நாவல் எழுதுவது நாவல்பழம் தின்பதுபோன்றது – ஒரு எளிமையான ப்ளுப்பிரிண்ட்
பின்நவீனத்துவ துவாரத்துல புதுசா மூக்கை நுழைக்கும் புது வாசகர்களுக்கு மட்டுமான ஒரு நிலைத்தகவலோடு தொடங்கலாம்:
தமிழ்ல 3 வகை எழுத்தாளர்கள் இருக்காங்க.
1. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுலயே பிரபலமா இருக்கிற 3 எழுத்தாளர்கள்
2. தமிழ்ல எழுதுற தமிழ் எழுத்தாளர்களில் தமிழ்நாட்டுல பிரபலமே ஆகாம இருக்கிற 3 எழுத்தாளர்கள்
3. எழுத்தாளர்கள். இருக்குறதிலதிலேயே பாவப்பட்டவர்கள் இவர்கள்தான். குறைந்தது நூறு பேர்களாவது இருக்கும் இந்தவகையினர் எண்ணிக்கையில் அதிகம். காலத்தால் அழியாத பலதையும் எழுதிவைத்துவிட்டுப் போனவர்களும் இன்னும் எழுதிக்கொண்டு இருப்பவர்களும் இதில் அடக்கம். தமிழ் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமான 3 தகுதிகள் இல்லாதவர்கள். அவையாவன: அரசியல், அழுக்கு, மற்றும் அசிங்கம்
சில நாட்களுக்குமுன் வந்த ஒரு பத்திரிகைச் செய்தி என்னோட உணர்ச்சிகளைக் கிளப்பி விட்ருச்சு. அதனால என்னனு சும்மாயிருக்க நான் ஒன்றும் சாதாரண ஆள் இல்ல.
“தமிழ்நாட்டுலயே இன்னமும் பிரபலமே ஆகாத” 3 எழுத்தாளர்களில் ஒருவர் எழுதுவதை நான் படிப்பதில்லை. இன்னொருவர் எழுதுவதை அவரே படிப்பதில்லையாம்.
(குறிப்பு: இப்படியே அடுத்த பாராவுக்குப் போயிரலாம். ஆனாலும் முடியாது. இதுதான் தமிழ்நாட்டுல எழுதுறவனுக்கு இருக்கிற நெலமை. என்னோட வாசகர்கள் எல்லாருமே பின்நவீனத்துவ வாசகர்கள்தான்னாலும், ஒன்னுரெண்டு பேருக்கு நான்தான் அந்த மூணாவது பிரபலமே ஆகாத எழுத்தாளன்னு சொல்லியே ஆகவேண்டிய கேவலமான வாசகத்தரம்தான் இன்னமும் தமிழ்நாட்டுல இருக்கு. மாட்டுத்தாவணி பகவதி ஏதாவது செஞ்சு மாடங்குளம் ரசாயணமின் நிலையத்துல ஏதாவது விபத்து நடக்கவச்சு இந்த தமிழ்நாடே அழிஞ்சுபோயிரனும். அப்பறம் “பின்விபத்து எலக்கியம்” உருவாகி அதுல நான் மட்டுமே எழுதனும்)
எம்புட்டு நாளைக்குத்தான் நாம இப்டி பொலம்பியும், சாபம்விட்டுமே பொழுதைகழிச்சு, காலத்த ஓட்றதுன்னு யோசிச்சிக்கிட்டுருக்கும்போதுதான் அந்தச் செய்தி கண்ணுல பட்டுது. பேசாம நம்மலும் ஒருநாவல் எழுதுனா என்ன? இந்தச் செய்தில ஒரு முழுநாவலும் எழுதுற அளவுக்கு விசயம் ஏராளமாவும் தாராளமாவும் கொட்டிக்கிடக்கு. சரி நாவல்னா அதுக்கு இப்ப ஒரு டார்கெட் இருக்கு. 700ல இருந்து 800 பக்கத்துக்கு எழுதனும். நாம மொதல்ல செய்ய வேண்டியது என்னன்னா, நிதானமா யோசிச்சு இந்த 700-800 பக்கத்த எப்டி ரொப்புறதுங்கிறதுக்கு ஒரு ப்ளூப்பிரிண்ட் போடனும். ஆனா, எழுத ஆரம்பிச்சதுக்கப்புறம் நிதானமா யோசிக்கவே கூடாதுங்கிறதுல இப்பவே தெளிவா இருக்கணும்.
தமிழ்நாட்டுல ப்ளுமூன் வந்த நெறஞ்ச பவுர்ணமியான இன்னைக்கு ராத்திரி தூக்கத்த துச்சமாக்கி நம்ம ப்ளூபிரிண்ட போட்றது பொருத்தமா இருக்குன்னு முடிவுசெஞ்சுட்டேன். (இன்னிக்கு ராத்திரிபூரா தமிழ்நாட்டு வாசகர்கள் ஒருத்தரும் தூங்காம, ஒவ்வொரு மூனுவருசத்துக்கு ஒருதரமே நடக்கும் அதிசயத்திலும் அதிசயத்த தவறவிடக்கூடாதுன்னு, மூன் எப்ப புளூவாகும்னு நிலாவ பாத்துக்கிட்டே இருந்தாகலாம். அன்னிக்கு வரைஞர் தொலைக்காட்சில செய்திகள அலசி ஆராய்ஞ்சு பிரிச்சு நாறடிக்கும் நன்முகசந்திரன்கூட நிலா லேசா ப்ளுவா மாறுற மாதிரி தெரிஞ்சாலும் முழுநீள ப்ளுவா மாறாததுல (வாசக)மக்கள் ஏமாந்துவிட்டனர்னு நமுட்டுச் சிரிப்போடவே சொன்னார்)
இப்ப மொதல்ல அந்த செய்தி என்னன்னும் அதோட சாராம்சம் என்னன்னும் பாப்போம்.
– இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதாகும் கிம் ராம்சே என்ற பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 100 முறையாவது ஆர்கஸம் எனப்படும் செக்ஸ் உச்சநிலை ஏற்பட்டு விடுகிறதாம் – இதுதான் செய்தியே.
செம மேட்டர்ல? அதாவது நாவலின் கரு இதுதான். வாசகர்களை நம்மோட முயற்சி எதுவும் இல்லாமலேயே வாசிப்பின் உச்சத்துக்கு எடுத்துச்செல்ல இதைவிட வேற என்ன சப்ஜெக்ட் கிடைக்கும் சொல்லுங்க?
ப்ளுப்பிரிண்ட்ல நம்ம திட்டம் என்னன்னு கிளியரா எழுதிட்டேன். அதக் கொஞ்சம் பாருங்களேன்:
நம்ம கதாநாயகனுக்கு இந்தப் பிரச்சினை வருது – அதனால அவனுக்கு என்ன பிரச்சினை, அவனது 18 வயது தோழிக்கும், 24 வயதான காதலிக்கும், கூடவேலை செய்யும் 36 வயதான பேரிளம்பெண்ணுக்கும், அதன்பிறகு இவன் வாடகைக்குத் தங்கியிருக்கும் சிறுபோர்ஷனுக்கு உரிமையாளரான 48 வயதில் தனியாக வாழும் பெண்ணுக்கும் கதாநாயகனால் என்னென்ன பிரச்சினையெல்லாம் வருதுங்கிறத, பெண்ணியம் சார்ந்து விவரிக்கும் பின்நவீனத்துவ ஓவியம்தான் எனது காவியம்
மொதல்ல அந்த செய்தில இருக்கிற சாராம்சங்கள எலாபரேட் பண்ணி பிரிச்சி மேஞ்சிறனும். ஒவ்வொரு வரியயும் ஒரு பக்கத்துக்கு வெளக்கி வியாக்கியாணம் பண்ணாலே கொஞ்சம் வால்யூம் வந்துரும். அதே நேரத்துல இந்த செய்திகள மட்டும் ரொம்ப சாஸ்தியா வெளக்கிக்கிட்டே இருக்கக் கூடாது. நாம முழுசெய்தியவும் எடுத்துக்கிட்டோம்னா நாவல் சைஸ் டபுளாயிரும். வெல அதிகமாச்சுன்னா, வாசகர்கள் லேசா முழிச்சுக்கிறதுக்கும், விற்பனை குறையுறதுக்கும் நாமலே காரணம் ஆயிருவோம்.
முக்கியமா இவருக்கு வந்திருப்பது Persistent Genital Arousal Disorder (PGAD) என்ற மருத்துவப்பிரச்சினை என்பதைக் கடைசிவரை சொல்லாமல் நம்ம நாவல் கிளைமாக்ஸ் வரை இழுத்தடித்து விடவேண்டும்.
ரயிலிலோ, பஸ்ஸிலோ கூட போக முடியாமல் லேசான அதிர்வும், அசைவும் கூட அவரை கிளைமேக்ஸுக்குக் கொண்டு போய் விடுகிறதாம் என்பதை முடிந்தவரை கிளுகிளுப்பாக எழுதிரணும். இந்த இடத்துல நாம எழுதுற வாசகங்கள ரொம்பக் கேர்ஃபுல்லா டீல் பண்ணனும். நாம ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன்கிறதை, ஒருமாதிரி மயக்கநெலைலயே, நம்ம பின்நவீனத்துவ வாசகன் உணந்துகிட்டேயிருக்கிறமாதிரி இருக்கணும். அப்பப்ப அவனுக்கு ஐஸ் வச்சு பதப்படுத்திக்கிட்டே இருக்கணும்.
முன்னுரைல ஆர்க்கஸம் பத்தி ஏதாவது ஒரு மெடிக்கல் ஜர்னல்ல இருந்து விசயத்த சுட்டு அதுல சம்மந்தப்பட்ட என்ஸைம், ஹார்மோன் பத்தி கொஞ்சம் பின்நவீனத்துவ பீலாவிட்டு, எனக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்னு கொஞ்சம் அவுத்துவிடனும். காசநோய் வந்து எலும்பும் தோலுமாய் படுத்தபடுக்கையாய் இருந்தபோதே ஒருநாளைக்கு 6 தடவை ஆர்க்கஸம் வந்ததாவும், அதுனாலயே ராத்திரிகள்ல ஆம்பள நர்ஸ்கள எனக்கு காவலா போட்டது ஆஸ்பத்திரி நிர்வாகம்னு புருடாவிடனும்.
55 வயசுல ரென்டு முழங்கால்லயும் மூட்டுவலிவந்து, ஒரேநேரத்துல ரென்டுகால்லயும் ஆப்பரேசன் பண்ண மூனாவது நாளே ஜிம்முக்குப் போய் 180 கிலோ வெய்ட் தூக்கும்போது தோள்பட்டைக்கு மேல தூக்குற ஒவ்வொருதடவையும் தலா 2 ஆர்க்கஸம் வந்ததாவும் அப்ப நான் விட்ட சத்தத்தைக் கேட்டு தூரத்துல எக்ஸர்சைஸ் பண்ணிக்கிட்ருந்த 23 வயது இளம்பெண் ஓடியாந்து உடனே நண்பியானதா ஒரு கதைய அளந்துவிடனும்
கதைக்களங்களா ஒரு மலை, ஒரு கடற்கரை, ஒரு தோட்டம், ஒரு வனாந்திரம், ஒரு இந்திய-நேபாள எல்லைக் கிராமம்னு ஒரு 5 லொக்கேஷன் வச்சுகிட்டு, கூடவே ரெண்டு வெளிநாட்டு மாநகரங்கள்ல கதாநாயகன் சம்மந்தப்படாத ரென்டு சம்பவங்கள கிளைக்கதைகளா எடுத்துவிட்டோம்னா பக்கம் எகிறிரும்.
எஸ்எஸ்எல்சி-ல படிக்காம கோட்டைவிட்டபோது அப்பா வீட்டுக்குள்ள வச்சு பெல்ட்டக் கழட்டியும், வீதிலவச்சு (எதுத்தவீட்டுப் பொம்பளப்புள்ள முன்னால) செருப்பக் கழட்டியும் அடிச்சபோது அவமானம் தாங்காம கோச்சுக்கிட்டு வீட்டவிட்டு ஓடி, நாயாப்பேயா அலஞ்சு, நாலே நாளைல எலும்பும் தோலுமா திரும்பிவந்து, அப்பாக்குத் தெரியாம அம்மாட்டயும் அக்காட்டயும் கொஞ்சநாளைக்கு கொல்லப்பக்கத்துல சோறுவாங்கித் தின்ன அனுபவங்கள ஒரு தினுசா எழுதி, ஏதோ கைலாசமலைல ஞானதிருஷ்டி அடைறதுக்காகவே பயணப்பட்ட மாதிரி வாசகன் மண்டைக்குள்ள புகுத்தணும். வீட்டுக்குள்ள செஞ்சத வீதியிலும், வீதியில செஞ்சத வீட்டுக்குள்ளயும், அப்பா செஞ்சிருந்தா நாம ஓடிருக்க மாட்டோம்கிறத வாசகன் உணந்துரக்கூடாது- கூடவே கூடாது.
வீட்ல இருந்து 2 கிமீ தூரத்துல இருக்கிற முந்திரிக்காட்ல அப்பாக்குப் பயந்து ஒளிஞ்சு திரிஞ்சத எழுதி, ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு போதிமரமா மாத்திரனும். கொட்டைபொறுக்குற சீசன்ல, காட்டுக்குள்ள பொம்பளைப் புள்ளைக ஒண்ணுக்கு ரெண்டுக்கு இருந்தத, தூரத்துல இருந்து பாத்துட்டு ஏதோ 10 இன்ச் தூரத்துல இருந்து நாவல்நாயகன் பாத்ததுமாதிரி சரடுவிட்டுக்கிட்டே இருக்கணும். 60-70 பக்கத்துக்கு அப்பறமா வாசகனுக்கு லேசா சோர்வு தட்டும்போது, இதையே வேறவேற வார்த்தைகள்ல வேற சம்பவம் மாதிரி எடுத்துவிடுவது பக்கங்களை எகிறவைக்கும்.
லொக்கேஷன்களப்பத்தி அப்பப்ப வர்ணிச்சுக்கிட்டே இருக்கணும். உதாரணமா கடற்கரைல உக்காந்து கடலைப்பாக்காம ஊரைப்பாத்துக்கிட்டு கடலுக்கு முதுகைக் காமிச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருந்த ஒரு சிறுவன் அணிந்திருந்த கிழிஞ்ச டவுசரில் தெரிந்த ஓட்டைகளின் வடிவத்தில் விரிந்த கதாநாயகனின் கற்பனை விரிசலை பக்கக்கணக்கில் விவரிக்கணும். (கடலுக்கு முதுகுகாட்டி அமர்ந்திருந்த சிறுவனின் கிழிந்த டவுசர்னு 6 வார்த்தைல சொல்லக்கூடாது)
மலைல வந்த ஆர்க்கஸத்த சொல்றேன்னு சொல்லிக்கிட்டே அதுல இருக்கிற கருவைமரம், கொளுஞ்சிச் செடி, கோவைக்கொடி இதயெல்லாம் வாசகன் பாத்ததே இல்லங்கிற ரேஞ்சுக்கு வர்ணிக்கனும். கருவைமரத்துல ஒட்டிக்கிட்டு இருக்கும் சில்வண்டு விடும் சவுண்டபத்தி ஒரு 5 பக்கம் எழுதிரலாம். மரத்துல வடியிற பிசினப்பத்தி எழுதி அதை ஆர்க்கஸத்தோட கம்பேர் பண்ணி கிளுகிளுப்பா எழுதி 10 பக்கத்த ஓட்டிரலாம்
முக்கியமா கதையின் காலகட்டம் ஒரு மழைக்காலமா இருக்கணும். அப்பத்தான் மழையையும் பலமாதிரி வர்ணிச்சு பக்கத்த ஓட்டலாம். வெளியே போனான் மழைவந்துச்சு, கம்பி கம்பியா மழை ஊத்துச்சு, வீட்டுக்கு திரும்பும்போது மழை குறைஞ்சுச்சு; ஒவ்வொரு மழைக்கிரணமும் ஒரு வெளக்குமாத்துக் குச்சி ஒயரமே இருந்துச்சு, அது மொகத்துல விழுகும்போது, கதாநாயகனின் சின்னம்மா, சித்தப்பாவ வெளக்கமாத்தால அடிச்சது அவனுக்கு நெனப்பு வந்ததுன்னு ரெண்டுபக்கமாவது எழுதலாம். ஒரு பத்துபக்கம் கழிச்சு மறுபடி மழைவந்துச்சுன்னு ஆரம்பிச்சிற வேண்டியதுதான். எப்பப்ப பக்கம் ஸ்லோவா ரெம்புதோ அப்பல்லாம் மழைவந்துச்சு, துளித்துளியா விழுந்துச்சுன்னு ஓட்ட வேண்டியது.
அடிக்கடி, மீண்டும் மழைவந்ததுன்னு எழுதி, பக்கத்தை நிரப்புறமாதிரி, வெயில்காலமா இருந்தா, வெயில, மீண்டும் வெயிலடிக்க ஆரம்பித்ததுன்னு எழுத முடியாதுல்ல? வர்ணிக்கமுடியாதுல்ல? இதுவரைக்கும் எந்த பிரபலம் இல்லாத எழுத்தாளராவது “அந்த மரத்திலிருந்து வடிந்து விழுந்து கொண்டிருந்த கிளையின் நுனியிலிருந்து தரை நோக்கி நீட்டிக்கொண்டிருந்த ஒரு கொளுந்து இலையின் கீழ்முனையில் இன்று காலையில் அடித்த இளம் வெய்யில் இந்த மதிய வேளையிலும் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கிறது“ ன்னு எழுதிருக்காரா? அப்படி எழுத மாட்டார். பின்நவீனத்துவ வாசகனின் பின்புறத்தில் லாஜிக் இடிக்கும்ல?
அப்புறம் கொஞ்சம் மிருகங்கள் பத்தியும் எடுத்துவிடனும். வேப்பமரத்தின் இலையின் காம்பில் ஒக்காந்திருந்த ஒரு சின்ன செவ்வண்டை வர்ணிக்கும்போது, அது தனது தலையிலிருந்த கொம்புகளை அசைத்துத் திருப்பி, கண்களை உருட்டி , வாயைப்பிளந்து நாயகனை நோக்கி கர்ஜித்ததுன்னு எழுதுற எழுத்துல, வாசகன் மூளைக்கு வரும் உருவகத்தில், ஒரு தேக்கு மரத்தின் இலைக்காம்பில் கவ்விக்கொண்டிருக்கும் தேவாங்கு சைஸுக்கு அந்த வண்டு தெரியணும். ஒரு நரியை அதிசயமான மிருகம்போல வர்ணிக்கனும். அதையெல்லாம் யாரும் டெய்லி பாத்துக்கிட்டே இருக்கிறதில்ல. அப்டியே, பின்னாடி யாராவது நம்ம தப்பை சுட்டிக்காட்டினா, உனக்கு மூளைப்பிறழ்ச்சி இருக்குன்னு கொழப்பிவிட்டு சமாளிச்சுக்கலாம்
குறிப்பிட்ட சில வார்த்தைகள் அடிக்கடி ரிப்பீட் ஆகுறதப்பத்தில்லாம் கவலைப்படக்கூடாது.
== ஒரு காலையில் ஒரு சிறுவன் ஒரு கிளாசை வைத்துக்கொண்டு ஒரு டீக்கு ஒரு வழிபிறக்காதா என்று ஒரு மணிநேரமாக ஒரு தெருவின் முனையில் இருந்த ஒரு டீக்கடையின் வாசலுக்கு அருகே கிடந்த ஒரு பெஞ்சின் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரின் முகத்தை ஒரு சோகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ==
என்று எழுதிய ஒரு பாராவை மேற்கோள் காட்டி, விமர்சகர் ஆதிசேஷ வில்லங்கன் என்பவர் கடுமையாகத் திட்டி எழுதுவார். முழுநாவலிலும் ஒரு என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் 273 பக்கம் குறைகிறதுன்னு ஆதாரத்தோடு சொல்லுவார். அதைக் கண்டுகொள்ளக்கூடாது. பதிலுக்கு அவர் சிறுவயதில் டீக்கடையில் கிளாஸ்கழுவும் பையனாக இருந்தார் என்று ஆதாரமில்லாமல் அவிழ்த்துவிட வேண்டும்.
பிறகு நாவலில் சில வில்லங்கங்களை வேண்டுமென்றே சம்மந்தமில்லாமல் புகுத்தவேண்டும். உதாரணத்துக்கு: கீதை எதிர்ப்பவர்களை அழித்தொழிக்கவேண்டும் என்று தீவிரவாதத்தை முன் வைக்கிறது என்பது போன்ற வாசகத்தை வைத்துவிடவேண்டும். நிச்சயம் ஒரு விவகாரம் வெடிக்கும். நாவல் பப்ளிசிட்டிக்கு உதவும். ஒரு 100 பக்கம் கழித்து, நாயகன் ஒரு மரத்தில் கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருக்கும்போது ஆர்க்கஸம் வருவதை விவரிக்கும்போது ஒரு மகாபாரதக் கிளைக்கதையை நுழைச்சிரணும். அப்போ, அர்ச்சுணன் கண்ணனிடம் எதிரில் நிற்கும் சகோதரர்களை யுத்தம் என்ற பெயரில் கொல்லவேண்டுமா என்று சந்தேகம் கேட்கும்போது, கண்ணன் அர்ச்சுணனிடம் எதிரில் நிற்பது உன் சகோதரர்கள் அல்ல. அதர்மம்தான் நிற்கிறது. அதனை அழித்தொழி என்ற தீவிரமான வாதத்தை முன்வைத்தான்னு எழுதிட்டா, விவகாரம் வரும்போது இதைக்காமிச்சு தப்பிச்சுக்கலாம்.
இசை, மருத்துவம், ஆன்மீகம், தோட்டம்போடுவது, பொறியியல், ஓவியம் இன்னும் இதுமாதிரி எனக்கு சுத்தமா தெரியாத பலதுறைகளப் பத்தி அங்கங்க எடுத்துவிட்டுக்கிட்டே இருக்கணும்.
அப்பறம் இது உண்மையா கற்பனையான்னு ஒரு சந்தேகம் வாசகனுக்கு வந்துகிட்டே இருக்கனும். பின்நவீனத்துவத்துல இது ரொம்ப வசதி. புனைவுன்னு சொல்லிக்கலாம். என் நண்பனோட கதைங்கலாம். ரெண்டுபேரைவிட்டு உண்மைன்னும், இன்னும் ரெண்டுபேரைவிட்டு புனைவுன்னும் விவாதிக்கவிடலாம். நம்மலாவே, நாலு கேள்விய நமக்கே எழுதிட்டு, நம்மளே பதில் சொல்லி வாசகன கொழப்பிவிட்றலாம்.
என்ன பண்ணியாச்சும் ஒரு பதிப்பாளரை இந்தத் தடவை புடிச்சிட்டோம்னா, அடுத்த நாவலுக்கு ஒரு சினிமா பிரபலத்த வளைச்சுரலாம்.
வேறென்ன வேணும்? இந்த ப்ளுப்பிரிண்டயும் அடிக்கடி திருத்திக்கலாம்.
நாவல் வெளிவர்றவரைக்கும் ஏதாவது பிரச்சினைய கெளப்பிவிட்டுக்கிட்டே இருக்கணும். சக பிரபலம் ஆகாத எழுத்தாளர்களை அவமதிச்சுக்கிட்டே இருக்கணும். எல்லாருக்கும் புடிச்ச கதையையோ நாவலையோ நல்லால்லைன்னு சொல்லனும். சீசீன்னு அடிபட்டாலும் கவலைப்படக்கூடாது. எல்லாரும் ஒதுக்குன ஒரு கதையை ஓஹோன்னு பாராட்டனும்.
அவ்வளவுதான் ப்ளுப்பிரிண்ட்.
ஒரு நாலு அஞ்சு நாளைக்கு லீவ் வருது. அப்ப திட்டம்போட்டு ஒருநாளைக்கு இத்தனை பக்கம்னு டார்கெட் வச்சு, அன்னம் தண்ணி ஊண் உறக்கமில்லாம, ஒழைச்சு எழுதி முடிச்சிரவேண்டியதுதான். என்ன லேசா மண்டை கழண்டுக்கிரும். அதுவும் நல்லதுதான் – அபாரமான எனர்ஜி கெடைக்கும். முடிச்சிரவேண்டியதுதான்.
அய்யய்யோ, விடிஞ்சுருச்சே. சாதாரணமா – நாம அதிசயமா, எப்பவாவது பாக்குற – ஒவ்வொரு விடியலுக்கும் ஒரு ஞானோதயம் வருமே? ஏன் இன்னிக்கு வல்ல?
இந்த நேரத்துல ஏன் போன்வருது?
“ஒய், மணி ஏழாகுது, ஆறுமணிக்கு ஏர்ப்போர்ட்ல என்னய சந்திக்கிற ஆளா நீர்? என்னய்யா பண்றீர்? இன்னும் எந்திரிக்கவே இல்லயா?”
“இல்லங்க, ஒரு நாவல் எழுதுறதுக்கு ப்ளுபிரிண்ட் போட்டுக்கிட்ருந்தேன், நைட் தூங்கவே இல்ல, அதான் டயத்தைக் கவனிக்கல”
“அது சரி, அப்ப விடும். நீர் வரவேணாம். நான் இப்ப நேரா என் ஆஃபிஸுக்குப் போறேன். இன்னிக்கு நைட் நான் வந்து மீட் பண்றேன். நாவல்லாம் எழுதி ரொம்பப் பிரபலமாகப் போறீராக்கும். சந்தோசம் ஒய், பை பை நவ்”
அச்சச்சோ! இன்னிக்கு ஞானோதயம் போன் மூலமாவா?
நாவல் எழுதினா நாம பிரபலமாயிருவமே?
அப்பறம் எப்டி தமிழ்நாட்டில் இன்னும் பிரபலமாகாத 3 எழுத்தாளர்கள்ல ஒருத்தரா நிலைநிக்குறது?
வேணாம், நாவலே வேணாம்.
வித்திருவோம்…
நல்ல வெலைகிடைச்சா…
இந்த ப்ளுப்பிரிண்ட்ட…
ஒன்று மட்டும் நிச்சயம் – இந்த ப்ளுப்பிரிண்ட் நாவல் உலகில் ஒரு திருப்புமுனையாகப் போவது மட்டும் நிதர்சனமான நிச்சயம்!