நூர் ஷா – சையத் பஹ்ருதீன்

syed

ஆபிதீன் பக்கங்களில் தாஜ் கதைக்கு தங்கிலீஸில் பின்னூட்டம் போட்ட என் தம்பி சையதுக்கு ஈ-கலப்பையை அறிமுகம் பண்ணினேன்; பதிலுக்கு அவர் நூர்ஷாவை எனக்கு மறுஅறிமுகம் பண்ணிருக்கார்.

நூர் ஷா என்கிற ஆங்கில “மா மேதை”

கருந்தோல் என்ற ஒருவார்த்தையை எழுதும்போது ”ரு”வா ’று’வா ன்னு தோன்றிய திடீர் சந்தேகத்தை தீர்த்துக்குவோம்ன்னு என் “உண்மைத் தோட்ட பங்காளி” (real estate partner) யான மைக்கேலுக்கு ஃபோன் செய்து கேட்டேன். அவரோ “எனக்கு கஞ்சா கருப்பு, காத்துக் கருப்பு தெரியும், ஆனா கருப்புக்கு எந்த ‘ரு’ வரும்னு தெரியாது” ன்னு கை விரிச்சுட்டார்.

எங்க பெரியண்ணனின் நண்பர் கண்ணனிடம் கேட்டேன். அவர் அரிசி ஆலை உரிமையாளர். அவரோ ‘எனக்கு ஈக்கருப்பு 1 தெரியும் தெரியும்; உச்சிக்கருப்பு 2 தெரியும் ஆனா எந்த ” ரு’ன்னு தெரியாதுன்னார்….. என்னடா வம்பாப் போச்சு பாண்டிய மன்னனின் சந்தேகத்தை தீர்த்து வச்ச சிவபெருமான்ட்ட தான் இனி கேக்கனும் போல ன்னு நெனச்சுகிட்டே., “ரு”போட்டு எழுதிட்டேன். ஒரு shift key pressing ம் மிச்சம் பாருங்க…

இப்பிடியே கேட்டுகிட்டு இருந்தா google search ல டைப் அடிச்சவுடனே கிடைக்கிற ரிசல்ட் மாதிரி 123,456,789 கருப்புகள் கிடைத்தாலும் கிடைக்குனு பயம் வேற.

ஆனா உண்மைத்தோட்டம்னு தமிழாக்கம் எழுதியபோது எனக்கு ‘நூர் ஷா’ ஞாபகம் வந்தது….அவரைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆங்கில ஆக்கங்களில் பெர்னாட் ஷாவுக்கு அடுத்து எனக்கு இந்த நூர்ஷா ஆக்கங்களின் நினைப்புதான் வரும்.

90 களில் சவூதியில் என்னுடன் வேலை பார்த்தவர்தான் இந்த நூர் ஷா….

நாங்கள் அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து 2 மாதம் இருக்கும். நாங்கள் என்றால் சரியாக 41 தமிழ்நாட்டு ஆட்கள்; “கிடைப்பதில்” பங்கு கிடைக்காத மற்ற தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர் “அலிபாபாவும் 40 திருடர்களும்”. எங்கள் தலைவர் ( சீனியர் மோஸ்ட்) அலிபாபா என்கிற மொஹிதீன்பாய்; Driver cum Salesman; தென்காசிக்காரர். இனிமேல் பாபா என்றே விளம்பப்படுவார்.

ஒரு நாள் பாபா “ஏர்ப்போர்ட் போறேன் வர்றியா”ன்னார். நான் அடிக்கடி இந்த மாதிரி அவருடன் போவேன். யார் பாய் வர்றதுன் னேன். ஒரு ஆள் வருது ஆந்திராவில் இருந்து; நீ வர்றியா வல்லையா ன்னு கட்டன்ரைட்டா கேட்டார். வர்றேன்னுட்டு கிளம்பினேன்..

ஆளைக்கண்டு பிடிச்சு ஒரு வழியா வண்டியில் ஏற்றினோம். நல்ல சிவப்பா, ஆஜானுபாகுவா, கொழுகொழுன்னு இருந்தார் நூர் ஷா. ஆந்திராக்காரனிடம் என்ன மொழியில் பேசுவது? புது ஆள் வேறு சவூதிக்கு. இல்லாவிட்டால் கூட நம் தமிழ் ஆட்கள் வட இந்தியர்களிடமும் பாகிஸ்தானியர்களிடமும் பேசுவது போல் கச்சாஅரபியில் பேசலாம்.

பாபாவுக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஆகவே “என்ன பாஷை தெரியும்னு கேளு”ன்னார். அவர் சொன்ன பதிலில் இருந்து தெலுங்கு, உருது தெரியும்னு தெரிஞ்சது… என்ன செய்ய.?எங்களுக்கு அந்த 2 ம் தெரியாது. (பின்னால் துபாயில்தான் இந்தி கற்றுக் கொண்டேன்)

அடுத்து, ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னார். அவர்ட்ட பேச ஆங்கிலத்தை பயன்படுத்துவோம்னு முடிவு செஞ்சேன்; ஆனால் ஒழுங்கான ஆங்கிலத்தில் பேசினால் அவருக்குப் புரியாதுன்னு 2 நிமிஷத்திலேயே எனக்கு புரிஞ்சு, அவர் இங்லிஷ்லேயே நானும் பேசனுங்கிற முடிவிலேயே மெதுவாகப் பேச்சுக்குடுக்க ஆரம்பிச்சேன்.

போட்ட என்கொயரில அவர் நெல்லூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்தது தெரிஞ்சது. ஏர்போர்ட் ரோடு ல பதிச்சிருந்த மின்னும் கற்களைப் பார்த்து “this what bhai?”ன்னார் நூர்ஷா. நம்ம ட்ரேட்மார்க் குசும்போடு, எல்லாப் புது ஆளுங்க கிட்டேயும் வழக்கமா சொல்ற பதில சொன்னேன். “This all Gold. Here Saudi no value gold ” ன்னேன்.
இதக் கேட்டவுடன் அவர் முகம் ப்ரகாசமடஞ்சதை அந்த இருட்டிலும் என்னால பார்க்க முடிஞ்சுச்சு…. This gold- india take -go time -airport problem? –ன்னு கேட்டார் நூர் ஷா…

நான் ஒரு நிமிஷம் யோசிச்சு “madras airport no ask, Andhra airport don’t know”ன்னேன்.
I go madras flight – after nellore train ன்னார்.

அவர் பேச்சை ஓரளவு புரிஞ்சுகிட்ட நம்ம பாபா, “ஆஹா போற போக்கைப் பார்ததால் இவன் இன்னக்கி ராத்திரி எல்லாரும் தூங்கினதும் ரோட்டுக்கு வந்து பேத்து எடுத்துர்வான் போலயே ” ன்னார்.

கொஞ்ச நேரம் அமைதி.. எங்க வில்லா வும் வந்திருச்சு….

எந்த ரூமல படுக்கப்போறான்னு நான் கேட்டதுக்கு பாபா, நம்ம ரூம்லதான்னு கஞ்சடி3 சொல்லிருக்கான்னார். அப்போ மணி நைட் 10 இருக்கும். எங்க ரூமில் நான், பாபா, ரியாஸ் (உருதும் பேசும் தமிழர்) ; இப்ப நூர் ஷா வும் சேர்த்து 4 பேர். பிரச்சினை இல்ல. ரூம் ரொம்ம்ம்ப பெருசு.

பாபா ஒன்றும் பேசாமல் இருக்க ரியாஸிடம் சொன்னேன், உர்துல பேசுங்க இவர்ட்டன்னு. அவரும் என்னவோ பேசினார். .நூர் ஷாவும் பதில் சொல்ல, எங்களுக்கோ காக்கற மூக்கறங்க மாதிரி கேட்டுச்சு. இடையிடையே ஹைஹை சவுண்ட் வேற. சாப்பிட உட்கார்ந்தோம்…
இதுக்கப்புறம் என்னாச்சுன்னு தெரியல, ரியாஸ் நூர்ஷா விடம் பேசுவது நின்று போனது. நூர்ஷாவே பேசினாலும் பதில் சொல்வதைத் தவிர்த்தார் ரியாஸ்.

அப்போதுல இருந்து நூர்ஷா என்கிட்டதான் அதிகம் பேச்சு, வார்த்தை எல்லாமே.

வந்த புதிதில் western toilet ஐ காட்டி கேட்டார்: bhai how sitting here leg down or up?
நான் சொன்னேன்: sitting leg up down no important ,shitting very important.
புரியாத மாதிரி பார்த்து no problem adjustment…என்றார்..
இப்ப அவர் சொன்னது எனக்கே புரியலை. எப்படி ‘இருந்துருப்பாரோ’ தெரியல.

நூர் ஷா வந்த சில நாட்களில் ஒரு இரவு எல்லோரும் விசிஆரில் படம்பார்த்துக் கொண்டிருந்தோம். தமிழ் தெரியாட்டியும் எங்களோட படம் பார்ப்பார். ரொம்பவும் அடி வாங்கிய கேசட் அது. மழை பெய்யும் ப்ரிண்ட்ன்னு சொல்வோம்ல அது. படமோ மேலும் கீழும் ஆடிக்கொண்டிருந்தது! அப்பொழுது ரியாஸ் சொன்னார்: எவனோ கால் கட்டை விரலை வெளியே காட்றான்….அதான் படம் இப்படி தெரியுது

நூர் ஷா தமிழ் புரியாம என்கிட்ட “this man what tell bhai? ன்னு கேட்டார் நான் சொன்னேன்:
one man leg finger outside dress, picture shaking tv. அடுத்த நொடி தன் காலை வேகமா கைலிக்குள் நுழைத்துக்கொண்டார் .

அவருடைய வேலை ஒரு ரெஸ்ட்டரெண்ட்ல ஆடு உறிப்பது. பட்லர் இங்கிலீஸ் கேள்விப்பட்ட எனக்கு பட்சர் இங்கிலீசும் அத்துபடியானதால, நூர் ஷா வின் அறிவிக்கபடாத ஆஸ்தான English Translator ஆயிட்டேன்.

நாலு பேருக்கும் ஒரே டாய்லெட்; ஒரே நேரத்தில் டூட்டி. ஒரே வண்டி, ஒரே ட்ரைவர் (நம்ம பாபா தான்). நாங்க 3 பேரும் ஒரு ஆளுக்கு ஒதுக்கப்பட்ட 15 நிமிஸத்தில போறது, கழுவுறது, பல்லு விலக்குறது, குளிக்கிறதுன்னு அரக்கப் பரக்க எல்லாத்தையும் ஏக காலத்தில செஞ்சுட்டு வெளியே வந்தா….. நூர் ஷா அமைதியா சட்டையும் பாண்ட்டையும் மாற்றிக் கொண்டிருப்பார்…..
அவரைப் பொறுத்தவரை காலைக் கடன்கள் என்பது வேலைக்கு கிளம்புவதும் சட்டை பாண்ட் மாட்டுவதோடு முடிந்தது. பொறாமையோடு பார்ப்பேன் அவரை இந்த விஷயத்தில்.

மூன்றரை வருடங்களில் மொத்தம் ஒரு 50 தடவைதான் குளித்துப் பார்திருப்பேன். நான் கேட்டதற்கு All Prayer wash OK ன்னார். அதாவது, அதான் ஒது செய்கிறோமே எல்லாத் தொழுகைக்கும்கிறார். அவர் ஏர்போர்ட்ல எங்க வண்டில ஏறி உக்காந்ததும் வீசுன கொச்சை நாற்றத்தின் காரணம் எனக்கு இப்ப புரிஞ்சது. சவூதி சட்டப்படி – நம்ம மக்கள் வச்சது தான் – எல்லாரும் வெள்ளிக்கிழமைகளில் டாய்லட்டையும் கிச்சனையும் முறை வைத்து கழுவனுமே….

அந்த வாரம் நூர் ஷா முறை. எல்லாரும் சாப்பிட்டு படம் பார்த்து முடித்து தூங்க லைட்டை அமத்திட்டுப் படுத்துட்டோம்.

அரைமணி நேரம் ஆகிருக்கும். நூர் ஷா மெதுவா ரூமுக்குள்ள வந்து, தூங்கிக்கொண்டிருந்த என்னை மெதுவாக எழுப்பினார். நான் மிக அருகில் வந்த “அந்த” வாசனையை வைத்து அது நூர் ஷா ங்கிறதை அந்த தூக்கத்திலயும் கண்டு பிடிச்சு, What ன்னேன்..நூர் ஷா கேட்டார்: “பாய், Brush என்ன?”

நான் கற்பூரமா மாறி சொன்னேன்: “kitchen door back side” . கொஞ்ச காலமாவே நூர் ஷா தம்ழில் பேச முயற்சி செய்றதோட விளைவு தான் அவர் கேட்ட கேள்வி. எங்கே என்பதைத்தான் என்ன என்று கேட்டிருந்தார். இந்த சின்ன சத்ததிலயும் முழிச்சிக்கிட்ட பாபா – என்ன கவலையோ அந்த மனுஷனுக்கு; தூக்கம் சரிவர வரலை போல – கேட்டார்: “என்ன கேக்குதான் எழவெடுத்த மூதி?”

க்ளீன் பன்ற Broom எங்க இருக்குன்னு கேட்டார்ன்னேன். அது என்னவோ உனக்கு மட்டும் தான்பா புரியுது அவன் பேசுற இங்கிலீசுன்னு சொல்லி அலுத்துக்கிட்டு, திரும்பவும் தூங்க ஆரம்பிச்சார், டிஸ்டர்ப் ஆனதில் கடுப்பாகிய பாபா.

ஒருநாள் வில்லாவில் மத்தியான நேரத்தில எங்க ரூமிற்கு பக்கத்துல, தாய்லாந்து காரர்களின் ரூமிற்கு எதிரே மாடிப்படியில் உக்கார்ந்திருந்த (மத்தியான நேரத்தில் தூங்க மாட்டார் நூர் ஷா) ஒன்னுக்கு அடிக்க வந்த என்னிடம் அந்த ரூமில் இருந்து வந்த 2 பூனைகளைக் காட்டி கேட்டார்:
Inside room go time 3 cat go, outside come time 2 cat come. Why Bhai? One cat where?
(3 போனதுல 2 வந்திருச்சி 1 எங்கே?)
நான் சைகையிலே வயிறைத்தட்டி காண்பித்து, Inside Thailandhi ன்னேன்…ஆச்சரியத்தோட கேட்டார்: This cat man eat? No problem? (இதெல்லாம் மனுசங்க திங்கிற பூனையா?)

நான் சொன்னேன்: All Thailandhi eat cat only and all Philipinney eat dog only. No other mutton. அப்படியே நம்பிட்டார் மனுஷன்….ஆனா இந்த வெகுளிதான் மட்டன் சுடுவதில் கில்லாடியா இருந்து, ‘எங்க மெஸ் வயித்தில’ அடிக்கடி கறி வார்த்தவர்

இப்படியாக என் translation பிரசித்திபெற்று பிரகாசித்தபோதுதான் “அது” நடந்தது.

ரெஸ்டாரெண்ட்ல இருந்து இறைச்சி எடுத்துக் கொண்டு வருவதை – யாருக்கும் தெரியாமல்தான் – நம் தமிழ் மக்கள் அனைவரும் செவ்வனே செய்துகொண்டு இருந்த நேரம். அப்போது சரியா சமைக்காத காரணத்துக்காக ‘எங்க மெஸ்’ல இருந்து நீக்கப்பட்ட ஒரு ராம்நாட் பையன் கடுப்பாகி, பழிதீர்ப்பதாக நினைத்து, சூப்பர் வைசரிடம் ”கறி” மேட்டரை போட்டுக்குடுக்க, அந்த சூடானி சூப்பர் வைசர் அரபியிடம் பத்த வச்சுட்டான்.

அந்த இறைச்சி அறையின் incharge ஆன நூர் ஷா விடம் விசாரிக்க வந்தான் அரபி. ஏற்கனவெ வேலையில் சேர்ந்த நேரத்தில் நூர் ஷா வின் ஆங்கிலத்தால் படாதபாடு பட்டுப்போன
அரபி என்னையும் – முன்னெச்சரிக்கை!! – பக்கத்தில் வைத்துக்கொண்டு விசாரிக்கத் தொடங்கினான். எங்க அரபி நல்லா இங்க்லீஸ் பேசுவான், ஆனா நூர் ஷாவிற்கு கேள்வியை புரிய வைக்கனும். அடுத்து நூர்ஷாவின் பதிலை அரபி புரிஞ்சுக்கனுமே? இதுக்காகத்தான் என்னைப் பக்கத்தில் வைத்துக்கொண்டான் அரபி.

இப்ப அரபிக்கும் நூர்ஷா வுக்கும் English to நூர்ஷாங்கிலிஸ் Translator ஆகவும், Vice versa வாகவும் ஆயிட்டேன் நான்.
யாரெல்லாம் இங்கே இருந்து இறைச்சி எடுத்துட்டு போனது? – இது அரபி
who take mutton here you know? இது நூர்ஷா விடம் நான்
Front I no see, Back I don’t know – நூர்ஷா வின் பதில்

அரபி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி திருதிருன்னு முழிக்க, நான் விளக்கம் சொன்னேன்:

He is saying that he had not seen anybody taking meat until now.
And he is also saying that he won’t be responsible for these things hereafter.
தமிழ்ல சொல்லனும்னா, இதுவரைக்கும் வேற யாரும் எடுத்து நான் பாத்ததில்லை
இனிமே யாரும் எடுத்தா எனக்குத் தெரியாது (சொல்லிபுட்டேன் ஆமா
🙂 )

இந்த என் விளக்கத்தை கேட்டவுடன் அரபி வியந்து சொன்னான்:
What a short English he is talking!! Mashaa Allah !!!

எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு 50 ரியால் ஃபைன்னு சொல்லிட்டு போனான் அரபி.
வேற என்ன எழவைச் செய்யுறது? கழுத்தை (இல்ல வேற எதையாச்சும்) அறுத்தாக்கூட
ஒரு பயபுள்ளயும் உண்மையைச் சொல்லாதுகன்னு நெனச்சிருப்பான் அரபி.

போட்டுக்குடுத்த பயலுக்கும் சேத்து ஆப்பு வச்சுட்டான் மாப்பு.

இதன் பிறகு நூர்ஷா பொறுப்பு ஏற்காத காரணத்தாலும், ஒரு செக்கியூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாலும் நாங்கள் இறைச்சி எடுப்பது குறைந்துவிட்டது. (!)

நல்லா கவனிக்கனும்… குறைந்தது. ஆனால் முற்றிலும் தடுக்க முடியவில்லை அந்த செக்கியூரிட்டியாலும்கூட.. காரணம் வேலியே …..பயிரை……….
நூர் ஷா மூலமாகவே தொடர்ந்தது ”கறி சுடும்” பணி .
எப்படின்னா,
அவர் கறி வெட்டும்போது யூஸ் பன்ற துணியை தினமும் ஒருபையில் போட்டு வில்லாவுக்கு எடுத்துப்போவார். வாஷ் பண்ணவாம். .அந்தப் பையை குறி வைத்து செயலாற்றியது நம்ம பாபா மூளை. இவ்வளவு ப்ரச்னையிலும் என்ன ஒரு துணிச்சல் பாருங்க? இந்த மாதிரியான நூதன முறைகள் எங்க வட்டாரத்தில் புழங்குறதை எழுத ஆரம்பிச்சா தாங்கவே தாங்காது துனியா…….

நூர் ஷா முதன்முதலாக சமைக்க ஆரம்பித்தபோது நான்தான் எப்படி சமைக்கனும்னு அவர்ட்ட சொன்னேன். ஒக்கே ன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சார். நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் அவர்ட்ட, ஏதாவது சந்தேகம்னா கேளுங்கன்னு.

கேட்டார் : Rice cooking time salt before put, after put, any problem?
ஆஹா front back லிருந்து before afterக்கு மாறிட்டார் நம்ம நூர்ஷான்னு புளகாங்கிதம் எனக்கு.

அதாவது என்ன கேக்கிறார்னா சோறு சமைக்கும்போது உப்பை ஆரம்பத்தில் போட்டாலும் கடைசியில போட்டாலும் ஒன்னும் பிரச்னை இல்லைல? ன்னு. பல் துலக்குறதுல பிஸியா இருந்த நானும் ஒன்னும் பிரச்னை இல்லைனு சொல்லிட்டேன்..

மத்தியானம் சாப்பிட ஆரம்பித்த போது தான் தெரிந்தது, வாயில் வைக்கமுடியாத அளவு உப்பு இருந்தது சோற்றில். எல்லா சோத்தையும் குப்பையிலே கொட்டினோம். “.உப்பிருந்த பண்டமும் குப்பையிலே” ன்னு ஆயிருச்சு !

அவரோ முதல்ல கொஞ்சம் உப்பு போட்டிருக்கார், பத்தாதுன்னு சோறு வெந்தவுடன் செக்பண்ணிட்டு, After போடலாமான்னு கேட்டிருக்கார் – அதாவது வெந்தவுடன், வடிப்பதற்கு முன் – அந்த 2வது தடவை கொஞசம்(?) அதிகம் போட்டுட்டார்.

ஆக, பல்துலக்குவதில் பிஸியாயிருந்த யானைக்கும் அடி சறுக்கியது. இது நடந்து முடிஞ்சதும் பாபா மத்தியான சோறு சாப்பிட முடியாத கடுப்பில், நூர்ஷாவை மெஸ்ஸை விட்டு தூக்கிருவோம்னு அதிரடியா அறிவிச்சு, போனஸா, யாரு சப்போர்ட் பண்ணுதான்னு பார்ப்போம்ன்னும் சொல்லி என் பக்கம் பார்த்தார்.

நானும் “விடுங்க பாய் முத தடவைதானே மாலிஷ் ….இனி இப்படி நடக்காது” ன்னேன்.
“சரி லாஸ்ட் வார்னிங்” ன்னு நூர்ஷாவுக்கும் புரிகிற மாதிரி சொல்லிட்டு விட்டு விட்டார் மேட்டரை. நம்ம ட்ரான்ஸ்லேசன் ப்ராப்லம் வெளியேவல்லைன்னு எனக்கும் சந்தோசம்

ஒருநாள் நல்லமூடில் பாபா இருந்தபோது நூர்ஷாவிடம் கேட்டார்: No Go India? 3 years finish?
நான் மெய் சிலிர்த்து போனேன் பாபாவும் நூர்ஷா ங்கிலீஷ்ல தேறிட்டாரேன்னு.
After little money come go India after no come here என்றார் நூர்ஷா.
(அதாவது, இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு போவேன் ஆனால் திரும்பி வர மாட்டேன்)
What Do India? இது பாபா. இப்ப புடிச்சுச்சு சனி அவருக்கு.

இரண்டு ஆள்காட்டி விரல்களையும் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு “ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ” என்று கத்திவிட்டு ”சொய்ங் சொய்ங்”ன்னு சத்தம் போட்டுட்டு கினற்றில் இருந்து தண்ணீர் இரைப்பது போல் கையால் சைகை காமிச்சு ”Sales” ன்னார் நூர்ஷா.

பாபா மிரண்டு போய் என்னக்கூப்பிட்டு “இவன் என்ன சொல்லுதான்னு கேட்டுச் சொல்லு”ன்னார்.
மாடு வாங்கி பால் வியாபாரம் செய்யப்போவதாகச் சொல்றார்னு நான் சொன்னேன். (நூர்ஷா விற்கு மாட்டிற்கு இங்கிலீஷில் என்னன்னு தெரியலை!!) அத்தோட நான் விட்ருக்கலாம். என் நாக்குலயும் சனி. பாபாட்ட நான் “என் அளவுக்கு உங்களால விளங்க முடியலையே” ன்னு கொஞ்சம் தற்பெருமையோடு சொல்ல, அவரோ, கொஞ்சம் கோபமாவே,
“அதான் அன்னக்கி விளங்கி உப்பை கொட்டி மத்தியானம் குப்பூஸ் திங்க விட்டியல்ல?”

மூன்றரை வருஷமும் ஆச்சு.
நான் அங்கிருக்கும் போதே காசச்சேர்த்துட்டு பால் வியாபாரம் செய்ய ஆந்திரா கிளம்பிட்டார். நானும் பாபா வும் ஏர்ப்போர்ட் வந்து வழியனுப்பி பிரியாவிடை கொடுத்துவிட்டு இப்படிக் கவலைப்பட்டோம்:
“இனிமே நம்ம மெஸ்ஸுக்கு கறி துட்டு குடுத்துதான் வாங்கனும்”

=============================================================================================

1 அரிசி தயாரானபிறகு, அதன் விலையைக் குறைக்க, வியாபாரிகளால் காண்பிக்கப்படும், ஒன்றிரண்டு நுனி கருத்த அரிசிக்கு, ஈக்கருப்பு என்று பெயர்

2 மழைக்காலங்களில் தலைக்கு நேர்மேலே தெரியும் கருப்புமேகம் உச்சிக்கருப்பு.
(ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இதைப் பார்த்தால் மில் ஓனர்களுக்கு சிம்மசொப்பனம். காய்ந்துகொண்டிருக்கும் அவித்தநெல்லை களநடுவில் குமித்து தார்ப்பாய் போட்டுமூடி முடிந்தவரை நனையாமல் காப்பாற்ற அவர்களும் மில் வேலையாட்களும் படும்பாடும் போடும் சத்தமும் எங்கள் ஊரில் பிரசித்தம்)
3 அரபியின் மூத்த மகன். எப்போதும் கஞ்சா அடிச்ச மாதிரியே இருப்பான். அவனுக்கு எங்க வட்டாரத்தில் பெயர் கஞ்சடி.

This entry was posted in புனைவு. Bookmark the permalink.

5 Responses to நூர் ஷா – சையத் பஹ்ருதீன்

 1. நல்லாருக்கு. நிறைய எழுத சொல்லுங்க – வாழ்வின் வலிகளும் தெரிவது போல.

 2. Shafi says:

  “ஆபிதீன்” நடை. நன்றாக எழுதி இருக்கிறார். தொழிலாளர்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் அகற்றும் பனி தொடர்பாக ஒரு ஆஸ்ட்ரேலிய கன்சல்டன்சி வந்து பயிற்சி கொடுத்தது. என்னுடைய இராக்கி மேனஜர் சபையில் வைத்து என்னை மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டார். என்னுடைய ஹிந்தி – அச்சாகே, ஆவோ, ஜாவோ லெவெல்தான். என்னுடிய பெங்காலி ஆபிஸ் பாயை அழைத்து “நூரிஷா ஆங்கிலத்தில் அவருக்கு மொழிபெயர்த்து அவர் அதனை ஹிந்தியில் சொன்ன நிகழ்வை நினைவுக்கு வருகிறது.

 3. sirajudeen says:

  nalla irunthuchu comediya!!!!!!! enna irunthalum kari suttu sapidalam than ana kadaila irunthu suttu saptathu than suduthu!!!!!!!!! nalla irukku! itha yarum thamilla translate pannunga enakkaha

 4. Naina Md says:

  Comical Narration….Njoyed a lot

 5. mic says:

  Tamilil valtha varthaikalai thirudiya en natpey unai valtha engu selven? Unai walltha vidai thedi iravodu irvai virakirayn vidai kana? Endrum natpin ilakanamai unkal Remo/mic

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s