வயது இருக்குமாம். பஞ்சமாம். ரேஷன் பொருள்களுக்கு மிகவும் மதிப்பாம். வசதியானவர்களும் ரேஷன்கடை பொருள்களை வாங்குவார்களாம். இவர் ஒரு ரேஷன் கடையில் சில காலம் வேலை பார்த்தாராம். (அப்ப ஒரு போலீஸ்காரர் எனக்கு சல்யுட்லாம் அடிப்பார் – சிரிப்பு) அந்த ரேஷன் கடையை நடத்தியவர் இவர்தான் என்றார்.

அந்தக் காலத்தில் மிகவும் வசதியாக இருந்தார்கள். மலேசியா போக்குவரத்து. ரொம்ப முற்போக்கான குடும்பம். (அப்பனும் மகனும் ஒண்ணா உக்காந்து சிகரெட் குடிப்பாங்க – சிரிப்பு). அவரை அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியாகச் சொன்னார்: “ஹரிஜன்” (இப்போது நாம் மரியாதையான வார்த்தையாக நினைக்கும் ‘தலித்’ என்பதை அப்போது இப்படிச் சொல்வது மரியாதை. காந்தியார் சொன்னதல்லவா?)

2

நான் அதற்குப் பிறகு 3 முறை திரு. குன்னக்குடி முத்தையா அவர்களைப் பார்த்திருக்கிறேன். பேசுவதற்கு ஆசை, ஆனால் மூன்று முறையும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதல்முறை ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அவரிடம் சென்று பேச வாய்ப்பில்லை. இரண்டாம் முறை காரைக்குடியில் நிறைய கதர் வேட்டிகளோடு நடந்து சென்று கொண்டிருந்தார். பேச முடியவில்லை. மூன்றாம் முறை பார்த்தது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது. எக்ஸாம் முடிந்ததும் டவுனுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, ‘ஹாஸ்டல் ஸ்டாப்’பில் நின்றுகொண்டு அப்போது முதலாம் ஆண்டு படித்த எனது நண்பன் ‘பாரி’யுடன் பேசிக்கொண்டிருந்தார். பஸ் போய்க்கொண்டிருந்ததால் இப்போதும் பேசமுடியவில்லை.

(பாரி பற்றி: தமிழ் வகுப்புக்கு வெளியில் பேராசிரியர் பார்க்காதபடி நின்றுகொண்டு எனது இன்னொரு நண்பனிடம் சைகையில் பேசிய அவனை நாங்கள் மாணவன் என்றே நினைக்கவில்லை. அவன் சைஸ் அப்படி.  உயரம், அகலம், முகச்சாயல், பெரிய கருப்புக்கண்ணாடி, பளபள உடை எல்லாம் அப்படியே அன்றைய சினிமா ஹீரோ சிவச்சந்திரன். யார்ரா இவர்? கேட்டால் நண்பன் சொன்னான்: சின்னப்பயல் ஃபர்ஸ்ட் இயர். பேர் பாரி)

நான்கு நாள் கழித்து, பாரியைப் பார்த்தபோது கேட்டேன்: டேய், அன்னிக்கு உன்னைப் பார்த்தேன். ஹாஸ்டல் பக்கத்துல குன்னக்குடி முத்தையா உன்கிட்ட பேசிக்கிட்டு நின்னார். உனக்கு அவரைத் தெரியுமா?

அவன்: தெரியும். பேரெல்லாம் சொல்றே? உனக்கும் அவரைத் தெரியுமா?

நான்: ம். அது பெரிய கதை. அவரை உனக்கு எப்டி தெரியும்?

அவன்: டேய் அவர் எங்கப்பாடா.

பி.கு.: இங்கே  நான் சொல்லிருக்கிற ஆர்க்கெஸ்ட்ரால, முதமுதல்ல என்னய பாடசொன்ன பாட்டு: ‘திருத்தணிகை வாழும் முருகா’. நான் கொஞ்சம் தயங்கி, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடிட்டு அப்பறம் அதைப்பாடவா? என்றேன். ‘நீ எதுக்குக் கேக்குறேன்னு எனக்குத் தெரியும். இன்னொரு நாள் எனக்கு ரொம்பப் பிடித்த ‘அல்லாவை நாம் தொழுதால்’ நீ பாடலாம், இன்னிக்கு அது முடியாது’ என்றார், கிறித்தவரான குழுத்தலைவர் இருதயராஜ்.

நன்றி: ஆபிதீன்

Posted in மீள்பதிவுகள் | Leave a comment