ஐந்து நிமிடக் காவியம்

சமீபத்தில் மூளைக்குள்  நிஜப்பாதிப்பேற்படுத்திய, ‘ஈசன்’ படத்தில் வரும் “ஜில்லாவிட்டு” பாடலாக்கம், நேர்த்திக்கு ஒரு உதாரணம்.

முதல்தடவை பார்க்கும்போதே மோகன் ராஜனின் பாடல்  வரிகளின் அர்த்தங்கள் உள்ளுக்குள் ஊடுருவுகின்றன.

அப்பனின் அறியாமை காட்டும் தனிமனித அவலம்.கடமை கழிக்கும் பொருந்தாத் திருமணம் காட்டும் சமூக அவலம்.சொக்கனின் அலட்சியத்தால் கடவுளுக்கும் ஒரு குட்டு.

இயலாக் கணவனையும் காக்கும் பெண்மையின் பொறுப்பும், அதனாலேயே அவளடையும் பெரும் இழப்பும், மீசைகளின் சுற்றல்களும்  சமூகத் துரத்தல்கள்.

‘உசிரைவிட மானம் பெரிசுன்னு, புத்திக்குதான் தெரிஞ்சுச்சு;வயிறு எங்கே கேட்டுச்சு? அதனால எல்லாத்தையும் விக்கிறேன்’னு முடிக்கிறாள் இந்த 5 நிமிட நாயகி.

இறுதியில் எல்லோரும் சோகமானதை பார்த்துவிட்டு, தொழில் கெட்டுவிடுமோவெனப் பயந்து கடைசியாய் ஒரு ஆட்டம் போட்டு உசுப்பேற்றுவதிலும் ஒரு உள்சோகம்.

இந்த வரிகளுக்கு, ஜேம்ஸ் வசந்தனின் அருமையான இசையும் தேர்ந்தெடுத்த புதுப்(?) பாடகியான தஞ்சை செல்வியின் உயிரூட்டமான குரலும் நேர்த்திக்கும் நேர்த்தி.

எல்லாவற்றுக்கும் மேலாக, படமாக்கிய சசிகுமாரின் தேர்வான சுஜாதாவின் பங்களிப்பு ஒரு பிரமிப்பு. பாடலின் ஒவ்வொரு வினாடியிலும் அவரின் ஆக்கிரமிப்பு. சோகமும் கோபமும் முகத்தில் ஒருசேரப் பிரதிபலிக்கும் ஜாலம். நடக்கும் ஒவ்வொரு அடியிலும் விரக்தியின் வீச்சு. இவர் வேறு யாருமில்லையாம், தளபதியில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள” யில் குதித்தாடும் ‘குதிரைவால்’தானாம். இப்போ இவரும் ஒரு டான்ஸ் மாஸ்டராம்.

நடன இயக்குநர் தினேஷ் மிகக்குறைந்தபட்ச அசைவுகள் மூலம் வெளுத்துக் கட்டிவிட்டார். அதிலும் சுஜாதாவுக்கான கடைசிக்கட்ட, மிகமிகமிகக் குறைந்தபட்ச அசைவுகளால் அவர் கொடுத்த உயிர் ‘பிரமாதம்’.

பாடல் துவக்கத்தில் “மூன்று கைலிகளும் முப்பது விரல்களும்”  ஜாலங்கள் புரிவதும் அற்புதம்.

எனக்குள்ள வருத்தங்கள் இவைதான்:

  1. இப்பாடல் “கத்தாழை கண்ணாலே”க்குப் பிறகு தமிழ்நாட்டை கலக்கிய ஒரு ‘குத்துப்பாடல்’ என்று மட்டும் முத்திரை குத்தப்பட்டு, சில நாட்களில் மறக்கப்பட்டு விடும்.
  2. பாடகி தஞ்சை செல்வி இப்பாடலோடு மட்டுமோ அல்லது மேலும் சில பாடல்களோடோ காணாமல் போவார்
  3. மோகன் ராஜன் அதிர்ஷ்டத்தின் தயவை மட்டும் நம்பியிருக்க வேண்டும்
  4. சுஜாதாவை யாரும் நினைவில் கொள்வது உலக அதிசயங்களில் ஒன்றாகிவிடும்

மேற்கண்டவை பொய்யாகுமா?

Posted in சினிமா, Uncategorized | 3 Comments

ஷூ பிரஷ்

*இது வயசுப்புள்ளைகளுக்கான கதை. அதனால் வயது வந்தவர்கள் படித்து விட்டுத் திட்டலாம்*

 

மிகவும் நெருக்கமான ஒரு தம்பதிகளுக்கிடையில் ஒரே ஒரு சிறிய பிரச்சினை. ரொம்ப நாளாகவே. அது வேறொன்றுமில்லை. அடிக்கடி கணவன் இரவில் தாமதமாக வீட்டுக்கு வருவதை வழக்கமாகவே ஆக்கிவிட்டான்.

மனைவியும் பல தடவை கெஞ்சி, அறிவுறுத்தி, கோபப்பட்டு பலவாறாகச் சொல்லியும் அவன் கேட்கவில்லை. தன்னால் நொந்துபோய் ஒருநாள் கொதித்துவிட்டாள். இன்று இரவு சீக்கிரம் வீடு திரும்பவில்லையென்றால், நான் நிச்சயமாகக் கதவைத் திறக்க மாட்டேன். இது உறுதி, வெளியில்தான் தூங்கவேண்டும்; ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினாள்.

இரவும் வந்தது. கணவனும் வந்தான். அன்றும் தாமதமாக. கதவைத்திறக்க மறுத்துவிட்டாள். கெஞ்சினான். இன்றுதான் கடைசி என்றான். அவளோ சிறிதும் இறங்கி வராமல், நீ இதுபோல் பலதடவை சொல்லிவிட்டாய். இனி இது நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் இன்று வெளியில் தூங்கு; அப்போதுதான் உனக்கு புத்தி வரும் என்று கறாறாய் சொல்லிவிட்டு ஜன்னலைப் படீரென்று அடித்துச் சாற்றிவிட்டாள்.

ஐந்து நிமிடம் பொறுத்தவன், கதவை மெதுவாகத் தட்டினான். கோபத்துடன் கதவைத் திறந்தவள், என்ன? என்றாள். சரி ஒரு பாயும் தலையணையும் கொடு என்றான். பரிதாபப்பட்டவள், இரு தருகிறேன் என்று சொல்லி, அது இரண்டையும் வெளியே எறிந்தாள். பொறுக்கிக் கொண்டான்.

பத்து நிமிடங்கழித்து, மீண்டும் கதவைத்தட்டினான். கடுப்புடன் ஜன்னலைத்திறந்தவள், இப்போ என்ன? என்று கடுமையாகக் கேட்டாள். குளிருது, எனது போர்வையை மட்டும் கொடு என்றான். இதுதான் கடைசி முறை. இனித் தொந்திரவு பண்ணாதே, நான் தூங்கணும் என்று சொல்லி போர்வையைத் தந்துவிட்டு படுக்கச் சென்று விட்டாள்.

அரை மணி நேரம் கழிந்தது. மறுபடி கதவைத் தட்டினான். நீண்ட நேரத்துக்குப் பிறகு, குரல் மட்டும் கொடுத்தாள்: முடியாது, வரமாட்டேன், முதலிலேயே சொல்லிவிட்டேன், காலையில் பேசிக்கொள்ளலாம், தூங்கு என்றாள்.

அவன் சரி, இதுதான் கடைசித்தடவை, இனிமேல் தொந்திரவு செய்ய மாட்டேன், இந்த ஒருதடவை மட்டும் நான் கேட்பதைக் கொடு, பிளீஸ், என்றான்.

அவளும் மனமிரங்கி, இனிமேல் என் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது, என்ன வேணும் என்று எரிச்சலாய்க் கேட்டாள். எனது ஷூ பிரஷ் கதவுக்குப் பின்னால் இருக்கிறது அதை மட்டும் கொடு என்றான். வினோதமாய்ப் பார்த்துக்கொண்டே அதைக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டாள். அவனும் சொன்னபடியே மீண்டும் கதவைத் தட்டவில்லை. தூங்கிவிட்டான்.

மறுநாள் காலையில் எப்போதும் போல் வேலைக்குப் புறப்படும்போது, குழப்பத்துடன் மனைவி கேட்டாள். ஆமா, நேத்து ராத்திரி பாய், தலையணை கேட்டாய், சரி. போர்வை கேட்டாய், அதுவும் சரி. ஷூ பிரஷ் எதற்குக் கேட்டாய்? என்றாள்.

அவன் சொன்னான்: எனக்கு அதுல விரலை வச்சுக்கிட்டாதான் தூக்கம் வரும்; உனக்குத்தான் தெரியும்ல?

Posted in அசைவம் | 3 Comments

ஆசியர்கள் Vs அரபிமொழி

இருப்பின் உண்மையை
எதார்த்த எழுத்தில்
ரசிக்கத் தேடும்
சாதாரணன்  நான்

நம்ம லாலு பிரசாத் யாதவின் ஒரு சாதனையை யாராலும் மறக்க முடியாது. பலபத்தாண்டுகளாக நஷ்டத்தையே காதலித்துக்கொண்டிருந்த நமது ரயில்வேயை லாபத்திற்கு மணமுடித்த சூத்திரதாரி.

பத்தாண்டுகளுக்கு மேல் கோலோச்சிய அவரது சொந்த மாநிலத்தில் இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளார். யாரால்?
அதே ரயில்வேயை நிர்வகித்த அனுபவமும் கொண்ட நிதீஷ் குமாரால்.

ரயில்வேயில் நிதிஷ் குமார் கண்டெடுத்ததும் நஷ்டம்தான். ஆனாலும் பீஹார் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் 5 வருடங்கள் அவரது சாம்பிள் ஆட்சியைப் பார்த்த பிறகும்.

லாலு நிதீஷ் விஷயத்தில் இரு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

  1. ரயில்வேயும் மாநில அரசியலும் லாலுவால் தொழில்களாகத்தான் பார்க்கப்பட்டன‌. 
    ரயில்வேத் தொழிலில் லாபமடைந்ததை மக்கள் விரும்பினர். 
    மாநில அரசியல் தொழிலில் (அவர்)லாபமடைந்ததை மக்கள் விரும்பவில்லை
  2. நிதிஷ் இரண்டையும் அரசாட்சி ரீதியிலேயே அணுகினார்
    ரயில்வேயில் மற்றவர்களைப்போலவே நஷ்டத்தைக் காட்டினார்
    ஆனால் மாநில அரசியலைத் தொழிலாக்காமல் அரசாட்சி நடத்தியதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். 

என்ன ஒரு வித்தியாசம், நிதீஷை ஹார்வர்டு மற்றும் வார்ட்டன் (Harvard & Wharton)பல்கலைக்கழகங்கள் அவர்களது மாணாக்கர்களுக்கு பாடம் நடத்த அழைக்கப் போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை நிர்வாகம் என்பதே பணம்பண்ணும் நிர்வாகம் மட்டும்தான்.

புரிகிறது; இந்த விஷயத்துக்கும் மேலே உள்ள படத்துக்கும் என்ன சம்மந்தம் என்பதுதானே கேள்வி?
சொல்கிறேன், சொல்கிறேன். சற்றுப் பொறுங்களய்யா..

துபாய் தொலைதொடர்பு நிறுவனமான ‘எட்டிசலாட்’ பல்வேறு யுக்திகளைக் கையாண்டு சட்டவிரோத(!?)இணையத் தொலைபேசி உபயோகிக்கும் பாவப்பட்ட எக்ஸ்பேட்ரியாட்களை தன்வசம் மீண்டும் இழுத்துவரப் “படாதபாடு” படுகிறது. அதில் பல யுக்திகள் நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, பின் இரண்டு பேருமே எடுத்து ஊதி ஊதி தின்னலாம் என்ற கதையாகத்தான் உள்ளன.

வெள்ளிக்கிழ‌மை ப‌ஜாருக்கு வ‌ரும் அடிமட்டத் தொழிலாளிக‌ள் கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் அதைப்பிடுங்கி,பரிசோதித்து, அதில் தொலைபேசும் மென்பொருள் இருந்தால் சில‌நூறு திர்ஹ‌ம்க‌ள் அப‌ராத‌ம் விதிப்ப‌தும் அதில் ஒரு உத்தி.

 ஆனால் மேலே உள்ள விளம்பரம் அப்படியல்ல. தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சிறந்தது. அந்த விளம்பரம் சொல்வது இதுதான்: இந்த திட்டத்தில் சேர்ந்துகொண்டால் மாலை 5 மணியில் இருந்து காலை 9 மணிவரை நிமிடத்துக்கு 99 ஃபில்ஸ்தான். இத்திட்டம் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு மட்டும்தான். 99 ஃபில்ஸ் குறைவான கட்டணம்தானா என்பதை விடுங்கள்.

மேற்சொன்ன 4  நாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு அர‌பியில் எத‌ற்கு விள‌ம்ப‌ர‌ம் என்று அதிக‌ப்பிர‌சிங்க‌த்த‌ன‌மாக‌க் கேட்ப‌வ‌ர்க‌ளை நான் வ‌ன்மையாக‌க் க‌ண்டிக்கிறேன். இப்ப‌டிப் போட்டு இந்த‌ ஆசிய‌ர்களுக்கு ஆர்வமூட்டி அது என்ன‌ என்று அர‌பி தெரிந்த‌வ‌ர்க‌ளைக் கேட்க‌த்தூண்டும் விள‌ம்ப‌ர‌ உத்தி என்ப‌தைக்கூட‌ அறியாத‌ பாம‌ர‌ர்க‌ள் நீங்க‌ள்!

லாலு போன்ற‌ திற‌மையான‌வ‌ர்க‌ளை ஹார்வ‌ர்டு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் தேடிக்கொண்டேயிருக்கிற‌தாம். யாருக்காவ‌து அங்கு தொட‌ர்பு இருந்தால், எட்டிச‌லாட் மார்க்கெட்டிங் மானேஜ‌ரை சிபாரிசு செய்யுங்க‌ள் என்று நான் சிபாரிசு செய்கிறேன்!

Posted in Uncategorized | 2 Comments

மொளவுத்தண்ணி அல்லது ரசம் அல்லது புலியானம் அல்லது ரஜம்

இருப்பின் உண்மையை
எதார்த்த எழுத்தில்
ரசிக்கத் தேடும்
சாதாரணன்  நான்

நாகூரில் விளைந்த முத்துக்களில் ஒருவரான அப்துல் கையும் அவர்களின் ஒரு பதிவான  மொளவுத்தண்ணி மூக்கில் புரைஏற்றுகிறது.

யாராவது நினைத்தால் புரை ஏறுமாம். எனக்கு புரையேறியதால் நினைவு பின்னோக்கி செல்கிறது!!

அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம் போன்ற இடங்களில் ரசம், புலியானம் என்றும் (அட புளியானம்தாங்க) விளங்கப்படுகிறது. அப்போதெல்லாம் ‘என்னானம் காச்சுனே’ன்னு கேட்கும் பக்கத்துவீட்டுப்பெண்ணிடம் ‘புலியானங்காச்சி அரச்சத‌ரச்சேன்’ என்று இன்னொரு பெண் சொல்வது வெகுசாதாரணமாம். சிலகாலம் அங்கே வாழ்ந்த எங்க அத்தா சொல்வாங்க. அரச்சதுன்னா துவயலாம். துவயல்னாலே பொட்டுக்கடலை துவயல்தானாம். (ரசம் வச்சு பொட்டுக்கடலை துவயல் அரச்சேன்)

சரி இப்ப துவயலுக்கும் விளக்கம் சொல்லிர்றேன்: கெட்டிச்சட்னின்னு வச்சுக்குங்களேன்!

அப்புறம் இந்த சொரி ஆணம்: பேராவூரணிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் குருவிக்கரம்பை அருகே எல்லா ஊரும் காடு என்றுதான் முடியும். ஒட்டங்காடு,கரம்பக்காடு(2), பத்துக்காடு, நரியன்காடு என்று பட்டியல் வெகுநீளமானது.

இந்த ஊர்களில் உள்ள முஸ்லிம்களின் விருந்துகளில் ‘ரசம்’ என்ற ஒரு வஸ்து உண்டு. அது ரசமாகவும் இருக்காது, பருப்பானமாகவும் இருக்காது. வாழைக்காய் வேறு கிடக்கும் அதில்.  வாழக்கா ரசம் என்றும் உள்ளூர்க்காரர்கள் சொல்வார்கள்.  லேசாப் புளிக்கும். அது நாகூர்  சொரிஆணமாகத்தான் இருக்கவேண்டும்.

இந்த ஊர்களுக்கும் நான் மணமுடித்த ஊர் ‘பீர்க்கலைக்காடு’க்கும் நிறைய திருமணத் தொடர்புகள் உண்டு
பீர்க்கலைக்காடு. இதுவே கிராமம்; இதற்குப் பக்கத்தில் இருக்கும், இன்றும்கூட ஒரு பெட்டிக்கடை இல்லாத களத்தூர் என்னும் குக்கிராமத்தில் பீர்முஹம்மது ஒலி அடங்கியிருக்கிறார்கள்;  (இங்க நடக்கும் ‘ஹந்திரி’ பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்) இது ஊர் பெயர்க்காரணம். அதுசரி. ஆனால் எங்கள் பக்கம் ஊர்ப்பெயர்கள் வயல் அல்லது குடி என்றுதான் முடியும். காடு எங்கிருந்து ஒட்டிக்கொண்டது என்று இப்போது தெரிகிறதா?

அங்கு விருந்துகள் நடக்கும்போது பந்தியில் எங்கள் பகுதி (காரைக்குடி) ஆட்கள் அதை சாம்பார் என்று கேட்க, பரிமாறுபவர் சாம்பாரெல்லாம் இல்லை என்று நகன்றுவிட, அட அதுதான்யா நீ வச்சுருக்கிற வாளியில் உள்ளது என்று மறுபடி அடம்பிடிக்க‌,  இது ரசம்ல, சாம்பார்னு கேட்டா?ன்னு சொல்லி ஊற்றிவிட்டு, அதில் கிடக்கும் வாழைக்காய் துண்டு ஒன்றையும் போட, யோவ் ரசம்னு சொன்னீல்ல? வாழக்கா எப்டிய்யா வந்துச்சுன்னு வாக்குவாதம் களைகட்டும்.

விருந்துக்கு சென்ற ஒரு விகடகவி, சரி விடுங்க, இது ரசம் இல்ல ரஜம்னு (razzam) வச்சுக்குங்கன்னு ஜோக் அடிச்சு நிலமைய சமாளிக்கும்!!

Posted in Uncategorized | Leave a comment

சீனாவும் இஸ்லாமும் -‍ மேலும் சில குறிப்புக்கள்

இருப்பின் உண்மையை
எதார்த்த எழுத்தில்
ரசிக்கத் தேடும்
சாதாரணன்  நான்

நண்பர் தாஜ், சில நாட்களுக்கு முன்னால் சீனாவில் இஸ்லாம்” என்ற அருமையான பதிவை ஆபிதீன் பக்கங்களில் வ‌ர‌லாற்றோடும்,ஜே.எம்.சாலி அவ‌ர்க‌ளின் ப‌ழைய‌ கட்டுரையோடும் த‌ந்திருந்தார்.

// 1970-களின் இறுதியில் கிட்டிய, மதங்களின் மீதான தடையினை நீக்கி, அரசு வழங்கிய சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் இன்றுவரை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அரசின் கண்காணிப்பிற்குள்தான் எல்லாம் என்பது, எத்தனைப் பெரிய சோகம்! // என்று அங்க‌லாய்த்து, வேத‌னையில் முடித்திருந்தார்.

அதைவிட‌ப் பெரிய‌ சோக‌ம், சீன‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இன்று ப‌ல‌ வ‌ழிகளில் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டும் அட‌க்கிவைக்க‌ப்படுகின்ற‌ன‌ர்.

2007ல் நான் சீனா சென்ற‌போது சீனாவின் வழ‌க்கமான‌ சிர‌ம‌மான மொழிப்பிர‌ச்சினை த‌விர்த்து, உண‌வுப்பிர‌ச்சினையும் த‌லைவிரித்து ஆடிய‌து.

ப‌ஞ்ச‌ம‌ல்ல‌ ஸ்வாமி, இது வேறு.

மொழிப்பிர‌ச்சினை ஒன்றும் பெரித‌ல்ல‌; ஒரு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பாள‌ரை ‘அம‌ர்த்தி’க்கொண்டால் போதும்
அவ‌ர் ஸ்க‌ர்ட் அணிந்து, அழ‌கான‌வ‌ராகவும் இருந்து, நாம் செல்லுமிடமெல்லா‌ம் கூடவே நடந்து வ‌ந்தால், மொழி தெரியாததே ந‌ம‌க்கு சாத‌க‌மான‌ அம்சம்தான்!

சீனப்பொண்ணு
சீனப்பொண்ணு

(என்னது ஃபோட்டோவா? அல்லாவே! அது நான் எடுக்கலைங்கனி, நான் ரொம்ப ஒச‌ரமா அழக்க்க்க்கா இருக்கேண்டு,,,,,, அஹ‌தான் எங்கிட்ட கெஞ்சி, பர்மிஷன் வாங்கிட்டு எடுத்தாஹ‌, இதைப்பாத்துட்டு இன்னும் ரெண்டு பேரும் அதே மாதிரி பர்மிஷன் கேட்டபோதும் என்னால மறுக்கமுடியலங்கனி)

ஆனால் வயிற்றுப்ப‌சி அப்படியல்லவே? பலவிடங்களில் உணவை ‘மெனு’க்க‌ளில் தேட‌ எங்கும் எதிலும் ப‌ன்றிக்க‌றி முத‌லிட‌ம் பிடித்திருந்த‌து. பிற‌கு ‘ஹ‌லால்’ சாப்பாடு ப‌ற்றி விசாரித்தால் கிடைத்த‌ ப‌தில்: ‘அப்ப‌டின்னா?’. அப்புற‌ம்தான் தெரிந்த‌து அதை ‘இஸ்லாமிக் ஃபுட்’ என்று கேட்க‌வேண்டுமாம். அப்ப‌டிக்கேட்டால் ம‌ட்டும்? முல்லா நஸிருத்தின் பிச்சைக்கார‌ரை ஓட்டுமேல‌ ஏற‌விட்டுப் பின் ஒன்றுமில்லை என்ற‌ க‌தைதான். குவாங்ஸூ விலும் ஷ்ஸென்ஸென் னிலும் பேயாக‌ அலைந்ததுதான் மிச்ச‌ம்.
துபாயில் கோழி பிடிக்குமா என்றால் பிடிக்காது, சிரியன் அல்லது லெபனிஸ் ஸ்டைல் கிரில் மட்டும் பிடிக்கும் என்று திமிர் பேசியது நினைவிலாடியது. வெறுத்தொதுக்கிய சிக்கன் இப்போது மஞ்சூரியன் ஸ்டைலில் சிரிக்கும்போது மிகவும் ஆவலாக இருந்தது. இரண்டு நாளைக்குமேலாக முட்டையும் ரொட்டியுமாக காய்ந்துகிடந்தேன். அவ்வப்போது முனிவர் மாதிரி பழங்களை மட்டும் நேசித்துக்கொண்டிருந்ததால் எச்சில் ஊர்வதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது? கோழிகள் அறுக்கப்பட்டனவா(ஹலால்) அல்லது நறுக்கப்பட்டனவா என்று தெரியாதாம்.

இப்படி ஒரு சங்கடம் இருக்கிறதென்பதை எனது முதலாளி சொல்லவில்லையே? சில வருடங்களுக்கு முன் சீனா வந்து சென்ற, ஒரு மாதிரியான சூஃபியான அவர் சொல்லியிருப்பாரே? குழம்பிய உடனேயே தெளிந்தேன், அவர் சென்றது த‌லைந‌க‌ரான பெய்ஜிங்! அங்கு ஒருவேளை இஸ்லாமிக் ஃபுட் கிடைத்திருக்கலாம்!!
பொருட்காட்சி அருகே ம‌க்டொனால்ட்ஸில் ஒரே கூட்ட‌ம். 50- 60 க‌வுன்ட்ட‌ர்க‌ளில் எங்கு நின்றாலும் ந‌ம‌க்கு முன்னால் ஒரு 50/ 60 பேர் நின்றார்க‌ள். அந்தக்கூட்ட‌த்தில் போய் கோழி ஹ‌லாலா ஹ‌ராமா என்றால் யார் புரிந்து ப‌தில் சொல்வ‌து? சீச்சீ இந்த‌க் கோழி ருசியாயிருக்காது என்று நரி மாதிரி சொல்லிக்கொண்டு வெளியில் வ‌ந்து நின்றால்….. ஆஹா!

ப‌க்திப் பிழ‌ம்பாக‌ ஒரு இந்திய முல்லா. ட்ரிம் செய்யாத‌ நீள‌த்தாடி, 30- 35 வயசு, த‌லையில் வெள்ளைத் தொப்பி, க‌ணுக்காலுக்குமேல் ம‌ட‌க்கிவிட‌ப்ப‌ட்ட பேண்ட். இவ‌ர் என்ன‌ சாப்பிடப்போகிறார் என‌ப்பார்த்தேன். நேராக‌ப் போய் 10 நிமிட‌த்தில் ஒரு “பிக்மேக்”கோடு வ‌ந்து ப‌டியில் அம‌ர்ந்து சாப்பிட‌ ஆர‌ம்பித்தார்.

அவ‌ரிட‌ம் ந‌ம் ச‌ந்தேக‌த்தைக் கேட்க‌லாமா? இப்போது வேண்டாம், அவ‌ர் சாப்பிட்டுமுடிக்க‌ட்டும்! தெரியாம‌ல் சாப்பிட்டால் ஹ‌லால்தானே? நாம் ஏன் அவ‌ர் பாவ‌த்தில் கைவைக்க‌ வேண்டும்?

அவ‌ர் முடித்த‌பிற‌கு, அருகில் போய், பாய், இந்த‌ ம‌க்டொனாட்ஸ் கோழி ஹ‌லால்தானா? என்றேன். அவ‌ர் உட‌னே, “நான் கேட்டுவிட்டேன், ஹ‌லால்தானாம். சும்மா சாப்பிடுங்க‌” என்றார். துபாயில்தான் வேலைபார்ப்ப‌தாக‌ச் சொன்னார்

நான் மீண்டும் ம‌க்டொனால்ட்ஸில் போய் ச‌ந்தேக‌ம் கேட்கவில்லை, த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ இடைவெளி (communication gap) யில் என‌க்கு எதிர்ம‌றை விடைகிடைத்தால்??? நான் ப‌ட்டினி என்ப‌துபோக‌, அந்த‌ முல்லாவையும் த‌ண்டிக்க‌ விரும்ப‌வில்லை
அடுத்த‌ 15 நிமிட‌த்தில் என் ‘ஃபேவ‌ரைட் பிக்மேக் சிக்கனை’ முடித்திருந்தேன், முல்லா சாட்சியாக.
ரொட்டி முட்டையிலேயே இன்னுமொரு நாள் ஓட்டியாயிற்று. அதற்கும் வந்தது வினை. அடுத்தநாள் காலைச்செய்திகளில் முதன்மையானது சீன முட்டைகளில் மெலமைன் விஷம் கலந்து இருக்கிறது என்பதுதான்.
அப்போதுதான் குழந்தை உணவில் அந்த விஷம் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. வந்த பிரட் ஆம்லெட்டை திருப்பியனுப்பிவிட்டு பக்கா முனிவராகவே இன்னுமிரண்டு நாள் ஓட்டினேன். (சரி முனிவர் வேண்டாம், வௌவால் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்). ஆனால் உணவகங்களில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!! முட்டைகள் வெந்துகொண்டுதானிருந்தன.
ஒன்றரை பில்லியன்பேரும் செத்தா போய்விட்டார்கள்? உனக்கு மட்டும் என்ன என்று ஆள்காட்டி விரலைத் திருப்பி நீட்டி வடிவேலு மாதிரி என்னையே கேட்கத் தோன்றியது. சரிதானே?

தோன்றாத இன்னொரு கேள்வி: பாம்பு தின்போர் ஊரில் போய் நடுத்துண்டு கேட்கவேண்டாம், கிடைப்பதையாவது உண்டு வரலாம்ல? இதுவும் ச‌ரிதானே? (கேள்வி தோன்றாத‌தைக் கேட்கிறேன்)
என்னத்தச் சொல்லி என்ன செய்ய? கேள்வி கேட்கும் நாத்திகன் அல்லது ஷைத்தான் என்று சொல்லப் போகிறீர்கள், ஹ்ம்ம்ம்..

இஸ்லாமிய‌ சாப்பாட்டுக்கே இந்த‌க்க‌தி, அங்கே உள்ள‌ இஸ்லாமிய‌ர்க‌ள் க‌தி??

வட‌இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுக்கும் கிழ‌க்குப்ப‌குதி முஸ்லிம்க‌ளுக்கும் சிங்க‌ள‌ அர‌சு செய்ததை, செய்வ‌தை அப்ப‌டியே சீன‌ அர‌சு செய்துவ‌ருகிற‌து, ஆண்டாண்டு கால‌மாக‌.

மாசேதுங் செய்த‌ க‌லாச்சார‌ப் புர‌ட்சியின்போது, முழுவ‌தும் முஸ்லிம்க‌ளாக‌ இருந்த ‘உக‌ர்’க‌ள் வாழ்ந்த‌, க்ஸின்ஜியாங் மாநில‌த்தில் ‘ஹான்சைனீஸ்’ என்ற‌ சீன பெரும்பான்மை இன‌த்த‌வ‌ர்கள் பெருவாரியாக‌க் குடியேற்ற‌ப்ப‌ட, துவேஷ‌மும் நிர‌ந்த‌ர‌மாக‌ அங்கு குடியேறிய‌து. க‌ம்யூனிஸ்ட் அட‌க்குமுறையால் அங்கு ந‌ட‌ப்ப‌து இன்றுவ‌ரை வெளியே தெரிவ‌தில்லை.

இந்த‌ 2010ம் ஆண்டில்கூட‌, ஜூலை தொட‌க்க‌த்தில் நிக‌ழ்ந்த‌ வ‌ன்முறை வெறியாட்ட‌ங்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ 200 பேர் ப‌லியான‌தாக அதிகார‌பூர்வ‌ த‌க‌வ‌ல். பெரும் எண்ணிக்கையில் இறந்தவர்கள் ‘ஹான்சைனீஸ்’ இன‌த்த‌வர்தான் என்று மிக‌வும் புத்திசாலித்த‌ன‌மாக‌ சீன‌ அர‌சு கூறிவிட்ட‌து. ஆயிரக்கணக்கான உகர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கதி என்னாகும் என்று சொல்லவேண்டியதில்லை.

இந்த‌க்க‌ல‌வ‌ர‌ செய்திகூட‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ரவ‌லாக‌ வெளியிட‌ப்ப‌ட‌வில்லை. ஊட‌க‌ங்க‌ளை விடுங்க‌ள், முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? ஐரோப்பாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ முஸ்லிம்களுக்கு அல்லது அவர்களின் நம்பிக்மைக்கு குந்தகமான ஒரு சிறிய செய்தி வந்தால் குதிகுதியென்று குதிக்கும் உல‌க‌ முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? அநீதி நடக்குமிடம் சீனா என்ப‌தால் அவ‌ர்க‌ள் ஏன் அமைதியாயுள்ள‌ன‌ர்?

சீன‌க்கொடியை தொலைக்காட்சிக் காமரா முன் எரித்து ந‌ட‌ன‌மாடும் பாகிஸ்தானிய‌ர்க‌ள், பெருந்திர‌ளாக‌ ஊர்வ‌ல‌ம்போய் சீனாவைக் கண்டித்துக் கோஷம்போடும் இந்தியர்கள் மற்றும் ப‌ங்காளிக‌ள், ஃப‌த்வா கொடுக்கும் ஈரானிய‌ர்க‌ள், சீன‌ப்பொருள்க‌ளை ப‌கிஷ்க‌ரிக்க‌க் கோரும் அரேபிய‌ர்க‌ள்………. ஒருவ‌ரையும் காண‌வில்லை!!இவ‌ர்க‌ளெல்லாம் பால‌ஸ்தீன‌த்தில் நட‌ப்ப‌தை ம‌ட்டும்தான் க‌வ‌னிப்பார்க‌ளா?

துருக்கி ம‌ட்டும் “சீனாவில் ந‌ட‌க்கும் ‘இன‌ப்ப‌டுகொலை’யை கண்டிப்பதாக” மெலிதாக‌க் கூறியபடி அட‌ங்கிவிட்ட‌து,
கார‌ண‌ம் சீன‌ உக‌ர்க‌ள் துருக்கி மொழிபேசும் துருக்கிவ‌ம்சாவ‌ழியின‌ர். என்ன‌ ஒரு நியாய‌ம்?

முழு இருட்ட‌டிப்பு மூல‌ம் சீன‌ முஸ்லிம்க‌ள் த‌னிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், ப‌ரிதாப‌க‌ர‌மாக‌.

Posted in Uncategorized | Tagged , , , , , | 4 Comments