11-09-2012 அன்று ஆபிதீன் பக்கங்களில் கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவில் பின்னூட்டமாக எழுதப்பட்ட எனது பார்வை, மீள்பதிவாக இங்கே:
கூடன்குளம் அணு உலை அமைப்பது சரியா?
அல்லது
கூடன்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா?
எல்லோர் தலையயும் உருட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் எந்தக் கேள்வி சரி என்று தெளிவிப்பதே மோதலுக்கு வழிவகுத்துவிடும் நிலையில், அதற்கான பதிலளிக்க எல்லோரும் அவரவர் வசதிற்கேற்ப, பல அடிப்படைகளைப் பற்றிக் கொண்டு பேசுகிறார்கள்.
கல்வியாளர்கள்/பொறியாளர்கள் தொழில்நுட்ப அறிவை,
சமூக ஆர்வலர்கள் பேரழிவு, சுற்றுச்சூழல், வெப்பமயமாதல் போன்றவற்றை,
ஆளுங்கட்சியினர் அரசுக்கொள்கையை,
எதிர்கட்சியினர் எதிர்க்கட்சியாய் இருப்பதாலேயே,
துக்கடா கட்சிகள் அரசியலில் ஜொலிக்கமுடியாமையை,
சிறிய கட்சிகள் கூட்டணி தர்மங்களை,
அதிகாரிகள் தங்களது வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை,
பொதுமக்கள் தங்கள் குறுகியகாலப் பயன் மற்றும் சிரமங்களை,
அதிலும் ஏழைகள் பயத்தை,
இடைத்தரகர்கள் நீண்டகால வருமானத்தை,
மொக்கைகள் வெறும் பிரபலமாதலை,
ஊடகங்கள் பரபரப்பு மற்றும் தற்காலிகச் சுரண்டல்களை (exploitation),
தொழிலதிபர்கள் தங்கள் சுயநலன்களை,
போலி அறிவுஜீவிகள் அறிவுரையாற்றக் கிடைத்த வாய்ப்பால் வந்த அரிப்பை,
பொதுவுடைமை பேசுவோர் தம் சார்புக்கொள்கையால் வந்த தடுமாற்றத்தை,
இன்னும் சில உண்மையான பொதுநலன்விரும்பிகள் தாம் தம் அறிவால் அறிந்தது சரி என்ற நம்பிக்கையை,
இப்படி ஒவ்வொருவரும் ஒன்றைப் பற்றிக்கொண்டு பேசுகிறார்கள்.
இவர்கள் எல்லோராலும் அணு முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டதா?
அணுவின் ஆக மிகச்சிறிய பகுதியாக தற்போது சொல்லப்படும் பகுதி மீண்டும் பிளக்கப்பட சாத்தியமில்லை என்று சொல்லமுடியுமா? அதேபோல,
அணுஆற்றலின் பிரம்மாண்டம் இத்தனைதான் என்று வரையறுக்கப்பட்டு விட்டதா? அதிகபட்சமாக இப்போது சொல்லமுடிந்தது பூமியை வெறும் புகையாக மாற்றி, அண்டத்தில் சிறிதேசிறிதான அளவில் அசுத்தப்படுத்த முடியும் என்பதே.
அணுமின்சாரம் என்பதும் அணு உலைப்பாதுகாப்பு என்பதும் விபரம் அறிந்தவர்களால் பாமரனுக்கு புரியவைத்துவிட முடியுமா என்பது இருக்கட்டும், நன்கு படித்தவர்களால் கூட அதைப் புரிந்துகொள்ளமுடியுமா என்பதும் விவாதத்துக்குட்பட்டதே.
( நாராயணசாமி என்று பெயர்வைக்கப்பட்டவர்களால் வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் அணு உலைப்பாதுகாப்பு பற்றியும் ஒரே நாளில் நாட்டின் 100வது ராக்கெட் ஏவுதல் திட்ட வரையறைகளையும் அறிந்துகொள்ளமுடியும். அவர்களாலும் மற்றவர்களை அறியவைக்க முடியவில்லை )
நமது மக்களின் மின் உபயோகப் பழக்கவழக்கங்களை இனி மாற்றவே முடியாத அளவுக்கு மாற்றிவைத்துவிட்டோம். ஆக தேவை அதிகரிப்பு என்பது தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது.
தேவைக்கேற்ற உற்பத்திக்கு இப்போது ஆபத்தில்லாத முறையாக அறியப்படும் நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரிப்புக்குத் தேவையான நீர் கிடைக்கும் என்றே வைத்துக் கொண்டாலும் புதிய அணை கட்டவோ, இருக்கும் அணைகளின் நீர் மட்டத்தை உயர்த்தவோ மேற்சொன்ன வகையினர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா? மாட்டார்கள். அதற்கு வேறு பெயரில் போராட்டங்கள் உருவாகும்.
அனல்மின்சாரத்தில் பூமியின் நிலக்கரி இருப்பு, செலவு, சுற்றுச்சூழல் இத்தியாதிகள் நல்லமுடிவைக் காட்டவில்லை.
இவைபோக, குப்பையிலிருந்து, கடலலையிலிருந்து என்பது போன்ற இன்னபிற முறைகள், இன்றளவும், உருப்படாத திட்டங்கள் என்ற நிலையைத் தாண்டவில்லை.
சூரியமின்சக்தி நல்லதென்று இப்போது சொல்லப்பட்டாலும் அதிக உற்பத்திக்கான இன்றைய சாத்தியக்கூறுகள் நல்ல அறிகுறியைக் காட்டவில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க இன்னொரு தனி விவாதம் தேவை. எவ்வளவு நவீனமான மின்னணுசாதனமும் ஒன்று அல்லது இரண்டே வருடங்களில் 50-75% வரை விலை குறையும்போது சோலார் பேனலும் பேட்டரியும் விலை குறைய தொழில்நுட்பம் இல்லையென்பது (சாதாரண ஜலதோஷத்திற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது போலவே) பெரிய புதிரான விஷயமல்ல.
ஆக, பூமியின் கச்சா எண்ணெய் இருப்பு முழுமையாகத் தீராதவரையிலும், குறிப்பிட்ட முதலாளித்துவ நாடுகளிடம் மட்டுமே உள்ள கதிரியக்க உலோகங்களை நல்ல விலைக்கு விற்று, பணம்பெருக்கும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்யும் வகையில், அணுமின் சக்தி மட்டுமே ஆதிக்க சக்திகளால் முன்நிறுத்தப்படுகிறது. வேறு வழியே இல்லை என்னும் பிரமையும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
உண்மையில், வளரும் நாடுகளிடம் அபரிமிதமாக உள்ள வேறு எந்த மூலப் பொருளிலிருந்தும் மின்சக்தி எடுக்கும் தொழில்நுட்பம் இப்போதைக்கு வெளிவராது. வளர்ந்த நாடுகளை எதிர்க்கும் ஒன்றிரண்டு தென்அமெரிக்க, மத்தியகிழக்கு நாடுகளும்கூட அவைகளின் எண்ணெய்வளம் பாதுகாக்கப்படுவது மற்றும் விலையாக்குவது என்ற அளவிலேயே எதிர்க்கின்றன.
இந்த நிலையில் கூடன்குள போராட்டக்குழு சாதிப்பதென்பது கஷ்டமே. உதயகுமார் சமீபத்திய தொலைக்காட்சிப் பேட்டியின்போதுகூட அவரது 3-4 கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் எனக்கு இந்த உலை செயல்படுவதில் ஆட்சேபனை இல்லை என்ற ரீதியிலேயே பேசினார். அதில் முக்கியமானது இழப்பீடு சம்மந்தப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு நினைத்தால் அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து வரப்போகும் பிரச்சினைகளுக்காக ஒப்பந்தத்தில் சில அம்சங்களை நியாயமாகவோ ஏமாற்றும் திட்டத்துடனோ சேர்த்து, பிரச்சினையை முடித்து உதயகுமாரை மதிக்கப்படும் நபராக்க அரசின் ஈகோ ஒத்துக்கொள்ளாது. தன்போக்கிலேயே முடிப்பதில் பெரிய சிரமம் இருப்பதாக ஒரு அரசு கருதாது. அப்படியே முடித்துவைத்தாலும் இவர் வேறு பிரச்சினைகளை முன்வைத்து திட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது எனவும் அரசு கருதலாம்.
இன்னொரு அம்சமாக கழிவுப்பொருள்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பற்றி உதயகுமார் கிளப்பும் சந்தேகம் பீதி கிளப்புவதாகவும் அதற்கு அரசின் விளக்கம் என்னவோ இந்த சந்தேகம் முற்றிலும் வேற்றுகிரகத்திற்கானது என்கிற ரீதியிலும் இருக்கிறது. இதில் தெளிவிக்க வேண்டிய விஞ்ஞானிகளோ அரசு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பதிலும் அரசின் கூற்றுசார்ந்தே இருக்கிறது. அவர்கள் உண்மைதான் சொல்கிறார்களா என்பதை தெளிவிப்பது யார்? அப்படியே தெளிவித்தாலும் புரிந்துகொள்வது யார்? புரிந்தாலும் சரியாகப் புரிந்துகொண்டதை எப்படி அறிவது?
இது, முற்றாக, தொழில்நுட்பமும் சர்வதேச நுண்ணரசியலும் பிண்ணிப் பிணைந்திருக்கும் ஒரு சிக்கலான விஷயம். இப்போதைய நமது அரசியலமைப்பில் அரசியல் ரீதியாக வேண்டுமானால் பொதுமக்கள் எதிர்ப்பால் சில மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். அணுஉலை விவகாரத்தில் பொதுமக்களின் விருப்பம் வெற்றிபெறுவது குதிரைக்கொம்புதான்.
போராடும் மக்களின் உணர்வுகளையும் போராட்ட குணத்தின் உன்னதத்தையும் கொச்சைப்படுத்துவதற்காக இப்படிச் சொல்லவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை நினைத்தும் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலையாலும் வந்த ஆதங்கம் அது.
இவைபோக, இன்னும் சில லோக்கல் சந்தேகங்களும் உண்டு. அரசுகளின், அரசியல்வாதிகளின் சுயநல நடவடிக்கைகள் வியப்பளிக்கின்றன. தமிழக மக்களை முழுமுட்டாள்களாக நடத்தும் விதமும் அதில் ஓரளவு வெற்றி அடைந்திருப்பதும் வேதனையளிக்கிறது.
முந்தைய திமுக அரசு தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மின்வெட்டு. சென்னையில் மின்வெட்டே இல்லாமலும் மற்ற நகர்ப் பகுதிகளில் ஒருநாளைக்கு வெறும் இரண்டுமணி நேரம் மட்டுமே இருந்ததும் பெரிய பிரச்சினையாக அப்போது தெரிந்தது. நாங்கள் வந்தால் மின்வெட்டு உடனே விலகும் என்று சொன்ன அதிமுக வின் ஆட்சி வந்தபின் சென்னை உள்பட தமிழகம் முழுதும் மிகக் கடுமையான 12 மணிநேர அளவுக்கு மின்வெட்டு வந்தது. வேறு எந்தப் புதிய பிரச்சினையோ, மிகப்பெரிய தொழில் திட்டங்களோ வரவில்லை. ஆனாலும் மின்வெட்டு அதிகமானது. மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இதற்கு திமுக தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்புப் பிரச்சாரமோ, போராட்டங்களோ இல்லை. ஆச்சர்யமான அம்சமாகும் இது. ஆட்சியையே தட்டிப்பறித்த ஒரு பிரச்சினை மேலும் மோசமடைந்தும், திமுக இதைக் கையில் எடுக்காதது உள்ளடி அரசியல் தவிர வேறென்ன? கூடன்குளம் மின்சாரம் இல்லாமலேயே, மின்கட்டணத்தைப் பல வருடங்கள் உயர்த்தாமலேயே, திமுக அரசு அதிமுக அரசைவிட பிரமாதமாக மின்விநியோகத்தைக் கையாண்டது என்ற குறைந்தபட்ச உண்மையை வைத்து அதிமுக அரசைக் கண்டித்து, பொதுமக்கள் போராடவில்லை.
மாறாக, கூடன்குள மின்சாரம் தமிழகத்துக்கு முழுதுமாகக் கிடைக்காது என்று தெரிந்தும், அப்படியே கிடைத்தாலும், இருக்கிறதாகச் சொல்லப்பட்ட பற்றாக்குறை தீராது என்பது நன்கு தெரிந்தும், மின்வெட்டுப் பிரச்சினை தீர்வதற்காக, கூடன்குளம் திட்டம் செயல்படவேண்டும் என்று ஆதரவாகப் போராடினார்கள். என்ன ஒரு விந்தை? என்ன ஒரு அசட்டுத் தனம்? இப்போது முதல்வர் ஒருபடி மேலே போய், கூடன்குளம் மின்சாரம் முழுதும் தமிழகத்துக்கு வேண்டும் என்று கடிதங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்!
வேறு பரபரப்புச் செய்திகள் வரும்போது ஊடகங்கள் இந்தப் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்துவிடும். இருக்கவே இருக்கிறது மக்களின் மறதிக் குணமும் புதிது புதிதாய் பரபரப்புத் தேடும் மனப்பான்மையும்.
சில நாட்களாய் நான் அவதானித்த இன்னொரு விஷயம். அணு உலை விபத்து பாதிப்புகளைச் சொல்லும் ஒவ்வொருவரும் இப்போது காட்டும் ஒரு உதாரணம் – பொகுஷிமா. காலங்காலமாக அணுஉலை விபத்துக்கு உதாரணமாய் சொல்லப்பட்ட, பொகுஷிமா பாதிப்பைவிட பலமடங்குகள் பாதிப்புத் தந்த, செர்னோஃபில் விபத்தைச் சொல்வதை ஓல்டுஃபேஷனாக்கி விட்டார்கள்.
இறுதியில் மிஞ்சப்போவது, சாமானியர்களான கூடன்குளம் பகுதி மக்களின் மனதில் இருக்கும் அணு உலை விபத்து பற்றிய தீராத அச்சமும் அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதைப் பற்றிய அடிப்படைக் கவலையுமே.
சுமார் 20 ஆண்டுகளில் ஒவ்வொரு இலையாக வெளிவந்து 15 ஆயிரம் கோடிகளை விழுங்கி இன்று விருட்சமாக நிற்கும் கூடன்குளம் உலையை தற்போது ஆதரிப்பது தவிர வேறு வழி இல்லை. இந்த ஒருவருடமாகக் காட்டும் அளவுக்கு எதிர்ப்பை 15 வருடங்களுக்கு முன்போ அல்லது குறைந்தது 10 வருடங்களுக்கு முன்போ இதே முனைப்போடு காட்டியிருந்தால் விளைவு வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவதாக உதயகுமார் இப்போது சொன்னாலும் பழைய பத்திரிக்கை கட்டிங்குகளைக் காட்டி நிரூபித்தாக வேண்டிய நிலையில்தான் எதிர்ப்பு இருந்திருக்கிறது.
கூடன்குளம் ஒரு பாடமாக இருக்கப் போகிறது. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்க்காவிட்டால் எத்தனை அரசுகள் மாறிமாறி ஆட்சியேறினாலும் நடக்கக் கூடாதது நடந்தே தீரும்.
எதிர்ப்பை வெறும் அணுமின் நிலைய எதிர்ப்பாக மட்டும் நடத்தாமல், அணு உலை எதிர்ப்பாக, அணுகுண்டுப் பிரயோகத்திற்கு எதிராகவும் நடத்தவேண்டும்.
மேலும் அதிகரித்து வரும் மின்தேவைக்கு என்ன செய்வது என்பதுதான் விஞ்சி நிற்கும் விடை தெரியாக் கேள்வி……
அற்புதமான கட்டுரை.
ஆழமான பார்வை.
இன்னும் கூட
இப்படியான யதார்த்த உண்மைகளை
இதில் பதிய வைத்திருக்கலாம்.
-தாஜ்