பொதுவாக மத்தியக்கிழக்கில் வீடுகளில் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகள் அதிகம் கண்களில் படுவதில்லை. அப்படியே பட்டாலும் வீடு சுத்தப் படுத்தும் சமயங்களில் சிலந்திகள் விரட்ட/கொல்லப்பட்டுவிடும். எங்கள் வீட்டிலும் அப்படியே. போனமாதத்தில் ஒரு நாள் குளியலறைச் சுவரோரம் முழங்கால் உயரத்தில் கருப்பாக ஒரு பூச்சி வலைபின்னுவதில் சுறுசுறுப்பாக இருக்க, நான் தண்ணீரை எடுத்து ஊற்றி விரட்டலாமென்ற திட்டத்தில் ஒரு டப்பாவில் மொண்டு ஊற்…….றப்போகையில்….ஒரு யோசனை…ஊற்றவில்லை
யோசனை இதுதான்: எனது குளியலறையில் இதற்கு என்ன சாப்பாடு கிடைக்குமென்ற நம்பிக்கையில் அல்லது திட்டத்தில் இங்கு டேரா போடுகிறது? சாதாரணமாய் குளியறைகளில் காணப்படும் பழக்கொசு உருவத்தில் பறப்பதுபோலத் தத்தித் திரியும் சிறுபூச்சிகளைக்கூட எங்கள் குளியலறையில் காண்பது கடினம். அவ்வப்போது தென்படும் சிறுகரப்புகள்கூட இவ்வலையில் சிக்காது. இது எப்படிப் பிழைக்கப் போகிறது? என்னதான் செய்யப்போகிறது? எத்தனைநாள் தாக்குப்பிடிக்கும் என்றுதான் பார்க்கலாமே…. சிலந்திப்பூச்சிகளின் விஷம் சாதாரணமானதல்ல. சிலவகைச் சிலந்திகள் (like Red Top) மனிதனை உடனே கொல்லவல்லவை. அறிவேன்… இருந்தும்…
அப்படியே விட்டுவிட்டேன். உள்ளே செல்லும்போதெல்லாம் ஒரு நோட்டமும் விடுவேன். ஒருநாளில் கூட ஏதும் இரை மாட்டவோ, தின்ற இரையின் சக்கை தரையில் தென்படவோ இல்லை. (சிலந்தி, தேள் போன்றவை உயிருள்ள பூச்சிகளைப் பிடித்து அவற்றின் உடலில் உள்ள திரவப்பகுதியை மட்டும் உறிஞ்சிவிட்டு சக்கையை விட்டுவிடும். B. Sc., Chemistry யில் Ancillary Zoology படித்ததன் அறிவு 🙂 ) சிலந்தியும் வேறு எங்கும் போகவில்லை. லேசாக ஊதி, அதன் அசைவில் அது ஆரோக்கியமாக இருப்பதும் தெரிகிறது… ஆயிற்று 15 நாட்கள். ஒன்றும் மாற்றமில்லை.
அதற்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாதே… ஏன் இங்கு வந்து இப்படி கஷ்டப்படுகிறது என்று வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு சிலந்திப்பூச்சியின் மீது இரக்கம் வந்தது. மனிதர்களால் காரணமாகவும் காரணமின்றியும், மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு கட்டிய வீடுகளை நொடியில் இழந்துவிடும் அவைகளுக்கு இது சாதாரணமான விஷயமோ? விளிம்புநிலையிலேயே வாழும் துப்புரவுத் தொழிலாளிகள் இவ்வாறுதான் தங்கள்மீது ஏவப்படும் அடக்குமுறைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகிக் கொள்வதைப்போலவா இது? ஒரு சிறிய பூச்சி என் முழுஎடையுடன் என்னைத் தூக்கிக் குலுக்கியது.
தினமும் நோட்டமிடுவது தொடர, ஒரு நாள் காலை திடீரென்று ஏதோ ஒரு புதிய வஸ்து வலையில் தென்பட்டது. பூச்சிமாதிரித் தெரியவில்லை. சுவற்றுடன் ஒட்டியபடி இருந்தது. அநேகமாக அது முட்டைக்கூடாக (egg sac or egg capsule) இருக்கவேண்டுமென்று எனது மூளையின் zoology செல்கள் சொல்ல, நோட்டம் தொடர்ந்தது. ஏறக்குறைய ஒருமாதம் கழித்து இன்று வலையில் வேறு மாதிரி ஏதோ தெரிந்தது. சிலந்தியும் கூடு இருந்த இடத்திலிருந்து சில அங்குலங்கள் தள்ளி இருந்தது. லேசாக ஊதினேன். சிலந்தி ஒரே ஓட்டமாக ஓடி பழைய இடத்தை அடைய, அங்கிருந்த புதிய வஸ்துவிடமும் அசைவு தென்பட்டது. அத்தனையும் குஞ்சுகள்.
சற்று கீழே பார்த்தால் முட்டைக்கூட்டின் ஓடு மட்டும் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தது. அசாதரணமான எந்த அசைவின்போதும் சிலந்தி குஞ்சுகளின் அருகே ஓடி, அவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. இரண்டாவது படத்தில் கீழ்ப்பகுதியில் தெரிவது முட்டைக்கூடு!
தவிர இத்தனை நாளும் (இன்னும்கூட பல நாட்களும்) அதற்கு உணவு ஒரு பொருட்டல்ல!
குஞ்சுகள் எப்படியும் இன்றைக்குள் தற்சார்பாக ஆகிவிடும். இன்று இரவு முழுக்குடும்பத்தையும் அலேக்காக ஜன்னலுக்கு வெளியே அனுப்பிவிட வேண்டும். (ஜன்னல்லுக்கு வெளிப்ப்புறம் வீடு கிடையாது… காற்றோட்டத்துக்கான, ஒரு சந்துப்பகுதி))
அத்துடன் இனி சிலந்திப் பூச்சிகளைக் கண்டால், கொல்லாமல், நமக்குத் தொந்திரவு இல்லாதவாறு வேறிடத்துக்கு விரட்டிவிடவேண்டும்.
அது பக்கத்துவீடாக இருந்தாலும் நமக்கென்ன?