மொளவுத்தண்ணி அல்லது ரசம் அல்லது புலியானம் அல்லது ரஜம்

இருப்பின் உண்மையை
எதார்த்த எழுத்தில்
ரசிக்கத் தேடும்
சாதாரணன்  நான்

நாகூரில் விளைந்த முத்துக்களில் ஒருவரான அப்துல் கையும் அவர்களின் ஒரு பதிவான  மொளவுத்தண்ணி மூக்கில் புரைஏற்றுகிறது.

யாராவது நினைத்தால் புரை ஏறுமாம். எனக்கு புரையேறியதால் நினைவு பின்னோக்கி செல்கிறது!!

அம்மாபட்டினம் கோட்டைப்பட்டினம் போன்ற இடங்களில் ரசம், புலியானம் என்றும் (அட புளியானம்தாங்க) விளங்கப்படுகிறது. அப்போதெல்லாம் ‘என்னானம் காச்சுனே’ன்னு கேட்கும் பக்கத்துவீட்டுப்பெண்ணிடம் ‘புலியானங்காச்சி அரச்சத‌ரச்சேன்’ என்று இன்னொரு பெண் சொல்வது வெகுசாதாரணமாம். சிலகாலம் அங்கே வாழ்ந்த எங்க அத்தா சொல்வாங்க. அரச்சதுன்னா துவயலாம். துவயல்னாலே பொட்டுக்கடலை துவயல்தானாம். (ரசம் வச்சு பொட்டுக்கடலை துவயல் அரச்சேன்)

சரி இப்ப துவயலுக்கும் விளக்கம் சொல்லிர்றேன்: கெட்டிச்சட்னின்னு வச்சுக்குங்களேன்!

அப்புறம் இந்த சொரி ஆணம்: பேராவூரணிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் குருவிக்கரம்பை அருகே எல்லா ஊரும் காடு என்றுதான் முடியும். ஒட்டங்காடு,கரம்பக்காடு(2), பத்துக்காடு, நரியன்காடு என்று பட்டியல் வெகுநீளமானது.

இந்த ஊர்களில் உள்ள முஸ்லிம்களின் விருந்துகளில் ‘ரசம்’ என்ற ஒரு வஸ்து உண்டு. அது ரசமாகவும் இருக்காது, பருப்பானமாகவும் இருக்காது. வாழைக்காய் வேறு கிடக்கும் அதில்.  வாழக்கா ரசம் என்றும் உள்ளூர்க்காரர்கள் சொல்வார்கள்.  லேசாப் புளிக்கும். அது நாகூர்  சொரிஆணமாகத்தான் இருக்கவேண்டும்.

இந்த ஊர்களுக்கும் நான் மணமுடித்த ஊர் ‘பீர்க்கலைக்காடு’க்கும் நிறைய திருமணத் தொடர்புகள் உண்டு
பீர்க்கலைக்காடு. இதுவே கிராமம்; இதற்குப் பக்கத்தில் இருக்கும், இன்றும்கூட ஒரு பெட்டிக்கடை இல்லாத களத்தூர் என்னும் குக்கிராமத்தில் பீர்முஹம்மது ஒலி அடங்கியிருக்கிறார்கள்;  (இங்க நடக்கும் ‘ஹந்திரி’ பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்) இது ஊர் பெயர்க்காரணம். அதுசரி. ஆனால் எங்கள் பக்கம் ஊர்ப்பெயர்கள் வயல் அல்லது குடி என்றுதான் முடியும். காடு எங்கிருந்து ஒட்டிக்கொண்டது என்று இப்போது தெரிகிறதா?

அங்கு விருந்துகள் நடக்கும்போது பந்தியில் எங்கள் பகுதி (காரைக்குடி) ஆட்கள் அதை சாம்பார் என்று கேட்க, பரிமாறுபவர் சாம்பாரெல்லாம் இல்லை என்று நகன்றுவிட, அட அதுதான்யா நீ வச்சுருக்கிற வாளியில் உள்ளது என்று மறுபடி அடம்பிடிக்க‌,  இது ரசம்ல, சாம்பார்னு கேட்டா?ன்னு சொல்லி ஊற்றிவிட்டு, அதில் கிடக்கும் வாழைக்காய் துண்டு ஒன்றையும் போட, யோவ் ரசம்னு சொன்னீல்ல? வாழக்கா எப்டிய்யா வந்துச்சுன்னு வாக்குவாதம் களைகட்டும்.

விருந்துக்கு சென்ற ஒரு விகடகவி, சரி விடுங்க, இது ரசம் இல்ல ரஜம்னு (razzam) வச்சுக்குங்கன்னு ஜோக் அடிச்சு நிலமைய சமாளிக்கும்!!

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment