ஹாரிபிள் ஹஜரத் ஜோக்கைப் பதிவதற்கு முன் அதை ‘உன் பிளாக்லயே போடேன்யா’ என்ற ஆபிதீன் நானாவிடம், ஒரு ஆசை வார்த்தை சொன்னேன். இதைப் போட்டீங்கன்னா, ஒரு ஹாஜியார் ஜோக் இலவசம்னு.
ஏமாறுவது அவருக்கு புதிதல்ல.
ஆனால் ஏமாற்றுவது எனக்குப் பழக்கமல்லவே?
அதனாலயே இப்ப அந்த ஹாஜியார் ஜோக் .
இதையும் போட்டார்னா, ஒரு ‘மோதினார்’ ஜோக் பின்னாலயே வரும்னு சொல்லிப் பார்த்தும் பயனில்லை!
ஏதோ நல்ல ஜோக்கா இருக்கும்னு நினச்சு, அவர் ஏமாந்துருவார்னு ஒரு நப்பாசை.
ம்ஹூம். முழிச்சுக்கிட்டார்.
அந்த ஹாஜியார் ஜோக் இதோ:
இந்த ஜோக்கை எனக்குச் சொன்னவர் நிஜத்தில் ‘இபாதத்’தான, குமரி மாவட்டத்து நண்பர்.
இவர் தினமும் ஃபஜ்ருக்கு எழுந்து, குளித்து, தொழுது வேலைக்குச் செல்லும்வரை, தூங்கும் மற்ற நண்பர்களுக்கு ஒரு சிறு சத்தம்கூட கேட்காதிருக்கப் பிரயாசைப்படுவார்.
இதை அவர் சொல்லிட்டு, சிரிச்சு முடிஞ்சதும் ‘மஜீதுபாய், இது நிசம்மாவே நடந்ததாக்கும்’னு ஒரு குண்டை வேறு தூக்கிப் போட்டார்.
நிசம்மாவா இருக்கும்?
சேச்சே இருக்காது. (யாரோ ஒரு குசும்பர் அவர்ட்ட ச்சும்மா சொல்லிருப்பார்)
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓடிய ஒரு சிறு கால்வாயைக் கடக்க அந்த கிராமத்தினர், ஒரு சிறிய கயிற்றுப் பாலம் அமைத்திருந்தனர். அதன்மூலமே மக்கள் அடுத்த ஊருக்கு நடந்து செல்லமுடியும்.
ஒருநாள் பிறவிக்குருடனான ஒருவர் அந்தப் பாலத்தைக் கடக்க முயலும்போது, பாலம் லேசாக ஆடியதுபோல உணர்ந்தார்.
சிறிது நின்றுவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பிக்க, பாலம் மறுபடியும் ஆடியது.
நின்றார். பாலம் ஆடுவதும் நின்றது.
பின் ஏதோ முடிவெடுத்தவராக தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
பாதி கடந்ததும், பாலம் ஆடுவது மிகவும் அதிகமானது. அவரால் நடக்க முடியவில்லை.
உடனே அவர் மிகுந்த சத்தத்துடன் “ஹாஜியாரே பாலத்தை ஆட்டாதீங்க, ஹாஜியாரே பாலத்தை ஆட்டாதீங்க” ன்னு கூச்சலிட ஆரம்பித்தார். பாலம் ஆடுவது நின்றது.
பாலத்தைக் கடந்ததும் ஒரு குரல் கேட்டது:
“ஏம்ப்பா, நீதான் பிறவிக்குருடனாச்சே, நானும் ஒரு சத்தமும் போடலை. பாலத்தை ஆட்டுனது நான்தான்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுச்சு?”
அதுக்கு அந்தக் குருடர் சொன்னாராம்:
“நீங்க இப்ப ஹாஜியார்தான். இல்லைங்கலை. ஆனா இந்த மாதிரி ஒரு வேலையைப் பண்றதுக்கு உங்களை விட்டா நம்ம கிராமத்துல வேற யாரும் இல்லீங்களே?”