சமீபத்தில் மூளைக்குள் நிஜப்பாதிப்பேற்படுத்திய, ‘ஈசன்’ படத்தில் வரும் “ஜில்லாவிட்டு” பாடலாக்கம், நேர்த்திக்கு ஒரு உதாரணம்.
முதல்தடவை பார்க்கும்போதே மோகன் ராஜனின் பாடல் வரிகளின் அர்த்தங்கள் உள்ளுக்குள் ஊடுருவுகின்றன.
அப்பனின் அறியாமை காட்டும் தனிமனித அவலம்.கடமை கழிக்கும் பொருந்தாத் திருமணம் காட்டும் சமூக அவலம்.சொக்கனின் அலட்சியத்தால் கடவுளுக்கும் ஒரு குட்டு.
இயலாக் கணவனையும் காக்கும் பெண்மையின் பொறுப்பும், அதனாலேயே அவளடையும் பெரும் இழப்பும், மீசைகளின் சுற்றல்களும் சமூகத் துரத்தல்கள்.
‘உசிரைவிட மானம் பெரிசுன்னு, புத்திக்குதான் தெரிஞ்சுச்சு;வயிறு எங்கே கேட்டுச்சு? அதனால எல்லாத்தையும் விக்கிறேன்’னு முடிக்கிறாள் இந்த 5 நிமிட நாயகி.
இறுதியில் எல்லோரும் சோகமானதை பார்த்துவிட்டு, தொழில் கெட்டுவிடுமோவெனப் பயந்து கடைசியாய் ஒரு ஆட்டம் போட்டு உசுப்பேற்றுவதிலும் ஒரு உள்சோகம்.
இந்த வரிகளுக்கு, ஜேம்ஸ் வசந்தனின் அருமையான இசையும் தேர்ந்தெடுத்த புதுப்(?) பாடகியான தஞ்சை செல்வியின் உயிரூட்டமான குரலும் நேர்த்திக்கும் நேர்த்தி.
எல்லாவற்றுக்கும் மேலாக, படமாக்கிய சசிகுமாரின் தேர்வான சுஜாதாவின் பங்களிப்பு ஒரு பிரமிப்பு. பாடலின் ஒவ்வொரு வினாடியிலும் அவரின் ஆக்கிரமிப்பு. சோகமும் கோபமும் முகத்தில் ஒருசேரப் பிரதிபலிக்கும் ஜாலம். நடக்கும் ஒவ்வொரு அடியிலும் விரக்தியின் வீச்சு. இவர் வேறு யாருமில்லையாம், தளபதியில் “காட்டுக்குயிலு மனசுக்குள்ள” யில் குதித்தாடும் ‘குதிரைவால்’தானாம். இப்போ இவரும் ஒரு டான்ஸ் மாஸ்டராம்.
நடன இயக்குநர் தினேஷ் மிகக்குறைந்தபட்ச அசைவுகள் மூலம் வெளுத்துக் கட்டிவிட்டார். அதிலும் சுஜாதாவுக்கான கடைசிக்கட்ட, மிகமிகமிகக் குறைந்தபட்ச அசைவுகளால் அவர் கொடுத்த உயிர் ‘பிரமாதம்’.
பாடல் துவக்கத்தில் “மூன்று கைலிகளும் முப்பது விரல்களும்” ஜாலங்கள் புரிவதும் அற்புதம்.
எனக்குள்ள வருத்தங்கள் இவைதான்:
- இப்பாடல் “கத்தாழை கண்ணாலே”க்குப் பிறகு தமிழ்நாட்டை கலக்கிய ஒரு ‘குத்துப்பாடல்’ என்று மட்டும் முத்திரை குத்தப்பட்டு, சில நாட்களில் மறக்கப்பட்டு விடும்.
- பாடகி தஞ்சை செல்வி இப்பாடலோடு மட்டுமோ அல்லது மேலும் சில பாடல்களோடோ காணாமல் போவார்
- மோகன் ராஜன் அதிர்ஷ்டத்தின் தயவை மட்டும் நம்பியிருக்க வேண்டும்
- சுஜாதாவை யாரும் நினைவில் கொள்வது உலக அதிசயங்களில் ஒன்றாகிவிடும்
மேற்கண்டவை பொய்யாகுமா?
சமீபத்தில் மிகப்பிடித்த பாடல்.. பாடலில் பங்குபெற்றவர்கள் பற்றிய குறிப்புகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பலப்பல..!
nice review and elabrt details. thanks for sharing
நன்றி சென்ஷி,
நன்றி சந்துரு