புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!
இந்த வருடத்தின் முதல் பதிவாக, “ஆபிதீன் பக்கங்களில்” 2010ன் கடைசி பதிவாக வந்த எனது இடுகையை உங்கள் பார்வைக்கு வைத்து, மாச்சர்யங்களற்ற சமுதாயம் தழைத்தோங்க விழைகிறேன்.
நல்லிணக்கம் : ஒரு நினைவோட்டம் – மஜீத்
நல்ல மனங்கள் சங்கமமாகட்டும், நலன்கள் சூழட்டும், புது வருஷம் புன்னகையில் பூக்கட்டும், வாழ்க வளமுடன்! – இஜட். ஜபருல்லாவின் எஸ்.எம்.எஸ். வழக்கமான வாழ்த்தாக தோன்றுகிறதா? பிடியுங்கள் மஜீதை. 2010ன் கடைசி பதிவாக , அவர் எழுதிய ‘நல்லிணக்கம்’ வருகிறது. இணக்கம்தானே இன்று இல்லாதது? அதனால் இந்தப் பதிவு. கோவை சரளா மாதிரி இருக்கிற அஸ்மாவும் கோட்டான் மாதிரி இருக்கிற நானும் இத்தனை வருடங்கள் சந்தோஷமாக இருக்க என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்? ஒரு இணக்கம்தான்! புதுவருட வாழ்த்துகள்! – ஆபிதீன் ***
நல்லிணக்கம் – ஒரு நினைவோட்டம்
மஜீத்
ஹமீத்ஜாஃபர் நானாவின் ‘தோற்றம்’ படித்தபின் , திட்ட வந்த நிறையப்பேர் பாதிவழியில் திரும்பி(ந்தி)ப் போய்விட்டதாக நம்புவோம்.
ஆபிதீன் பல நல்ல(!) விஷயங்களை அடிக்கடி நினைவூட்டினாலும், ‘நல்லிணக்கம்’ பற்றிய அவரது அழுத்தமான பார்வையும், மீண்டும் மீண்டும் அதற்கு மறுவலுவேற்றி (Reinstate), அதை மீள்-நிறுவக் (Re-establish) காட்டும் அவரது அலாதியான பிடிவாதமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
இந்த நல்லிணக்கம், எனது பசுமரத்தில் இறங்கியது இப்படித்தான். 1975ல் நிகழ்ந்த ஒரு 5 நிமிட சந்திப்பின் விளைவு அது. குமரன் பற்றிப் படித்தவுடன் குன்று ஞாபகம். என் தந்தையின் சொந்த ஊர் குன்றக்குடி என்ற குன்னக்குடி. இரு பெயர்களும், ஒரு குன்றின் மேலுள்ள முருகன் கோவில் தவிர வேறொன்றும் இல்லாத, இந்தச் சிறிய கிராமத்துக்கு இன்றளவிலும் விளங்கி வருவது ஆச்சர்யமே. குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் குன்றக்குடி அடிகளார் பெயர்களை மாற்றிச் சொல்லிப்பார்த்தால் பொருந்தாது.
எப்போது இந்த ஊரைத்தாண்டிப் போனாலும் ஊரில் கடைசியில் ரோட்டோரம் உள்ள ஒரு சிறிய ‘மையத்தாங்கரை’யைத், திரும்பிப் பார்த்துச் செல்லும் சமயங்களில், என் தந்தை எனக்கு 7 வயது குழந்தை போலத் தெரிவார். சிலசமயங்களில் இறங்கி அருகில் சென்று தனது தாய்/தந்தை அடக்கம் செய்த இடத்தில் நின்று ஃபாத்திஹா ஓதுவார்.
அன்று மாலைநேரத்தில் குடும்பத்தோடு நாங்கள் சிவகங்கைக்கு ஒரு திருமணத்திற்குச் செல்லும்போது, பெய்து கொண்டிருந்த மழை, குன்றக்குடியை நெருங்கியதும் மிகவும் கனத்துப் பெய்தது. மெதுவாகப் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று வண்டியை ஓரங்கட்ட முயற்சித்த என் தந்தை, மிகமிக மெதுவாகச் செலுத்தி, முன்னால் ஒரு சைக்கிளில் ஒரு குடையுடன் சென்றுகொண்டிருந்த இருவர் அருகே சென்று வண்டியை நிறுத்தியபடி அவர்களைக் கூர்ந்து நோக்கினார். (அவர்கள் முகத்தில் சிறிது எரிச்சல், கொட்டும் மழையில் வண்டி மிக அருகில் வந்து நின்றதால்).
அடுத்த வினாடி எப்போதும் முன் ஸீட்டில் அமரும் என்னைப்பார்த்து, தம்பி நீ பின்ஸீட்டுக்குப் போ என்று சொன்னபடி, வெள்ளை வெளேர் கதருடையில் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சுமார் 60 வயதுடைய அந்தப் பெரியவரை, நான் திறந்த கதவினூடே பார்த்து, சிறிது உணர்ச்சிவயப்பட்டு, உரத்து, “முதலாளி! வாங்க உள்ளே” என்றார். அவர் முகத்தில் இன்னும் எரிச்சல் போகவில்லை. குழம்பியவராக, ‘நீங்க யாருன்னு தெரியலயே’ என்றவர், (இதற்கிடையில் நான் பின்னால் சென்றுவிட்டேன்) வண்டிக்குள் ஒரு நோட்டம் விட்டு, ஒரு முஸ்லிம் குடும்பம் இருப்பதை அறிந்து சிறிது ஆசுவாசமானர். “முதலாளி நீங்க முதல்ல உள்ள வாங்க முதலாளி, மழை ரொம்பப் பெய்யுதுல்ல? வாங்க உள்ளே, சொல்றேன்” என்று அழுத்தவும் குடையைக் கூடவந்தவரிடம் கொடுத்து, நீ வீட்டுக்கு வந்துருன்னு சொல்லி, வண்டிக்குள் வந்தமர்ந்து கதவைச் சாத்தினார்.
அவரிடம் என்னைத் தெரியலயா? என்று கேட்டுத் தன் பெயரோடு அறிமுகப்படுத்தினார் என் தந்தை. அவருக்குத் தெரியாதுபோகவே, வருஸை ராவுத்தர் மகன் என்றார். உடனே அவருக்குப் புரிந்து, அடடே, நீங்களா, நல்லாருக்கீங்களா? எந்த ஊர்ல இருக்கீங்க? எத்தன குழந்தைக? வண்டி எப்ப வாங்குனிய? என்று மூச்சுவிடாமல் நிறையக் கேள்விகள். என் தந்தை பதில்கள், நிறைய “முதலாளி” களோடு. (பின்னாலிருந்த என் 3 தம்பிகளில் பெரியவன், 17,18 என்று ‘முதலாளி’களை எண்ண ஆரம்பித்துவிட்டான்) ஒரு 5 நிமிடத்தில் அவரை இறக்கிவிடுமுன் நிறையப் பேசினார்கள். பின்னாலிருந்த தாயும் 5 பிள்ளைகளும் அவர்கள் பேசியதைவிட அதிகமாகக் குழம்பிக் கொண்டிருந்தோம்.
காரணம், நாங்கள் என் தந்தையாரின் மிகச்சிறிய வரலாறை நன்கறிவோம். அந்த ஊரில் நன்றாய் வாழ்ந்த என் பாட்டனார், எனது தந்தைக்கும் அவரது 2 தம்பிகளுக்கும் முறையே 7, 5, 2 வயதாகும்போது, காசநோயால் மவுத்தாகி விட்டார். அடுத்த 6 மாதங்களில் மூவரும் தாயையும் இழந்தனர்; அதே நோய்தான் காரணம். (இந்த Streptomycin ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எங்க அத்தாவும் அம்மாவும் மவுத்தாகிருக்க மாட்டாங்க. 7 வயது குழந்தையாகவே சொல்வார்) மிகக்குறைந்த காலத்திலேயே அனைத்தையும் இழந்து 3 பேரும் சிதறிவிட்டனர். என் தந்தை அப்போது அம்மாபட்டினத்திலும், பிறகு முத்துப்பேட்டையிலும் இருந்த அவரது அண்ணன் டாக்டர். எஸ். ஏ. கரீம் அவர்களிடம் அண்டி, கும்பகோணம் Dr. சீனிவாசன் நடத்திய ஹோமியோபதி கல்லூரியில் சான்றிதழ் வாங்கி, 17 வயதில் தன்னந்தனியாக வாழ்க்கையைத் துவக்கியவர். இடையில் நிகழ்ந்த பலவற்றையும் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த “முதலாளி”???? யார் இவர்?????????????? இதுதான் எங்கள் குழப்பம்.
அவரை சொன்ன இடத்தில் இறக்கி விட்டவுடன் கேட்டோம்.
சொன்னார்: “இவர் பெயர் ‘குன்னக்குடி முத்தையா’. காங்கிரஸ் கட்சியில் மாவட்ட அளவில் ஏதோ பதவியில் இருக்கிறார்.”
சரி, நீங்கள் ஏன் முதலாளிங்கிறீங்க? மீண்டும் சொன்னார்: திருப்பத்தூர் தாண்டி மதகுபட்டி வரை கதை நீண்டது.
அவருக்கு 9 வயது இருக்குமாம். பஞ்சமாம். ரேஷன் பொருள்களுக்கு மிகவும் மதிப்பாம். வசதியானவர்களும் ரேஷன்கடை பொருள்களை வாங்குவார்களாம். இவர் ஒரு ரேஷன் கடையில் சில காலம் வேலை பார்த்தாராம். (அப்ப ஒரு போலீஸ்காரர் எனக்கு சல்யுட்லாம் அடிப்பார் – சிரிப்பு) அந்த ரேஷன் கடையை நடத்தியவர் இவர்தான் என்றார்.
அந்தக் காலத்தில் மிகவும் வசதியாக இருந்தார்கள். மலேசியா போக்குவரத்து. ரொம்ப முற்போக்கான குடும்பம். (அப்பனும் மகனும் ஒண்ணா உக்காந்து சிகரெட் குடிப்பாங்க – சிரிப்பு). அவரை அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியாகச் சொன்னார்: “ஹரிஜன்” (இப்போது நாம் மரியாதையான வார்த்தையாக நினைக்கும் ‘தலித்’ என்பதை அப்போது இப்படிச் சொல்வது மரியாதை. காந்தியார் சொன்னதல்லவா?)
2
நான் அதற்குப் பிறகு 3 முறை திரு. குன்னக்குடி முத்தையா அவர்களைப் பார்த்திருக்கிறேன். பேசுவதற்கு ஆசை, ஆனால் மூன்று முறையும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. முதல்முறை ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அவரிடம் சென்று பேச வாய்ப்பில்லை. இரண்டாம் முறை காரைக்குடியில் நிறைய கதர் வேட்டிகளோடு நடந்து சென்று கொண்டிருந்தார். பேச முடியவில்லை. மூன்றாம் முறை பார்த்தது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது. எக்ஸாம் முடிந்ததும் டவுனுக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, ‘ஹாஸ்டல் ஸ்டாப்’பில் நின்றுகொண்டு அப்போது முதலாம் ஆண்டு படித்த எனது நண்பன் ‘பாரி’யுடன் பேசிக்கொண்டிருந்தார். பஸ் போய்க்கொண்டிருந்ததால் இப்போதும் பேசமுடியவில்லை.
(பாரி பற்றி: தமிழ் வகுப்புக்கு வெளியில் பேராசிரியர் பார்க்காதபடி நின்றுகொண்டு எனது இன்னொரு நண்பனிடம் சைகையில் பேசிய அவனை நாங்கள் மாணவன் என்றே நினைக்கவில்லை. அவன் சைஸ் அப்படி. உயரம், அகலம், முகச்சாயல், பெரிய கருப்புக்கண்ணாடி, பளபள உடை எல்லாம் அப்படியே அன்றைய சினிமா ஹீரோ சிவச்சந்திரன். யார்ரா இவர்? கேட்டால் நண்பன் சொன்னான்: சின்னப்பயல் ஃபர்ஸ்ட் இயர். பேர் பாரி)
நான்கு நாள் கழித்து, பாரியைப் பார்த்தபோது கேட்டேன்: டேய், அன்னிக்கு உன்னைப் பார்த்தேன். ஹாஸ்டல் பக்கத்துல குன்னக்குடி முத்தையா உன்கிட்ட பேசிக்கிட்டு நின்னார். உனக்கு அவரைத் தெரியுமா?
அவன்: தெரியும். பேரெல்லாம் சொல்றே? உனக்கும் அவரைத் தெரியுமா?
நான்: ம். அது பெரிய கதை. அவரை உனக்கு எப்டி தெரியும்?
அவன்: டேய் அவர் எங்கப்பாடா.
பி.கு.: இங்கே நான் சொல்லிருக்கிற ஆர்க்கெஸ்ட்ரால, முதமுதல்ல என்னய பாடசொன்ன பாட்டு: ‘திருத்தணிகை வாழும் முருகா’. நான் கொஞ்சம் தயங்கி, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடிட்டு அப்பறம் அதைப்பாடவா? என்றேன். ‘நீ எதுக்குக் கேக்குறேன்னு எனக்குத் தெரியும். இன்னொரு நாள் எனக்கு ரொம்பப் பிடித்த ‘அல்லாவை நாம் தொழுதால்’ நீ பாடலாம், இன்னிக்கு அது முடியாது’ என்றார், கிறித்தவரான குழுத்தலைவர் இருதயராஜ்.
நன்றி: ஆபிதீன்