எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

April 25, 2013 அன்று ஆபிதீன் பக்கங்கள்(ii)ல் வந்த என் கட்டுரை/பின்னூட்டங்களின் மீள்பதிவு,

Thursday, April 25, 2013

எம்புறா

நண்பர் சொன்ன ‘அனிமல்ஸ் ஆர் ப்யூட்டிஃபுல் பீப்ள்’ படத்தை பாக்கனும்னு திட்டம்போட்ட அன்னிக்கு நிலநடுக்கம் சதி செஞ்சு கவுத்துருச்சு. அதனால நேத்து ராத்திரி பார்த்தே தீரனும்னு,முடிவோட, வீட்டுக்கு ஓடுற வழியில, ஒரு புதுசொந்தக்காரத் தம்பியைப் (புதுப்பணக்காரன் மாதிரி) பாத்து, அதுட்டயும் இந்தப்படத்தைப் பாக்கச் சொல்லிட்டு, தம்பி சொன்ன ‘எர்த்’படத்தையும் கொஞ்சம் கொஞ்சம் பாத்து,, குறிச்சுக்கிட்டு,

##முக்கியமா இரவு விருந்தையும் சிறப்பிச்சுட்டு –ஹிஹி ##  ராத்திரி 12 மணிக்கு வந்து வீட்டுவாசலப் பாக்க ஓட்டமா ஓட, …….. 
எதுத்த கட்டடத்து வாசல்ல அந்த நேரத்துல ஒரு சுவரோரமா ஒரு வெள்ளப்புறா தரையில உக்காந்துருந்துச்சு.பிரேக் போட்டு, கொஞ்சம் கிட்டக்கப்போய் தொட முயற்சி பண்ணேன், சாதாரணமா பறந்திருக்க வேண்டிய புறா பறக்கல. லேசா அசைஞ்சு மட்டும் கொடுத்துச்சு… பிடிக்க முயற்சிபண்ணேன்.நின்னபடிக்கு அசையவே இல்ல. எனக்குப் போக மனசில்ல. ஏதாவது பூனை வந்தா புறா அம்பேல்தான்.கையில புடிச்சு தூக்கிட்டேன். அந்த நேரத்துலயும் ஒரு ஆந்திராக்கார நண்பர் அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தார். அவர்ட்ட சுருக்கமா ‘வெளக்குனேன்’. மேலே ஏஸி மேல வச்சுட்டா காலைல பறந்துரும். வச்சிரவான்னு கேட்டேன். அதுக்கு அவர், வேணாம், கீழே விழுந்துரப்போகுது,என்கிட்ட கொடுங்க, நான் இருக்கும் கட்டடத்துல நெறையப் புறா நிக்கும், அதுகளோட விட்டிருவேன்ன்னார்.நானும் கொடுத்துட்டேன். நடந்து என் வீட்டு வாசலுக்குப் பக்கத்தில் போனவுடன், திடீர்ச்சந்தேகம் வந்தது: பூனைக்குப்பதிலா இவர் இரையாக்கிட்டா?ன்னு. நான் கைல வச்சிருந்தபோது, நல்ல புஸ்டியா வேற இருந்தமாதிரி ஞாபகம். பாய் என்கிட்டயே குடுத்துரு, நான் வீட்டு பால்கனில வச்சுக்கிட்றேன்னு சொல்லவும் அவரும் சரின்னு கொடுக்கும்போது, எம்பொரடில அடிக்கிறமாதிரி, புறா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாரு. பாத்தீங்களா? புஸ்டியா இருக்கிறது மட்டும் நோட் பண்ற எனக்கு, அந்த இருட்டிலும் புறா அழகா இருக்குறத நோட் பண்ணுன அவர் மேல சந்தேகம். என்ன உலகம் இது?
குற்றவுணர்ச்சியோட வீட்டுக்கதவைத் திறந்து, வெளிச்சத்தில் புறாவைப் பாத்தா அம்புட்டு அழகு… வெள்ளை நிறம்…கழுத்தில் மட்டும் கருஞ்சாம்பல் நிறப் புள்ளிகள்.. ஆனா அது என்னைப்பாத்ததுல எங்கோ சிக்கல் மாதிரி தோனுச்சு. நேராவே பாக்கமுடியும்போது, தேவையில்லாமல் கழுத்தை ஒரு மாதிரி சுத்தி வளச்சுப்பாத்துச்சு. கொண்டுபோய், 10 அடி நீளம், ஒன்றைஅடி அகலம், நாலடி உயர வெளிச்சுவர் இருக்கிற அந்தப் மினியேச்சர் பால்கனில விட்டுட்டு, ஒரு டப்பாவில் தண்ணி,வீட்டுல இருந்த அரிசியப் போட்டுட்டு, படம் பாக்கலாம்னு கண்ணாடிக் கதவை மூடும்போதும் மூடுனபிறகும் மீண்டும் அதே மாதிரி கழுத்தச் சொழட்டி என்னயப் பாத்துச்சு…ஏன்னு தெரியல..ஆனா பயப்படுறமாதிரி தெரியல
அதுக்கப்ப்புறம் படத்தைப் பாத்து முடிச்சுட்டேன், ஒரு நாலஞ்சு தடவ புறாவ வந்து வந்து பாத்துக்கிட்டே.. படம் முடிஞ்சும் தூங்க முடியல.. மறுபடியும் சிலதடவை போய்ப்போய் பாத்தேன்.தூங்குறமாதிரி தெரிஞ்சுச்சு, தூங்காதமாதிரியும்தான். எப்படியோ 5 மணி ஆச்சு தூங்க, மறுபடி எட்டேமுக்காலுக்கு அரக்கப்பறக்க எந்திருச்சு ஓடிப்போய்ப் பாத்தா, நடந்துபோய் வேற எடத்துல நின்னுக்கிட்ருந்துச்சு. சாப்டுச்சா தண்ணி குடிச்சுச்சான்னு தெரியல. ஆனா என்னவோ வித்தியாசமா பண்ணுச்சு, கழுத்தச் சுத்தி ஒருமாதிரியாப் பாத்துட்டு, அதோட உச்சந்தலைய தரைல வச்சுத் தேச்சுக்கிருச்சு. எனக்கு ஏகப்பட்ட கேள்விகள் – இருக்கும் கவலைகளுக்குச் சகோதரர்கள் சேர்ந்தார்கள்:
எம் புறாவுக்கு என்ன பிரச்சினை? இதுவரைக்கும் அது பறந்ததே இல்லையா? நேத்து எதுவும் அடிகிடி பட்ருக்குமா? இல்ல மனுசனுக்கு மாதிரி எதுவும் மன வியாதியா? ஆட்டிஸம் மாதிரி
அப்பறம் இத்தனநாள் எப்டி வாழ்ந்துச்சு? அது நல்லபடியா பறந்து போய்ருமா?

இன்னும் கொஞ்சம் அரிசியும் போட்டுட்டு, அவசரமா ஆஃபிஸுக்கு வந்துட்டேன் சாயந்திரம் ஊருக்குப்போகும் நண்பரை ஏர்ப்போர்ட்டில் விட்டுவிட்டுத்தான் போய்ப் பார்க்கவேண்டும்..
2
 
வியாழக்கிழமை ராத்திரி புறா உயிரோடு இருந்ததே எனக்கு சந்தோஷம்தான்….. ஆனால் அது ஆரோக்கியமா இல்லைன்னு மட்டும் தெரியுது. சாப்பிடுது; தண்ணி குடிக்கிது. தலையில ஏதோபிரச்சினை. தலைகீழாவே பாக்க முயற்சி பண்ணுது. கழுத்தை 180° க்கு சொழட்டி, மல்லாந்து பாக்குது.

எல்லாத்தையும் விடக்கொடுமை, திடீர்திடீர்னு கழுத்தைத் திருப்புனபடிக்கு, அலகை மேல்பக்கமா வச்சுக்கிட்டு, உச்சந்தலையை தரைல அடிச்சிக்கிருது. அடிக்கடி.. இதத்தான் பாக்க சகிக்கலை.

புறாக்களுக்காக இரக்கப்பட்டோ இல்ல போறவழிக்குப் புண்ணியம் தேட மட்டுமோ, வீதிகள்ல போட்ருக்கிற  3 வகை இரைகளப் பொறுக்கிவந்து போட்டு, எதப் பிரியமா சாப்டுதுன்னு கண்டுபிடிச்சாச்சு.

பகல்நேரத்துல நான் போய் தண்ணி, இரை வச்சா, பயந்து நடக்கவோ, ஓடவோ, பறக்கவோ முயற்சிபண்றதுல,கீழவிழுந்து, மல்லாக்க போட்ட கரப்பான்பூச்சிமாதிரி துடிச்சிட்டு அப்பறம் எந்திரிக்கிது.பாவமா இருக்கு. நான் பால்கனிக்கு போகும் அந்த கண்ணாடிக்கதவையே ரொம்ப நேரம் பாக்குது.ஆனா, சிலசமயத்துல அந்தக் கண்ணாடிக்கதவுகிட்டயே வந்து நின்னு உள்ள பாக்குறதுக்கும் முயற்சிபண்ணுது….

என்னவோ போங்க, எனக்கு எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

எங்கேயாவது கொண்டுபோய்க் காட்டலாம்தான்….ஆனா நான் இருக்கும் ஊர்ல அது அவ்வளவு நல்லதில்லை.மொதக்கேள்வி இதோட பாஸ்போர்ட் எங்கன்னு இருக்கும். அப்பறம், கொஞ்ச நேரத்துல, நீ எத்தன நாளா இத வச்சுருக்கேம்பாக. எதுக்குக்கேக்கிறியன்னு நான் கேட்டேன்னு வச்சுக்கிங்க:

“ இல்ல,,,,,,புறாவுக்கு HM8V71K ன்னு ஒரு வைரஸ்தாக்கிருக்கு; அது மனுசங்களுக்கும் ரொம்ப ஆபத்து; அதுனால உன்னய குவாரன்ட்டைன் பண்ணபோறோம், ஏய் ஏய் எங்க ஓட்றே?  பா……ய்ஸ்…………..கேட்ச் ஹிம் ”

இப்டி நடக்கிறதுக்கும் ச்சான்ஸ் இருக்கு!

அதனால என்னதான் நடக்குதுன்னு பாத்துடலாம்… இதற்கான அமைப்பு ஏதாவது இருக்கான்னு தேடிட்ருக்கேன் இதுவரைக்கும் கண்ல படலை
 
24 June 2013

எம்புறாவக்காணோம்

இதுக்கு சந்தோஷப்பட்றதா வருத்தப்பட்றதான்னு தெரிலங்க. கொஞ்சநாளாவே எம்புறா கொஞ்சம் அதம் பண்ணிட்டுத்தான் இருந்துச்சு!
அதம்னா, குரல்குடுத்தா (ஏய் புறா! ன்னுதான்) வந்து எட்டிப்பாக்குறது, பால்கனிக்கு நாம போய் இரைதண்ணி வச்சுட்டு வந்தவுடனே இங்கேருந்து அங்க ஸ்டைலா ஓடுறது, ஓடிப்போய்த் திரும்பிப் பாக்குறதுன்னு…இப்டி அதம். ஏற்கனவே இதெல்லாம் கிடையாது. பல்ட்டியடிச்சுட்டு துடிதுடிக்கும். பாவமாயிருக்கும்.

அப்பறம் கொஞ்சநாளா அந்தப்பல்டி அடிச்சுத் துடிக்கிறது கொறஞ்சிருச்சு. ஊர்ல இருந்து ஊட்டுக்காரம்மாவும் பெரியமகனும் வந்தாக. வந்து இறங்குனவுடனே நான் ஒரு மாசமா கண்டுபிடிக்காத ஒண்ணை மகன்காரர் கண்டுபுடிச்சாரு: எம்புறாவுக்கு வலதுகண் பார்வை தெரியல, அதனாலதான் புறா தலையச்சுத்திசுத்தி பாக்குதுன்னு. சரியாத்தான் சொல்லிருந்தாரு.

நான் கண்டுபிடிச்சது அது ஆண் புறான்னு.. தட்டாமாலை சுத்துறதுமாதிரி சில சேட்டைகள் பண்ணுனதவச்சு.

அப்புறமா சின்னமகனும் வந்ததும் எல்லாருமா சொன்னது: ஒங்க புறாவுக்கு ஒன்னும் பிரச்சினயில்ல. வெளில போனா நாமலா எரைதேடனும்னுதான் இங்கயே செட்டிலாயிருச்சுன்னு.

இடைல ஒருநாள், ஒரே ஒருநாள், ஒரு ஜோடிபுறா விருந்தாளியா வந்து ஒரு 20 நிமிசம் இருந்து நல்லா சாப்பிட்டுட்டு தண்ணி குடிச்சுட்டுப் போனாங்க. அப்புறம் ஒருதடவை மட்டும் ஒரு ஜோடி மைனா அதேமாதிரி விருந்து. மத்தபடி எம்புறா தனிப்புறாதான்!

நேத்து பால்கனிய சுத்தம்பண்றதுக்கு புறாவ ஒருஅடி உயர அட்டப் பெட்டிக்குள்ள விட்டுட்டு, கழுவுனபிறகு, திரும்பவும் தரைல விட்டேன். எப்பவும் இந்தமாதிரி புடிச்சுட்டு விடும்போது கொஞ்சநேரம் பல்ட்டியடிச்சுத் துடிதுடிக்கும். ஆனா நேத்து ஒரே ஓட்டமா (ஆட்டிஆட்டிக்கிட்டு) ஓடி அவுக வீட்டுக்குள்ளபோய்த் திரும்பிப்பாத்துச்சு. சந்தோஷமா இருந்துச்சு

இன்னிக்கு மத்தியானம் ஒரு போன் சின்னமகன்ட்ட இருந்து: “அத்தா ஒங்க புறாவக் காணோம்” – ஒரு மாதிரியாய்ருச்சு.

கீழேயெல்லாம் எட்டிப்பாத்தா காணோமாம். 4 அடி உயரம் பறந்தாத்தான் நாலாவது மாடி பால்கனிய விட்டு வெளியே போகமுடியும். ஆக எம்புறா பறந்து போய்ருச்சு.
ஊருக்குப்போனா அதை எங்கவிட்டுட்டுப்போறதுன்னு யோசனையா இருந்தேன். (அல்கூஸ்ல ஒரு வேர்ஹவ்ஸ்ல இருக்குற சில ஆந்திர, பாகிஸ்தானி நண்பர்களைத்தான் மலைபோல நம்பிருந்தேன்) அது தெரிஞ்சிருச்சோ என்னமோ? போய்ருச்சு.

என்னைவிட்டுட்டுப் போனாலும் பொழச்சுப்போய்ருச்சுன்னு சந்தோசமாத்தான் இருக்குன்னு வருத்தத்தோட ஒத்துக்கத்தான் வேணும்!

 
26 June 2013

இதுக்குப் பேர் தான் அப்டேட்டுங்கிறது
———————————-

சந்தோஷம் சில சமயங்கள்ல நம்ம ஒடம்போட ஒட்டிருக்கிறமாதிரியே தெரியும்ல? அந்தமாதிரித்தான் எனக்கு நேத்து இருந்துச்சு… இன்னும் ரெண்டு நாளைக்காச்சும் தா(தொ)ங்கும்!

காலைல வேலைக்குக் கெளம்பிக்கிட்ருக்கும்போது, பெட்ரூம் சன்னல்ல ஏதோ பறவை வந்து உக்காந்த உணர்வு… ஓடிப்போய் நைஸா திரைய கொஞ்சூன்டு வெலக்கிப்பாத்தா எம்புறா மாதிரி தெரிஞ்சுச்சு. ஆ, எம்புறா வந்துருக்குன்னு சவுண்டுவிட்டு, எல்லாரையும் கூப்டுக் காட்டுனேன். அவுகள்லாம் வந்து பாக்கும்போது பறந்துபோய்ருச்சு. சரியாப் பாக்காத மனைவியும் மகனும் “இன்னும் கொஞ்ச நாளைக்கு ஒங்களுக்கு அப்டித்தான் தெரியும்”னு சொன்னபோது (எனக்கே அது சரிதான்னு தோனுனாலும்) ஒடனே பால்கனிக்கு ஓடிப்போய்ப் பாத்தேன். எதுத்த கட்டடத்து சன்னலோரம் உக்காந்துருந்தது எம்புறாதான்… கூப்ட்டேன், (எப்பவும் போல ஏ! புறா வான்னுதான்) பாத்துட்டு ஒடனே நேரா வர்றமாதிரி பறந்துவந்து, சடார்னு மேலே உள்ள வீட்டு சன்னல்பக்கம் போய்ருச்சு. எட்டிப்பாத்தா………அங்க ஒரு கருஞ்சாம்பல் நிற ஜோடியோடு ஜாலியா உக்காந்துருந்துச்சு.. எனக்கு அடக்க முடியாத சந்தோஷம். ரெண்டும் ஒடனே பறந்து போய்ருச்சுக… திரும்பி ரூமுக்கு வந்து யார்ட்டயும் ஒண்ணுஞ்சொல்லல… யாரு நம்பப்போறா?
வசூல்ராஜாவுல சப்ஜெக்ட்டு டிம்மு–டிப்பு அடிச்ச கதைதான்!
சொல்லப்போனா எனக்கே நான் லூஸு மாதிரி பினாத்துறமாதிரிதான் தெரிஞ்சுச்சு!

வேலைக்கு வந்துட்டேன். மத்தியானம் 3 மணிக்கு ஊட்டுக்காரம்மாக்கிட்ட இருந்து ஃபோன்:
“ஒங்க புறா வந்துருக்கு…பெட்ரூம் சன்னல்ல வந்து உக்காந்திருக்கு”
சொரத்தே இல்லாதமாதிரி உம் னு சொன்னேன்.
“சோடியா இன்னொரு புறாவையும் கூட்டிட்டு வந்துருக்கு”
மறுபடியும் சொரத்தே இல்லாதமாதிரி, ஒரு கருஞ்சாம்பல் கலர் புறாதானேன்னு கேட்டேன்.
“எப்டித் தெரியும் ஒங்களுக்கு?”
இப்ப ரொம்ப சொரத்தோட சொன்னேன்: காலைலயே பாத்துட்டேன், ஆனா எனக்கே அவ்வளவா நம்பிக்கை இல்ல.
அது எம்புறாதானேன்னு கம்பீரமா கேட்டேன்
“ஆமா அதேதான்; நல்லாப்பாத்துட்டேன்”
கொறஞ்சது ஒரு கால்கிலோ சந்தோசமாவது என்னோட எடைல சேந்திருக்கும் அப்போ.
இன்னிக்கு காலைல அதே வூட்டுக்காரம்மா:

“காலைல சீக்கிரமே முழிப்புவந்துருச்சு; ரென்டு சிட்டுக்குருவிக சன்னல்ல உக்காந்து சத்தம் போட்டுச்சுக. அப்பறம் புறாச்சத்தம் வேற கேட்டுச்சு. நம்மோட்டு புறாவாக் கூட இருந்திருக்கும்.”

நல்லாக்கவனிங்க, ‘ஒங்க புறா’ இப்ப ‘நம்மோட்டுப்புறா’ வாயிருச்சு!!!

இனி அப்பப்ப எங்கோட்டு புறா வரும்… நானும் காத்துக்கிட்டு இருப்பேன்!

 
21 July 2013
 
18/7 வியாழக்கிழமை, எம்புறாவ விசாரிச்ச நண்பர் ஷாஜஹானுக்கு நான் சனிக்கிழமையன்னிக்குச் சொன்னது:

இதத்தான் வாய்முகூர்த்தம்னு சொல்லிருப்பாய்ங்க போல ஷா!நேத்தும், வெள்ளிக்கிழமை லீவுல, வழக்கம்போல் நம்பிக்கையில்லாமபுறா வருதான்னு பாத்துக்கிட்டே இருந்தேன். சுமார் 12 மணிக்கு வந்துச்சு! குடும்பத்தோடதான்!
எதுத்த கட்டிட சன்னல்ல….

புத்திசாலித்தனமா, பால்கனியத்திறக்காம, பெட்ரூமுக்கு ஓடிப்ப்போய் சன்னலத் திறந்து, இரையும் தண்ணியும் வச்சுட்டு, மறைஞ்சிருந்து பாத்தேன், ரென்டுபேரும் வந்து, கொஞ்சம் – மரியாதைக்கான்டி – ரென்டுகொத்து கொத்திட்டு, ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டுப் போனாக..அதுக்கப்புறமும் ரென்டுமூனு தடவை வந்து என் கண்ல படுறமாதிரி இருந்துட்டுப் போச்சுதுக…
வூட்டம்மாட்ட போன்ல சொன்னதுக்கு பதில்: நல்லவேளை, நாங்க அம்மாமக்க தப்பிச்சுட்டோம்

காரணம்: அது தொலஞ்ச அன்னிக்கு நைட்ல கேட்ருக்கேன்: கேக்குறேன்னு தப்பா நெனக்கக்கூடாது, கோபப்படக்கூடாது, புறா நெசமாவே தன்னாலதான் காணாப்போச்சா?
(எப்டி இருந்திருக்கும் அவுகளுக்கு?)

This entry was posted in மீள்பதிவுகள். Bookmark the permalink.

1 Response to எந்த நேரமும் எம்புறா நெனப்புதான்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s