சிறு வயதில் எங்கள் ஊர் வாரச்சந்தை எனக்கொரு ஃபேன்டஸி. அந்தக் கூட்டமும், அதில் தெரியும் உயிரியக்கமும், ஒருமாதிரி பரவசப்படுத்தும். வியாபாரிகளின் அழைப்புக்களும், அவர்களது பொருட்களின் பெருமைகளை பறைசாற்றும் வித்தியாசமான அடித்தொண்டை விளம்பரக் கதறல்களும், இன்னும் அமைதியே உருவான வயதான ஆண்/பெண் வியாபாரிகளின் இருக்கைகளும், இன்னபிற சண்டை சச்சரவுகளும், அன்றைக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நிறையப் பொருட்களின் காட்சிகளும் என்னைத் தவறாமல் அங்கு அழைத்துச் செல்லும் காரணிகள்
வீட்டிலிருந்து கடைவீதி வழியாகப் போனாலும், கொல்லைப் பக்கத்தில் இருக்கும் நீண்ட வீதி வழியாகப் போனாலும், பஸ்ஸ்டாண்டுக்குள் இருந்த அத்தாவின் கிளினிக்குக்கு சென்றுவிடலாம். புதன்கிழமைகளில் மட்டும் இந்த இரண்டு வீதிகளுக்கும் நடுவில் இருந்த அந்த மிகப்பெரிய காம்பவுண்டுக்குள் இந்த வழியாக நுழைந்து அந்த வழியாக வெளியேறிச் செல்லும் சந்தோசமே தனி. அன்று முழுஊரும் மாலைவரை கூட்டமோ கூட்டம். சில பிரத்தியேக கூவல்கள் தனிக் கவனம்பெறும். கேட்கும் சிறுவர்கள் அதை வீட்டில் ஒத்திகை பார்ப்பது சாதாரணமான ஒன்று.
(எங்கள் ஊர் (மர்ஹூம்) அபுபக்கர் மோதினாரின் பாங்கும் அப்படிப் பட்டதே. எல்லா மத சிறுவர்களும் அவர் மாதிரியே அட்சரம் பிசகாமல் பாங்கு சொல்வோம் – என்ன… ஒரிஜினல் பாங்கின் ஒரு வார்ததை கூட எங்கள் பாங்கில் இருக்காது!! எங்கள் மீது எந்தக் குறையும் இல்லை. அப்படித்தான் எங்களுக்கு அவரது பாங்கு கேட்கும். இப்போதுகூட அதை நினைவுக்குக் கொண்டுவர முடியும் – ஆனால் அதைப் பாடித்தான் காட்ட முடியும்!!!!!)
இந்த சந்தைக் கூவல்களில் பிரசித்தி பெற்றது, வாரந்தவறாமல் வரும் ஒரு எலிமருந்து வியாபாரியின் கூவல்தான். பலவிதமான பொருள்கள் ஒரு நீண்ட மூங்கில் கம்பில் கட்டி எடுத்து வருவார். பூச்சிக்கொல்லிகள், பாச்சுருண்டைகள், பல நிறங்களில் **அர்னா**க்கயிருகள், ஊக்குகள், முள்வாங்கிகள், இன்னபிற ஐட்டங்கள். அவர் ஒரு மாதிரி அடித்தொண்டையில் கூவும் கூவல் எனக்கு மனப்பாடம் – அது இப்படி வரும்:
எலி மருந்து.
எலி, பெருச்சாளிகளைக் கொல்லும் மருந்து
–எலி மருந்து.
எறும்பு மருந்து கரையான் மருந்து
செல்லு மருந்து பேனு மருந்து
எலி மருந்து.
ஒரு சந்தோசமான சம்பாஷனையில், எங்களுடன் சகஜமாகப் பழகும் என் பெரியமாமுவிடம் இந்த சந்தை சமாசாரங்களை நானும், தம்பிகளும் பகிர்ந்து கொண்டோம். பலவற்றையும் கேட்டுச் சிரித்த அவருக்கு, நான் சொல்லிய இந்த எலி மருந்துக் கூவல் ஏதோ ஈர்ப்பை ஏற்படுத்த, டேய் நீ அந்த எலிமருந்து வியாபாரி சொல்றத மறுபடி சொல்லுன்னார். மேலே அப்படியே மீண்டும் சொன்னேன். சிறிது யோசிப்பதுபோல பாவனைகாட்டி, இன்னொருதடவை சொல்லுன்னார்.
அந்தக் கடைசி *எலிமருந்தை* சொல்லி முடித்த கால்வினாடியில், **அடத்தாலி.. மறுபடியும் எலிமருந்தா?**ன்னு அவர் கொடுத்த ரியாக்ஷன் எங்களுக்கு மாதக் கணக்கில் சிரிப்பைத் தந்துகொண்டிருந்தது. யாராவது அழுதால் பெரியமாமு ரியாக்ஷனைக் கொடுத்தால் அழுகை அப்போதே காலி. சிரிப்புதான்.
பத்து வருசத்துக்கு முன்னாடி தேரா(துபாய்)வில் நண்பர்களோடு தங்கியிருந்த போது, ஒரு நண்பர் விடும் குறட்டையும் உலகப்புகழ் பெற்றது. சில இரவுகளில் அதிகப்படிக்கு – முழுஇரவும் தூங்கமுடியாமல் – படுத்திவிடுவார். அடுத்தநாள் சொன்னோமென்றால் அப்படியா லேசா தட்டிருக்கலாம்லன்னு அக்கறையா சொல்வார். (தட்றதா – ம்ஹும் நான் கையில் கிடைத்தவற்றை எறிந்தே ஒன்னும் நடக்காது). ஒருமுறை தொடர்ந்து 3 இரவுகள் இந்தக் கூத்து நடக்க, நானும் அடுத்த நாட்களில், **பாய், நேத்தும் கவுத்துட்டியலே?ன்னு சொல்வேன். அவரும் வருத்தப்படுவார்.
நாலாவது இரவும் இது தொடர, ஐந்தாவது நாள், நான், **பாய், என்ன பாய், நேத்தும்**…னு ஆரம்பிக்க, அடுத்த வினாடி அவர், **அடத்தாலி மறுபடி எலிமருந்தான்னு** பெரியமாமு ரியாக்ஷனக் கொடுக்க, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரிடம் எப்போது எலிமருந்துக் கதையைச் சொன்னேன் என்று எனக்கு இன்று வரை நினைவுக்கு வரவில்லை..