சீனாவும் இஸ்லாமும் -‍ மேலும் சில குறிப்புக்கள்

இருப்பின் உண்மையை
எதார்த்த எழுத்தில்
ரசிக்கத் தேடும்
சாதாரணன்  நான்

நண்பர் தாஜ், சில நாட்களுக்கு முன்னால் சீனாவில் இஸ்லாம்” என்ற அருமையான பதிவை ஆபிதீன் பக்கங்களில் வ‌ர‌லாற்றோடும்,ஜே.எம்.சாலி அவ‌ர்க‌ளின் ப‌ழைய‌ கட்டுரையோடும் த‌ந்திருந்தார்.

// 1970-களின் இறுதியில் கிட்டிய, மதங்களின் மீதான தடையினை நீக்கி, அரசு வழங்கிய சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் இன்றுவரை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அரசின் கண்காணிப்பிற்குள்தான் எல்லாம் என்பது, எத்தனைப் பெரிய சோகம்! // என்று அங்க‌லாய்த்து, வேத‌னையில் முடித்திருந்தார்.

அதைவிட‌ப் பெரிய‌ சோக‌ம், சீன‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இன்று ப‌ல‌ வ‌ழிகளில் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டும் அட‌க்கிவைக்க‌ப்படுகின்ற‌ன‌ர்.

2007ல் நான் சீனா சென்ற‌போது சீனாவின் வழ‌க்கமான‌ சிர‌ம‌மான மொழிப்பிர‌ச்சினை த‌விர்த்து, உண‌வுப்பிர‌ச்சினையும் த‌லைவிரித்து ஆடிய‌து.

ப‌ஞ்ச‌ம‌ல்ல‌ ஸ்வாமி, இது வேறு.

மொழிப்பிர‌ச்சினை ஒன்றும் பெரித‌ல்ல‌; ஒரு ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்பாள‌ரை ‘அம‌ர்த்தி’க்கொண்டால் போதும்
அவ‌ர் ஸ்க‌ர்ட் அணிந்து, அழ‌கான‌வ‌ராகவும் இருந்து, நாம் செல்லுமிடமெல்லா‌ம் கூடவே நடந்து வ‌ந்தால், மொழி தெரியாததே ந‌ம‌க்கு சாத‌க‌மான‌ அம்சம்தான்!

சீனப்பொண்ணு
சீனப்பொண்ணு

(என்னது ஃபோட்டோவா? அல்லாவே! அது நான் எடுக்கலைங்கனி, நான் ரொம்ப ஒச‌ரமா அழக்க்க்க்கா இருக்கேண்டு,,,,,, அஹ‌தான் எங்கிட்ட கெஞ்சி, பர்மிஷன் வாங்கிட்டு எடுத்தாஹ‌, இதைப்பாத்துட்டு இன்னும் ரெண்டு பேரும் அதே மாதிரி பர்மிஷன் கேட்டபோதும் என்னால மறுக்கமுடியலங்கனி)

ஆனால் வயிற்றுப்ப‌சி அப்படியல்லவே? பலவிடங்களில் உணவை ‘மெனு’க்க‌ளில் தேட‌ எங்கும் எதிலும் ப‌ன்றிக்க‌றி முத‌லிட‌ம் பிடித்திருந்த‌து. பிற‌கு ‘ஹ‌லால்’ சாப்பாடு ப‌ற்றி விசாரித்தால் கிடைத்த‌ ப‌தில்: ‘அப்ப‌டின்னா?’. அப்புற‌ம்தான் தெரிந்த‌து அதை ‘இஸ்லாமிக் ஃபுட்’ என்று கேட்க‌வேண்டுமாம். அப்ப‌டிக்கேட்டால் ம‌ட்டும்? முல்லா நஸிருத்தின் பிச்சைக்கார‌ரை ஓட்டுமேல‌ ஏற‌விட்டுப் பின் ஒன்றுமில்லை என்ற‌ க‌தைதான். குவாங்ஸூ விலும் ஷ்ஸென்ஸென் னிலும் பேயாக‌ அலைந்ததுதான் மிச்ச‌ம்.
துபாயில் கோழி பிடிக்குமா என்றால் பிடிக்காது, சிரியன் அல்லது லெபனிஸ் ஸ்டைல் கிரில் மட்டும் பிடிக்கும் என்று திமிர் பேசியது நினைவிலாடியது. வெறுத்தொதுக்கிய சிக்கன் இப்போது மஞ்சூரியன் ஸ்டைலில் சிரிக்கும்போது மிகவும் ஆவலாக இருந்தது. இரண்டு நாளைக்குமேலாக முட்டையும் ரொட்டியுமாக காய்ந்துகிடந்தேன். அவ்வப்போது முனிவர் மாதிரி பழங்களை மட்டும் நேசித்துக்கொண்டிருந்ததால் எச்சில் ஊர்வதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது? கோழிகள் அறுக்கப்பட்டனவா(ஹலால்) அல்லது நறுக்கப்பட்டனவா என்று தெரியாதாம்.

இப்படி ஒரு சங்கடம் இருக்கிறதென்பதை எனது முதலாளி சொல்லவில்லையே? சில வருடங்களுக்கு முன் சீனா வந்து சென்ற, ஒரு மாதிரியான சூஃபியான அவர் சொல்லியிருப்பாரே? குழம்பிய உடனேயே தெளிந்தேன், அவர் சென்றது த‌லைந‌க‌ரான பெய்ஜிங்! அங்கு ஒருவேளை இஸ்லாமிக் ஃபுட் கிடைத்திருக்கலாம்!!
பொருட்காட்சி அருகே ம‌க்டொனால்ட்ஸில் ஒரே கூட்ட‌ம். 50- 60 க‌வுன்ட்ட‌ர்க‌ளில் எங்கு நின்றாலும் ந‌ம‌க்கு முன்னால் ஒரு 50/ 60 பேர் நின்றார்க‌ள். அந்தக்கூட்ட‌த்தில் போய் கோழி ஹ‌லாலா ஹ‌ராமா என்றால் யார் புரிந்து ப‌தில் சொல்வ‌து? சீச்சீ இந்த‌க் கோழி ருசியாயிருக்காது என்று நரி மாதிரி சொல்லிக்கொண்டு வெளியில் வ‌ந்து நின்றால்….. ஆஹா!

ப‌க்திப் பிழ‌ம்பாக‌ ஒரு இந்திய முல்லா. ட்ரிம் செய்யாத‌ நீள‌த்தாடி, 30- 35 வயசு, த‌லையில் வெள்ளைத் தொப்பி, க‌ணுக்காலுக்குமேல் ம‌ட‌க்கிவிட‌ப்ப‌ட்ட பேண்ட். இவ‌ர் என்ன‌ சாப்பிடப்போகிறார் என‌ப்பார்த்தேன். நேராக‌ப் போய் 10 நிமிட‌த்தில் ஒரு “பிக்மேக்”கோடு வ‌ந்து ப‌டியில் அம‌ர்ந்து சாப்பிட‌ ஆர‌ம்பித்தார்.

அவ‌ரிட‌ம் ந‌ம் ச‌ந்தேக‌த்தைக் கேட்க‌லாமா? இப்போது வேண்டாம், அவ‌ர் சாப்பிட்டுமுடிக்க‌ட்டும்! தெரியாம‌ல் சாப்பிட்டால் ஹ‌லால்தானே? நாம் ஏன் அவ‌ர் பாவ‌த்தில் கைவைக்க‌ வேண்டும்?

அவ‌ர் முடித்த‌பிற‌கு, அருகில் போய், பாய், இந்த‌ ம‌க்டொனாட்ஸ் கோழி ஹ‌லால்தானா? என்றேன். அவ‌ர் உட‌னே, “நான் கேட்டுவிட்டேன், ஹ‌லால்தானாம். சும்மா சாப்பிடுங்க‌” என்றார். துபாயில்தான் வேலைபார்ப்ப‌தாக‌ச் சொன்னார்

நான் மீண்டும் ம‌க்டொனால்ட்ஸில் போய் ச‌ந்தேக‌ம் கேட்கவில்லை, த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ இடைவெளி (communication gap) யில் என‌க்கு எதிர்ம‌றை விடைகிடைத்தால்??? நான் ப‌ட்டினி என்ப‌துபோக‌, அந்த‌ முல்லாவையும் த‌ண்டிக்க‌ விரும்ப‌வில்லை
அடுத்த‌ 15 நிமிட‌த்தில் என் ‘ஃபேவ‌ரைட் பிக்மேக் சிக்கனை’ முடித்திருந்தேன், முல்லா சாட்சியாக.
ரொட்டி முட்டையிலேயே இன்னுமொரு நாள் ஓட்டியாயிற்று. அதற்கும் வந்தது வினை. அடுத்தநாள் காலைச்செய்திகளில் முதன்மையானது சீன முட்டைகளில் மெலமைன் விஷம் கலந்து இருக்கிறது என்பதுதான்.
அப்போதுதான் குழந்தை உணவில் அந்த விஷம் கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பாக இருந்தது. வந்த பிரட் ஆம்லெட்டை திருப்பியனுப்பிவிட்டு பக்கா முனிவராகவே இன்னுமிரண்டு நாள் ஓட்டினேன். (சரி முனிவர் வேண்டாம், வௌவால் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்). ஆனால் உணவகங்களில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!! முட்டைகள் வெந்துகொண்டுதானிருந்தன.
ஒன்றரை பில்லியன்பேரும் செத்தா போய்விட்டார்கள்? உனக்கு மட்டும் என்ன என்று ஆள்காட்டி விரலைத் திருப்பி நீட்டி வடிவேலு மாதிரி என்னையே கேட்கத் தோன்றியது. சரிதானே?

தோன்றாத இன்னொரு கேள்வி: பாம்பு தின்போர் ஊரில் போய் நடுத்துண்டு கேட்கவேண்டாம், கிடைப்பதையாவது உண்டு வரலாம்ல? இதுவும் ச‌ரிதானே? (கேள்வி தோன்றாத‌தைக் கேட்கிறேன்)
என்னத்தச் சொல்லி என்ன செய்ய? கேள்வி கேட்கும் நாத்திகன் அல்லது ஷைத்தான் என்று சொல்லப் போகிறீர்கள், ஹ்ம்ம்ம்..

இஸ்லாமிய‌ சாப்பாட்டுக்கே இந்த‌க்க‌தி, அங்கே உள்ள‌ இஸ்லாமிய‌ர்க‌ள் க‌தி??

வட‌இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுக்கும் கிழ‌க்குப்ப‌குதி முஸ்லிம்க‌ளுக்கும் சிங்க‌ள‌ அர‌சு செய்ததை, செய்வ‌தை அப்ப‌டியே சீன‌ அர‌சு செய்துவ‌ருகிற‌து, ஆண்டாண்டு கால‌மாக‌.

மாசேதுங் செய்த‌ க‌லாச்சார‌ப் புர‌ட்சியின்போது, முழுவ‌தும் முஸ்லிம்க‌ளாக‌ இருந்த ‘உக‌ர்’க‌ள் வாழ்ந்த‌, க்ஸின்ஜியாங் மாநில‌த்தில் ‘ஹான்சைனீஸ்’ என்ற‌ சீன பெரும்பான்மை இன‌த்த‌வ‌ர்கள் பெருவாரியாக‌க் குடியேற்ற‌ப்ப‌ட, துவேஷ‌மும் நிர‌ந்த‌ர‌மாக‌ அங்கு குடியேறிய‌து. க‌ம்யூனிஸ்ட் அட‌க்குமுறையால் அங்கு ந‌ட‌ப்ப‌து இன்றுவ‌ரை வெளியே தெரிவ‌தில்லை.

இந்த‌ 2010ம் ஆண்டில்கூட‌, ஜூலை தொட‌க்க‌த்தில் நிக‌ழ்ந்த‌ வ‌ன்முறை வெறியாட்ட‌ங்க‌ளில் கிட்ட‌த்த‌ட்ட‌ 200 பேர் ப‌லியான‌தாக அதிகார‌பூர்வ‌ த‌க‌வ‌ல். பெரும் எண்ணிக்கையில் இறந்தவர்கள் ‘ஹான்சைனீஸ்’ இன‌த்த‌வர்தான் என்று மிக‌வும் புத்திசாலித்த‌ன‌மாக‌ சீன‌ அர‌சு கூறிவிட்ட‌து. ஆயிரக்கணக்கான உகர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கதி என்னாகும் என்று சொல்லவேண்டியதில்லை.

இந்த‌க்க‌ல‌வ‌ர‌ செய்திகூட‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ரவ‌லாக‌ வெளியிட‌ப்ப‌ட‌வில்லை. ஊட‌க‌ங்க‌ளை விடுங்க‌ள், முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? ஐரோப்பாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ முஸ்லிம்களுக்கு அல்லது அவர்களின் நம்பிக்மைக்கு குந்தகமான ஒரு சிறிய செய்தி வந்தால் குதிகுதியென்று குதிக்கும் உல‌க‌ முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? அநீதி நடக்குமிடம் சீனா என்ப‌தால் அவ‌ர்க‌ள் ஏன் அமைதியாயுள்ள‌ன‌ர்?

சீன‌க்கொடியை தொலைக்காட்சிக் காமரா முன் எரித்து ந‌ட‌ன‌மாடும் பாகிஸ்தானிய‌ர்க‌ள், பெருந்திர‌ளாக‌ ஊர்வ‌ல‌ம்போய் சீனாவைக் கண்டித்துக் கோஷம்போடும் இந்தியர்கள் மற்றும் ப‌ங்காளிக‌ள், ஃப‌த்வா கொடுக்கும் ஈரானிய‌ர்க‌ள், சீன‌ப்பொருள்க‌ளை ப‌கிஷ்க‌ரிக்க‌க் கோரும் அரேபிய‌ர்க‌ள்………. ஒருவ‌ரையும் காண‌வில்லை!!இவ‌ர்க‌ளெல்லாம் பால‌ஸ்தீன‌த்தில் நட‌ப்ப‌தை ம‌ட்டும்தான் க‌வ‌னிப்பார்க‌ளா?

துருக்கி ம‌ட்டும் “சீனாவில் ந‌ட‌க்கும் ‘இன‌ப்ப‌டுகொலை’யை கண்டிப்பதாக” மெலிதாக‌க் கூறியபடி அட‌ங்கிவிட்ட‌து,
கார‌ண‌ம் சீன‌ உக‌ர்க‌ள் துருக்கி மொழிபேசும் துருக்கிவ‌ம்சாவ‌ழியின‌ர். என்ன‌ ஒரு நியாய‌ம்?

முழு இருட்ட‌டிப்பு மூல‌ம் சீன‌ முஸ்லிம்க‌ள் த‌னிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், ப‌ரிதாப‌க‌ர‌மாக‌.

This entry was posted in Uncategorized and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to சீனாவும் இஸ்லாமும் -‍ மேலும் சில குறிப்புக்கள்

  1. abedheen says:

    ஆரம்பிச்சாச்சா? கலக்குங்க சார்! அந்த ‘ஹஸ்ரத்’ ஜோக்கை இங்கேயே போடுங்கள். நான் தப்பித்தமாதிரியும் இருக்கும்.

  2. தாஜ் says:

    //இந்த‌க்க‌ல‌வ‌ர‌ செய்திகூட‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ரவ‌லாக‌ வெளியிட‌ப்ப‌ட‌வில்லை. ஊட‌க‌ங்க‌ளை விடுங்க‌ள், முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? ஐரோப்பாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ முஸ்லிம்களுக்கு அல்லது அவர்களின் நம்பிக்மைக்கு குந்தகமான ஒரு சிறிய செய்தி வந்தால் குதிகுதியென்று குதிக்கும் உல‌க‌ முஸ்லிம்க‌ள் என்ன‌ ஆனார்க‌ள்? அநீதி நடக்குமிடம் சீனா என்ப‌தால் அவ‌ர்க‌ள் ஏன் அமைதியாயுள்ள‌ன‌ர்?

    சீன‌க்கொடியை தொலைக்காட்சிக் காமரா முன் எரித்து ந‌ட‌ன‌மாடும் பாகிஸ்தானிய‌ர்க‌ள், பெருந்திர‌ளாக‌ ஊர்வ‌ல‌ம்போய் சீனாவைக் கண்டித்துக் கோஷம்போடும் இந்தியர்கள் மற்றும் ப‌ங்காளிக‌ள், ஃப‌த்வா கொடுக்கும் ஈரானிய‌ர்க‌ள், சீன‌ப்பொருள்க‌ளை ப‌கிஷ்க‌ரிக்க‌க் கோரும் அரேபிய‌ர்க‌ள்………. ஒருவ‌ரையும் காண‌வில்லை!!இவ‌ர்க‌ளெல்லாம் பால‌ஸ்தீன‌த்தில் நட‌ப்ப‌தை ம‌ட்டும்தான் க‌வ‌னிப்பார்க‌ளா?//

    அன்பு மஜீத்…
    வாசித்தேன்.
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் கோபம்….
    தொடரட்டும் கிண்டல்…
    தொடரட்டும் அறிவின் பணி.
    மீண்டும்
    வாழ்த்துகள்.
    – தாஜ்

  3. வாழ்த்துகள் மஜீத் பாய். கலக்குங்க!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s